கடந்த “தாயகம்” இதழில் Arlene Gottfried இற்கு அஞ்சலி செய்யும் வேளையில் அனைத்து நாடுகளிலும் கலைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, மடிகின்றன, பாதுகாக்கப்படுகின்றன எனும் எண்ணம் எனக்குள் தோன்றியது. விளம்பரப்படுத்தப்படாத வடிவங்களும் எமது காலங்களில் வாழ்ந்தன.
இலங்கையினது வடிவக் கலை மீது சொல்லுதல் முக்கியமானது. நிறையப் பெயர்கள் உள்ளன, அவைகளில் விடுபடும் பெயர்களுக்கு என்னை மன்னிக்கவும். நிச்சயமாக நான் ஓர் வடிவ ஆய்வாளன் அல்லன். அவ்வப்போது சில குறிப்புகளை “தாயகம்” இதழுக்கு வளங்குபவனே.
யாழ்ப்பாணம் இன்று முகப் புத்தகத்திலே கொடூரமான நகராகப் பார்க்கப்படுவது எழுதுபவர்களினது மூளைகளுக்குள் வறுமைப் பூச்சிகள் உள்ளன என்பதைக் காட்டும். அனைத்து நகர்களிலும் நல்லவர்களும் உள்ளனர், நாஸிகளும் உள்ளனர். எனது வாழ்வின் 23 வருடங்களை நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தேன், இந்த நகர்தான் எனக்கு முதல் தடவையாகக் கலையைக் காட்டியது.“மகாகவி”யின் “குறும்பா”வின் கவிதை நயத்தில் விழுந்த என்னைச் சௌ வினது ஓவியங்கள் பிரமிக்க வைத்தன. இவரது ஓவியத்திறன் மேலானது. இவரது வடிவங்கள் எமது விழிகளை வாழவைப்பான. பல ஆண்டுகளாக சௌ வைத் தேடி வருகின்றேன். இணையத்தில் இவர் மீதான ஒரு செய்தியும் இல்லை. சில படைப்புக் “காவலர்களின்” உதவியைக் கேட்டேன். அவர்களிடம் சௌ மீதான கவனிப்பு இல்லை. (எனது குறிப்பை வாசிப்போர் அவரைத் தேடுதல் நல்லது நாம் வடிவங்கள் மீது மீண்டும் பேச). ஆனால் உருத்திரமூர்த்தியின் “குறும்பா”வை மேலும் நயமாக்குவது சௌ வினது வடிவங்களே.
“சிரித்திரன்” சுந்தர் (சிவஞானசுந்தரம்) மீது பேசாமல் இருப்பது அபத்தம். யாழ்ப்பாண வடிவங்களில் இந்த நகரின் கேலி வாழ்வுகளை நக்கல் செய்தவர். இந்தியாவின் Blitz இதழில்தான் இவரது முதல் ஓவியம் வந்தது. “யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது.” எனச் சொல்கின்றது விக்கிப்பீடியா. தமிழின் போற்றப்படும் கேலி வடிவங்களின் குருவாக இவர் இன்றும் கருதப்படுபவர்.சௌ மீது எழுதிய வேளையில் சௌந்தர் மீது எனது நினைப்புகள் வந்தன. இவர் நிச்சயமாகத் தமிழ் ரசிப்புக்குப் புதியவர் அல்லர். இவரது தூரிகை மிகவும் ஆழமானது. அனைத்து வரிகளும் கவிதைகளது வரிகளைப் போல. இவரது வரைபுகளை முகப்புத்தகத்தில் நிறையக் காணலாம். இசையின் நுணுக்கங்கங்களில் தேர்வு கொண்டவர். டென்மார்க்கில் வாழ்ந்து, அங்கு ஓவியம் படித்து, இப்போது லண்டனில் வாழுகின்றார். “தமிழ்த்திரை இசையில் ராகங்கள்” என இவர் எழுதிய குறிப்புகள் தமிழ்நாட்டு இசை மேதைகளின் பாராட்டுக்கு உரியது. எஸ்.பொ வினது “கீதை நிழலில்”, மித்ரா வெளியீட்டில் இவரது வடிவங்கள் ஆதிமூலம், ட்ரொஸ்கி மருது வடிவங்களோடு வந்துள்ளன.
வடிவங்கள் மீது பேசும்போது மேலைத்துவ வடிவங்களின் அடிமைகளாக இருத்தலை வெறுத்தல் மிகவும் முக்கியமானது. மேலைத்துவ வடிவங்கள் யாவும் போலியானவைகள் அல்ல, நிச்சயமாக எமது கிராமத்து வடிவங்களும் நூறு வீதம் தியானிக்கப்படவேண்டியன. விசரனாக எம்மால் கவனிக்கப்படுபவன் வீதியில் இருந்து மணனில் கீறுகின்றான். இவனது கீறல்கள் நிச்சயமாக வடிவங்களே. வணிகத்துவ காட்சியாக வடிவங்கள் வருமாயின் நிச்சயமாக இவைகள் வடிவங்கள் அல்ல, பொருள்களே. உலகின் மீடியாக்களில் பல வடிவங்கள் மீது சொல்லும் கருத்துகளில் நேர்மை உள்ளதா? இந்த மீடியாக்கள் பழைய வடிவங்களைத் தியானிப்பனவே. இந்தத் தியானிப்பு வடிவங்கள் முதலாளித்துவ அரசியக்குத் தொல்லை தராதன. நிறைய அரசுகள் தமக்கு எதிரான வடிவங்களைத் தடை செய்கின்றன. இந்த வடிவங்களைத் தருவோர் பலர் கொல்லப்படுமுள்ளனர் .
லண்டனில் வாழும் றஷ்மியின் கோடுகள் வடிவத் தியானத்துக்கு உள்ளாக்கப்படுவது. சௌந்தர் போல இவர் நிறையப் படைப்பாளிகளின் முகங்களைச் சித்திரமாகியுள்ளார். பல வெளியீடுகளில் இவரது ஓவியச் செழுமையைக் காணலாம். இலங்கையின் வடிவாக்கர்களில் இவரும் கவனிக்கப்படவேண்டியவர். “சமகால ஈழக்கவிதைகளில் தனித்துமிக்க கவிஞர் றஷ்மி . நவீன ஓவியரும், வடிவமைப்பாளருமான இவர் தனது முகநூலில் எழுத்தாளர்களை அற்புமான சித்திரங்களாக வரைந்து வெளியிட்டு வருகிறார். இன்று எனது சித்திரம் ஒன்றை அனுப்பியிருந்தார். சிறப்பாக இருந்தது. ‘ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு’ , ‘ஈ தனது பெயரை மறந்து போனது’, ‘ஈதேனின் பாம்புகள்’ என்ற அவரது கவிதைத்தொகுப்புகள் முக்கியமானவை.” எனக் குறிப்பிடுகின்றார் தமிழ்நாட்டின் எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன்.
கருணாவின்சென்ட், கனடாவில் வாழும் கனதியான ஓவியர். வடிவத்துவத்துள் புது வீச்சுகளைக் கொடுக்கும் பலம் இவருக்கு உள்ளது. புகலிட நாட்டின் சிறப்பான ஓவியரான கே.கே.ராஜா போல இவரும் அ.மார்க்கின் மாணவர். கருணாவின் ஓவியங்களினது கனதியாக நான் கருதுவது இவர் தனது வடிவங்களுள் சில ஈட்டிகளை மறைத்திருப்பதுதான்.
புகலிடத்தில் நீண்டகாலம் கலை நிலத்திலும் அரசியல் நிலத்திலும் தனது காத்திரமான பங்கைச் செலுத்திவரும் தமயந்தி என அறியப்படும் தமயந்தி சிமோன் ஓர் செழுமையான படப்பிடிப்பாளர் மட்டுமல்ல, இவர் கலைகளைக் காப்பவருமாவார். இவரால் தரப்பட்ட “ஏகலைவன்”, தென் மோடிக் கூத்து எனும் நூல் கூத்துக் கலையின் காப்பினது விதிகளை முத்தமிடுவது. ஆம்! இவர் பலராலும் ரசிக்கப்படுகின்ற படைப்பாளியாவார். இவரும், இவரது துணைவியுமான புகலிட பெண்ணிலைவாதக் கவிஞை பானுபாரதியும் சில காலங்களாக வெளியீடு செய்த “உயிர்மெய்” இதழ் கவனிக்கப்படவேண்டிய புகலிடத் தொகுப்பாகும். அண்மையில் “ஏழு கடல் கன்னிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். தமயந்தியிடம் நிறையச் சேமிப்புகள் உள்ளன. ஆம்! இவரது படச் சேகரிப்புகள். தமிழ்ப் படைப்பாளிகளது உருவங்கள் இவரதும் கே.கே.ராஜாவினதும் கமெராவுக்களுள் உயிர் வாழ்கின்றன. நோர்வே பத்திரிகைகள் தமயந்தியின் படங்களை பிரசுரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள ஓவியர்கள் மீது பேசாமல் இலங்கையின் வடிவங்கள் மீது பேச முடியாது. இவர்களுள் நிறைய வடிவத்துவர்கள் வாழ்கின்றார்கள். ஆனால் இணையத்துள் குறையத் தகவல்களே கிடைக்கின்றன. இலங்கைக் கலை வடிவத்துவம் நிச்சயமாக இரு இனக் கலைகளின் சேர்ப்பே. நான் கொழும்பில் சில காலம் வாழ்ந்தேன், ஆனால் சிங்கள வடிவங்களைப் பார்ப்பது ஓர் தியானிப்பாகவே இருந்தது.L. T. P. Manjusri (Sri Lankan, 1902–1982) இனதும் prasanna weerakkody இனது வடிவுகளும், இவர்களது கலைத்துவ நோக்கில் மிகவும் ஆழமான தேடல்கள் இருக்கும் என விளக்கின. இந்த வடிவுகள் சிங்களக் கலைத்துவத்தை நாம் அறிவது அவசியம் என விளக்கும். ஆனந்த குமாரசாமி சிங்களக் கலைகளைக் காட்டியபோதும் எமது தேசத்தில் நடந்த மனித எதிர்ப்புப் போர் இரு இனங்களுக்குள்ளும் ஓர் இடைவெளியைத் தூண்டியது. இந்த இடைவெளி நிச்சயமாகக் கலையவேண்டும்.
வடிவங்கள் மீதான சில குறிப்புகள்தாம் இவை. பல வடிவங்களோடு அமைவதால் இந்தக் குறிப்புகளை நீளமாக எழுத முடியவில்லை. எனது குறிப்புகளின் இலக்கு வடிவங்கள் மனித வாழ்வைச் சூழ்ந்து இருப்பன என்பதாகும். பிரபலப்படுத்திய வடிவுகளைவிட மேலானது தற்போது பிறக்கும் வடிவுகள். பிற குறிப்புகளில் மீண்டும் வடிவுகள் தியானிக்கப்படும்.
You must be logged in to post a comment Login