இந்த உலக சினிமாங்கிறாங்களே, அப்படி என்ன விசேஷமாய் இருக்குன்னு பார்த்திடலாமேன்னு திடீரென்னு ஒரு எண்ணம் தோணிச்சு.
இவ்வளவு நாளும் புத்திஜீவிகள் தான் உலக சினிமா பற்றி பேசிக்கிட்டு இருங்கிறாங்களேன்னு பார்த்தா, இப்போ தலைவர், தளபதி, தல வால்களும் உலக சினிமா பற்றி பேச ஆரம்பிச்சிட்டாங்க.
அதாவது தங்களோட பாலாபிஷேகப் பெருமாளின் படங்கள் உலக சினிமா ரேஞ்சுக்கு போயிட்டுதுன்னு, 'உங்க லெவலே வேற, தலைவா!'ன்னு முகப்புத்தகத்தில் பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க.
இதையெல்லாம் கண்டு வாழ்க்கையே வெறுத்துப் போய்த் தான் ஆஸ்கார் உலக நாயகன் தமிழ்நாட்டு அரசியல் பற்றி அழகு தமிழில் ட்வீட்டிருக்கிறாரு, வீட்டோட மாப்பிளையாய்!
கியூறியஸ் ஒரு படத்தை முழுமையாக பொறுமையாக உட்கார்ந்து பார்த்து நிறையக் காலம். அதிலும் தமிழ்ப் படங்கள் பார்த்து எக்கச்சக்கமான காலம்!
எங்காவது உறவினர், நண்பர்கள் வீட்டுக்குப் போனால், அங்கே நித்தியமாய் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்களை முகம் முறிக்க அஞ்சி (வீட்டுக்காரியின் திட்டுகளுக்கும் பயந்து!) பார்த்து பொறுமை காப்பதுண்டு.
சில புலன் பெயர்ந்த உலகத் தமிழ் சினிமாக்களையும் பொறுமை காத்து பார்த்ததுண்டு.
மற்றும்படி கத்தி முதல் கபாலி வரைக்கும் பார்த்ததேயில்லை.
ஒரு நாள் தமிழ்க்கடைக்கு போனால், சமூக உதவிப் பணம் எடுத்துக் கொண்டு குறைந்தபட்சத்திற்கும் குறைவான சம்பளத்தில் வேலை செய்து கொண்டு சாமான் அடுக்கிக் கொண்டிருந்தவர், அடிக்கடி 'நெருப்படா!' என்று தன் பாட்டிலேயே சொல்லிக் கொண்டிருந்த போது, தமிழ்ப்படமும் வேண்டாம், சித்த சுவாதீனத்தோடு இருந்தாலேயே போதும் என்ற எண்ணம் வந்தது.
அவரிடம் போய் 'வந்திட்டேன்னு சொல்லு, உடன் மீன் இரண்டு இறாத்தல் வெட்டி வைக்கச் சொல்லு!'ன்னு வசனம் பேசவா முடியும்?
இதனால் ரசனை பிற மொழிப் படங்களுடனேயே நீண்ட காலம் இருந்தது.
இந்த சினிமாக்களுக்கு என்றே விசேட தொலைக்காட்சி சனல்கள் இருக்கின்றன. போதாக்குறைக்கு மற்றும் சில சனல்களும் உலக சினிமாக்களை ஒளிபரப்பும். அதற்கான ரசிகர் கூட்டம் குறைவு என்பதால் நள்ளிரவு கடந்து ஒளிபரப்பாகும் இந்தப் படங்களை தனியே உட்கார்ந்து பார்த்துக் கொண்டு, சத்தமாய் சிரித்துக் கொள்ளும் போதுகளில் வீட்டுக்காரி அபிதகுஜாம்பாள் தன் தூக்கம் கலைவது பற்றி திட்டிக் கொண்டிருப்பாள்.
இதெல்லாம் போதாதென்று ஒரு காலத்தில் இந்தப் படங்களை எல்லாம் அரங்குகளைத் தேடிப் பிடித்துப் பார்த்து, எழுதியதும் உண்டு.
பின்னாளில் மனஞ் சஞ்சலங்களால் இதற்கான ஆர்வம் குறைந்து போய், தமிழ் மொழியில் சொல்வதாயின் 'துண்டாகவே' அந்த ஆர்வம் அற்றுப் போயிருந்தது.
வீட்டு தொலைக்காட்சியே தேர்தல் நாள்கள் தவிர்ந்து வேறு நாட்களில் உயிர் பெறாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறது.
ஏனோ தெரியவில்லை, திடீரென்று ஒரு நாள் இப்படியான படங்களை திரும்பவும் தேடிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
ஒரு நல்ல படமாக பெரிதும் பேசப்படுகின்ற ஒரு படத்தை தேடியாயிற்று.
ஈரானியப் படம்.
காதலர் தினம்.
சிங்கம் சிங்கிளாகப் புறப்பட்டது!
(பெண் சிங்கம் குகைக்குள்ளேயே செல்போனில் சிறை சென்ற சிங்கம் பற்றி அப்டேட் பண்ணிக் கொண்டிருந்தது!)
இந்தப் படங்கள் எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடப்படுவதில்லை. நகரின் மையப்பகுதியில் சில அரங்குகள் மட்டுமே இந்த வகையான படங்களுக்கானவை. அதுவும் ரொறன்ரோ திரைப்பட விழா நடக்கும் இடத்தைச் சூழவுள்ள பகுதிகளில்!
இருந்தாலும் இந்தப் படம் நகரின் நடுப்பகுதியில் உள்ள அரங்கு ஒன்றில்.
காரணம், அதற்கு அருகில் தான் அதிகளவிலான ஈரானியர்கள் இருக்கிறார்கள்.
தவறாமல் அன்றும் அரங்குக்குள் ஈரானியர்களே நிறைந்திருந்தார்கள்.
படம் ஆரம்பம் ஆகி இருள் சூழ்ந்ததும், மனைவியோடு வந்த ஈரானியர் ஒருவர் சத்தமாக பேசியபடியே இடம் தேட, போதாக் காலத்திற்கு கியூறியஸின் பக்கத்தில் மனைவியோடு இருந்த ஈரானியர் ஈரானிய மொழியில் ஏதோ சொல்ல, பெரிய வாக்குவாதம்.
அவர்களும் காதலர் தினத்திற்கு மனைவிமாரைக் கூட்டி வந்திருப்பார்கள் போல இருக்கிறது,
இதென்னடா, அனாவசியத் தலையிடி? கைகலப்பில் போய் சாட்சியமாக வேண்டி வரப் போகிறதோ? என்ற பயம் வேறு.
வழமையில் தமிழ்ப் பட பாணியில் பிறமொழிப் படங்களில் சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், அரங்கினுள்ளே சண்டைக் காட்சி நடந்தாலும், நமக்கு விசில் அடிக்கத் தெரியாது.
அவர்களின் உரையாடல்களுக்கு சப் டைட்டில்களும் யாரும் போடவில்லை. எனவே என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும் புரியவில்லை.
ஒருவாறாக பிந்தி வந்தவர் இடத்தை தேடிக் கொண்டார்.
'வெளியில வா, கவனிக்கிறன்' என்பது போல, எதையோ சொல்லி விட்டுப் போனார்.
பக்கத்திலிருந்தவரும், மனைவிக்கு விலாசம் காட்ட, 'ஏன் இப்ப வா, உனக்கு காட்டிறன் வேலை' என்று எதையோ சொன்னார்.
சப் டைட்டில் இல்லாவிட்டாலும், மனைவிமாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு மோதிக் கொள்ளும் ஆண்கள் இதை விட வேறு என்ன தான் பேசுவார்கள்?
படத்தில் மொழி பெயர்ப்புகளில் உள்ள வழமையான கோளாறு காரணமாக, சில ஜோக்குகளுக்கு சுற்றி வர இருந்த ஈரானியர்கள் சிரித்துக் கொண்டார்கள்.
றீகல் தியேட்டரில் தங்களுக்கும் ஆங்கிலப்படம் விளங்கிய மாதிரி சிரிப்பவர்கள் போல, நாமும் சிரிக்கலாமா என்ற எண்ணம் வேறு வந்தது.
பிரேக்கிங் நியூஸ், இத்யாதிகளை எல்லாம் மறக்க வைத்து சுமார் ஒண்ணரை மணி நேரத்திற்கு மேலாக ஈர்த்து வைத்த படம்!
ஒன்று மட்டும் புரிந்தது.
உலக சினிமா...
தங்களுடைய ஹீரோக்களின் படங்களை மட்டுமே பார்த்து விட்டு புல்லரிக்கின்ற கிணற்றுத் தவளைகளின் உலகமும் அல்ல.
தங்களை புத்திஜீவிகளாக காட்டுவதற்காக புரியாத மொழியில் பார்த்த படத்தைப் பற்றி, தமிழர்களுக்கு புரியாத தமிழில் எழுதும் மேதாவிகளின் உலகமும் அல்ல.
அது இன்னொரு உலகம்.
You must be logged in to post a comment Login