Recent Comments

    முடிவின் தொடக்கம்

    endக.கலாமோகன்

    ஓர் பெரிய வீதியுள் நான் இதனுள் நான் கலைக் கோலங்களைத் தேடவில்லை பிக்காஸோவையும் நான் விரும்பவில்லை அவனது கீறல்கள் லாபப் பெட்டிகளுள் விழித்தபடி ரிம்போவின் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து பாரிஸ் புறாக்களைத் தேடியபடி... பழைய விளம்பரங்கள் கோப்பியைக் கறுப்பாகக் காட்டியபடி சுவர்களில் இருக்கவில்லை புதிதுகள் ஓர் பெண் தொடை காட்டியபடி அது அப்பிள் விளம்பரம் நிறைய விளம்பரங்கள் தொடைகளைக் காட்டி… போன்கள் ஆடைகள், மெஷின்கள் கட்டில்கள் சோப்புகள் மருந்துகள் ஆம்! தொடைகளைக் காட்டி தொடைகள் விளம்பரத்தைக் காட்டாமல் சில பெண்களும் பல ஆண்களும் சிரித்தபடி, கோவணங்களின் விளம்பரமாக அது இருந்தது…. கோவணங்களும், தொடைகளும் பிளாஸ்ட்டிக் லிங்கங்களும் பிளாஸ்ட்டிக் யோனிகளும் இல்லாமல் வாழ்வு சமாதானம் அடைய முடியாது என்பது உடல் கொள்கையா? இது உடலின் மொழிகளாகவும் இருக்கும். நான் நடந்து கொண்டிருந்த பெரிய வீதிகளில் பெரியதும் சிறியதுமான நாய்கள் இருந்தன பல பெண் நாய்களோடு விளையாடிய பெண் நாய்கள் ஆண் நாய்களைத் தேடின பல ஆண் நாய்களோடு விளையாடிய ஆண் நாய்கள் பெண் நாய்களைத் தேடின பல நாய்கள் மனிதர்களையும் தேடின சில மனிதர்கள் மரங்களையும் தேடினர் பல நாய்கள் தனிமையில் சாய்ந்து வெறுப்பு உப்பல்களை வீதியில் விட்டன இருத்தலின் கிடப்புகளில் கிடப்புகள் எனும் என் தத்துவத்தை முத்தமிட்டு நான் நடந்தேன் கிடப்பு இது வாழ்வு கிடப்பு ஓர் மாயக் கிடங்கு புத்தகம் ஒன்றைக் காட்டினார் என்னைத் தன் நண்பரென்றவர் அவரின் முகம் முன் அழும் ஓர் சிறுமி நான் அவளின் முன் அவர் தனது புத்தகத்தை என் முன் விரித்தபடி எனது துப்பல்களால் எரிக்கின்றேன் அவரது புத்தகத்தை அனைத்து விளம்பரங்களும் தடித்துப்போன கோவணங்களாகவும் முலைகளை மறைவாகக் காட்டுதலில் முந்தியும் அட! என்ன முந்தியும் பிந்தியும் நாங்கள் வாழ்வதற்காக அல்ல வாங்குவதற்காக….. இந்த வாங்குதல் மேடைகளில் நடக்கும் எமது வாழ்வின் பயணங்கள் இந்த மேடைகளில் அசைவன மீதிகள் அசையாதிருப்பன எனக்குப் பசி… நிறையக் கடைகளின் முன் நான் சாப்பாட்டுக் கடைகள்…. அவைகளின் முன் நின்றால் எனது பசி அழியுமா? தின்பவர்களை முன் நின்று பார்க்கின்றேன் பின் திரும்பியது எனது உடல் ஓர் பெரிய குப்பைப் பெட்டிக்குள் பல பாண்களின் சிறிய தலைகள் எனது விழிகள் முன் பட்டன இந்தப் பாண்களே எனது கடவுள்களாக குப்பையுள் சாகப்போன பாண் தலைகளை எடுத்தேன்… ஒரு தலை எனக்குள்… இரண்டாவது தலையும் எனக்குள் பின் ஓர் கிழவி வந்து என் தலையைப் பார்த்தது அவளும் ஓர் பாண் தலையைக் கொடுத்தேன் மீண்டும் அவள் எனது தலையைப் பார்த்தாள் மீண்டும் ஓர் தலையை நீட்டினேன் அவள் தலை திரும்பியது நான் மீண்டும் பல பாண் தலைகளை உண்ட வேளையில் அவள் தனது உதட்டை என் உதட்டில் தேய்த்தாள்.. முடிவின் தொடக்கம் இதுவா என நான் என்னிடம் கேட்டேன். Save Save

    Postad



    You must be logged in to post a comment Login