வீட்டுக்குள் இருந்த பூக்கன்றுகளையும் மூலிகைகளையும் கோடையில் வெளியே வைத்து தெருவில் போவோருக்கு அழகு காட்டியிருப்பீர்கள். குளிரிலும் சீன் காட்டப் புறப்பட்டால், கறிவேப்பிலைகளும் துளசிகளும் முதல் நாள் உறைகுளிரில் உயிரை விடக் கூடும். எனவே திரும்பவும் அவற்றை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து குளிரிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கும் காலம் நெருங்கி விட்டது.
அவற்றை இப்போதே உள்ளே கொண்டு வரலாம். அதற்காக சும்மா அப்படியே உள்ளே கொண்டு வந்தால், உடம்பெல்லாம் ஊர்ந்து சில்மிசம் பண்ணும் கண் காணா உயிரினங்களும், நத்தைகளும் அவற்றுடன் உள்ளே வந்து தஞ்சம் கோரலாம்.
எனவே, அவற்றைக் கொண்டு வருவதற்கு முன்னால் தாவரங்களுக்குச் சிகையலங்காரம் செய்யுங்கள். அதாவது இறந்து போன இலைகள், கிளைகளை கூரான கத்திகளால் வெட்டி அகற்றுங்கள். பின்னர் பெரிய வாளி ஒன்றில் தண்ணீர் நிறைத்து, அவற்றை முழுமையாக மூழ்கடியுங்கள். அவற்றில் தொங்கிக் கொண்ட பூச்சிகள் எல்லாம் மூச்சுப் பிடிக்க முடியாமல் திணறி மேலே வரும். மண்ணில் நீர் நிறையும் போது வாயுக்குமிழ்கள் வெளியே வரும். முழுமையாக வாயுக் குமிழ்கள் வருவது நின்ற பின்னால் வெளியே தூக்கி வைத்து, நீரை வடிய விடுங்கள். வடிந்த பின்னால், பெரும் பெட்டிக் கடைகளில் விற்பனையாகும் கிருமி கொல்லும் சவர்க்காரக் கரைசலை, (Insecticide Soap) முழுமையான தாவரத்திலும், குறிப்பாக இலைகளின் அடிப்புறமும் விசிறுங்கள்.
இதன் பின்னால் தான் உங்கள் கன்றுகளுக்கு கிரகப்பிரவேசம் செய்யுங்கள்.
You must be logged in to post a comment Login