லெப்டினன்ட் கேணல்களின் ஆங்கிலம்
சில நேரங்களில் எங்காவது கண்டு கேட்டறியா ஆங்கிலச் சொற்களைக் கண்டிருப்பீர்கள். ஆனால் அதை எப்படி உச்சரிப்பது என்று தெரியாமல் இருக்கும். எழுத்திலிருப்பதை விசயம் தெரியாமல் வேறு மாதிரி உச்சரித்தால் கருத்து வேறு மாதிரிப் போகவும் கூடும். அதிலும் ஒரே சொல்லை, லெப்டினன்ட் கேணல், பிரிட்டிஷ்காரன் ஒரு மாதிரியும் அமெரிக்காக்காரன் வேறு மாதிரியும் உச்சரிக்கும் விசயம் தெரிந்தால், 'உந்தத் தலையிடியால தான் நான் இங்கிலிஷ் படிக்காமல் விட்டனான். கனடாவில தமிழ் ஆக்கள் எலக்ஷன் கேக்கிறதுக்கே இங்கிலிஷ் தேவையில்லை, வெல்பெயர் எடுக்கிற எனக்கு என்னத்துக்கு எனக்கு இங்கிலிஷ்?' என்று நீங்கள் ஞாயம் பேசக் கூடும்.
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. மூன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்பித்தாலும், நம் நாட்டின் கல்வி முறையால், பலரும் ஆங்கிலத்தை, சொற்களை இலக்கண விதிகளை கண்டபடி மீறிப் பொருத்தியே பேசுகிறார்கள்.
சரி, ஆர்வ மிகுதியால் உங்களுக்கு சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அதற்கான இணையத் தளம் உண்டு.
ஆங்கில அகராதிகளின் மூல கர்த்தாவான ஒக்ஸ்போர்ட் அகராதியின் இணையத் தளம் தான் அது.
http://www.oxfordlearnersdictionaries.com க்குச் சென்று, நீங்கள் உச்சரிப்புத் தேடும் சொல்லை அதில் தேடுங்கள். அங்கே மேல் பகுதியில் ஸ்பீக்கர் குறியுடன் BrE, NAmE என்று பிரிட்டிஷ் ஆங்கிலம், வட அமெரிக்க ஆங்கிலம் என இரண்டு வகை உச்சரிப்புகளும் இருக்கும். அந்த ஸ்பீக்கர் குறியில் அழுத்தும் போது, அதன் உச்சரிப்பு ஒலிக்கும்.
வந்தமா, உச்சரிப்பைக் கேட்டமா என்றில்லாமல், அந்தச் சொல்லின் தௌpவான கருத்துடன், அந்தச் சொல் பயன்படும் விதங்கள் பற்றி விலாவாரியான விளக்கங்களும் இருக்கும். அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரம் ஆங்கிலத்தில் உங்களுக்கு பாண்டித்தியம் வந்து, 'அட, எனக்கு இப்ப நல்லா இங்கிலிஷ் தெரியும்' என்று எலக்ஷனில் நின்று கனடாவின் மேதகு தேசியத் தலைவராகும், அது தான் பிரதமராகும், கனவில் மிதக்காதீர்கள். அதற்கு பிரெஞ்சு மொழியும் தெரியவேண்டும். (கவலை வேண்டாம். சுலபமாய் பிரெஞ்சு மொழி கற்பதற்கான வழியையும் அடுத்த சுவடிகளில் சொல்லித் தருவோம்.)
You must be logged in to post a comment Login