Recent Comments

    கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! செந்நீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?

    Winter gardeningஅட, நாங்கள் ஒன்றும் எங்கள் போராட்டம் பற்றிப் பேசவில்லை. இந்த மாதம் கொல்லைப்புறத் தோட்டத்தில் நின்று இந்தப் பாடலைத் தான் பாடப் போகிறீர்கள். கோடை முழுவதும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த, அயராது உழைத்த உழைப்பு ஒரே இரவில், வாடி வதங்கப் போகிறது.

    முதன் முதலாக, வெப்பநிலை பூச்சியத்துக்கு அருகில் போக, புற்களின் மேல் தேங்காய்ப்பூ கொட்டிய கணக்கில், மெல்லிய உறைபனி வரும். ஆசையோடு வளர்த்த புடலங்கன்று முதல் மிளகாய் வரைக்குமான கோடை காலப் பயிர்கள் சுடுநீர் ஊற்றியது போல வெந்திருக்கும். அதற்கான விஞ்ஞான விளக்கம் பின்னால் எப்போதாவது!

    வெப்பநிலை நான்கு பாகை சதம நிலைக்கு கிட்டும் போது, அல்லது பத்துப் பாகைக்கு கீழே இருக்கும் போது, குளிர் காற்று வீசினால், மரக்கறிக் கன்றுகள் ஒரே இரவில் உயிரை விடும். குளிர் காலநிலைக்கான தடித்த இலை கொண்ட கோவா, கேல், கொலாட், சலாட் இலைகள், லீக்ஸ், பீட்ரூட் போன்றன இந்தக் குளிருக்கு தாக்குப் பிடிக்கக் கூடியன. கொட்டும் பனிக்குள் நின்று, அடுத்த வருடம் பனி நீங்க உயிர் பெறக் கூடியன. நம்ம மிளகாய், கத்தரி, தக்காளி போன்றனவற்றின் ஆயுள் முதலாம் உறைபனியோடு முடிந்து விடும்.

    எத்தனையோ தியாகம் செய்து, நடாத்திய போராட்டம்... சே... உழைப்பு வீணாய் போகாமல் இருக்க...முதலில் எதற்கும் முடிந்தவரைக்கும் முற்றிய காய்கறிகளைப் பறித்து பயன்படுத்துங்கள். வளராத பிஞ்சுகளை இழுத்துக் கொண்டு போய் பலியிடப் பயன்படுத்திய மாதிரி இல்லாமல், பிஞ்சுகளைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். எஞ்சியவற்றைக் குளிரூட்டியில் சேமியுங்கள்.

    வீட்டுக்குள் வைத்துப் பராமரிக்கக் கூடியதாக, மிளகாய் போன்றவற்றைக் கிளப்பி, சாடிக்குள் வைத்து வீட்டுக்குள் கொண்டு வாருங்கள். அதற்காக முழுத் தோட்டத்தையும் அல்ல! ஒன்றிரண்டு போதும். குளிர்காலம் முழுவதும் மிளகாய் கிடைக்கும்.

    தக்காளியை காய்களுடன் பிடுங்கி, நிலக்கீழ் அறையில் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுங்கள். அது தானாகவே பழுத்து வரப் பயன்படுத்தலாம்.

    எதற்கும் அடிக்கடி தொலைக்காட்சி காலநிலை அறிவிப்புகளை அவதானியுங்கள். என்றாவது உறைபனி (Frost) என்று தெரிவித்தால், நடவடிக்கைக்கு தயாராகுங்கள்.

    பெரும்பாலும் ஒரு நாள் உறைபனியின் பின்னால், வெப்பநிலை அதிகரித்து நீண்ட நாட்களுக்கு நல்ல காலநிலை இருக்கும். எனவே, உறைபனி நாளன்று, இலைகளுக்கு தண்ணீரால் விசிறி, ஒளி புகக் கூடிய பிளாஸ்டிக் சீட்களால் மூடி விடுங்கள். மறுநாள் வெப்பநிலையைப் பார்த்து, அவற்றை எடுத்து விடுங்கள்.

    இப்படியாகத் தானே... எங்களுக்குப் பயன்படாதது வேறு யாருக்கும் பயன்படக் கூடாது என்ற எண்ணத்தோடு எல்லாவற்றையும் அழிக்காமல், விளைபொருட்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Save

    Postad



    You must be logged in to post a comment Login