பொறுப்புள்ள பார்த்தசாரதியாகி விபத்துக்களைத் தவிருங்கள் 1
வீதிகளில் வாகனங்கள் மலிந்து, நெரிசலில் அகப்பட்டு அடிக்கடி பொறுமை இழந்திருப்பீர்கள். இதற்குள் விபத்துகளில் மாட்டிக் கொள்ளாமல் வீடு சேர்வது என்பது இன்னொரு பெரும் சவால். வருடாந்தம் கனடாவில் நான்கரை லட்சம் வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன. விபத்துக்களைத் தவிர்க்க இதோ சில ஆலோசனைகள்...
உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். போக வேண்டிய இடத்திற்கு செல்லும் பாதுகாப்பான வீதிகளைத் தெரிவு செய்யுங்கள். எங்கே, எப்போது திரும்ப வேண்டும் போன்ற விடயங்களை முன்னரே திட்டமிடுங்கள். 'இதுக்காலை விட்டு, அதுக்காலை போகும்' யுக்திகள் பெரும்பாலும் ஆபத்தில் முடியலாம். புதிய இடங்களுக்குச் செல்வதாயின், Google maps அல்லது Mapquest.com அல்லது routes.tomtom.com அல்லது ca.maps.yahoo.ca இணையத் தளங்களில் பயண ஆரம்ப, முடிவு இடங்களைக் கொடுக்க படமே கீறித் தரும். உங்களிடம் GPS எனப்படும் உபகோள் உதவி கருவி இருந்தாலும் இந்தப் படங்கள் ஆரம்பத்திலேயே பயணத்தைத் திட்டமிட உதவியாக இருக்கும்.
அருகில் உட்கார வைப்பவர்கள் பற்றி கவனமாய் இருங்கள். 'உங்க உந்த பியர்க் கடைக்குள்ள ஒருக்கா விடு', 'உதிலை சாறிக்கடை மலிவு விற்பனையாம், திருப்புங்கோ' என்பவர்களை பக்கத்தில் அமர்த்தாதீர்கள். வேறு சிந்தனையில் நீங்கள் திருப்பப் போக, பின்னால் வருபவர்கள் வந்து மோத... எதற்கு வீண் வம்பு? ஏறுபவர்களிடம் முதலே அவர்கள் போக வேண்டிய இடங்களைக் கேட்பது விபத்தைத் தவிர்ப்பது மட்டுமல்ல, சென்ற இடத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு மீண்டும் போக வேண்டிய எரிபொருள் செலவையும் மீதமாக்கும்.
வாகனத்தைச் செலுத்த ஆரம்பிக்க முன்னால் ஒரு தடவை காரைச் சுற்றி வாருங்கள். கோயிலைச் சுற்றியது போல! காருக்கு கீழ் படுத்திருக்கும் பூனை, வீட்டிலுள்ள மற்றவர்கள் கொண்டு போய் ஏற்படுத்திய சேதம், கவனக் குறைவாய் வீட்டுக்காரர் கைவிட்ட பொருட்கள் என பல கண்டுபிடிப்புகள் கிடைக்கும்.
வேகமாய் மிதித்து, கடுமையாய் பிரேக் அடிக்கும் பழக்கத்தைக் குறைத்து, மெதுவாக, சீராக செலுத்துங்கள். பச்சை விழுந்ததும் சீறிப் பாய்ந்து, மஞ்சளைக் கடக்க முயற்சித்து தோற்று, சிவப்பில் பிரேக் அடிக்கும்போது, நீங்கள் கடக்கப் போவதாக எண்ணி, உங்களைப் பின் தொடர்ந்தவர் பின்புறத்தை நொருக்கக் கூடும்.
உங்களுக்கு நேரே முன்னால் இருக்கும் வாகனத்தை மட்டுமல்ல, நீண்ட தூரத்திற்கு பார்க்கக் கூடிய வகையில் வாகனத்தைச் செலுத்துங்கள். இது கவனமாக வாகனம் செலுத்த உதவுவது மட்டுமன்றி, ஏதாவது விபத்து நடந்தால் அதைத் தவிர்க்கவும் உதவும். ஆபத்து வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பது நல்லது.
உங்கள் பார்வையை மறைக்கக் கூடிய பெரிய வாகனங்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு தொடர்வதை நிறுத்துங்கள். அவர்கள் திடீரென்று பிரேக் அடித்தால், நீங்கள் அவர்களின் பின்புறத்தை நொருக்கக் கூடும்.
முன்னால் உள்ள வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையிலான தூரம் நகரத் தெருக்களில் இரண்டு செக்கன்கள், பெருந்தெருக்களில் நான்கு செக்கன்கள் ஆகும். அதற்காக மணிக்கூட்டில் செக்கன்களைப் பார்த்தபடி கார் ஓட்டாதீர்கள். முன் வாகனம் கடந்து சென்ற இடத்தை நீங்கள் அடைய, ஆயிரத்தில் ஒன்று, ஆயிரத்தில் இரண்டு, ஆயிரத்தில் மூன்று என்று எண்ணுவது செக்கன்களை கணக்கிட உதவும். அதைவிடக் குறைந்த நேரமாயின், முன் வாகனம் ஆபத்தில் மாட்டிக் கொண்டால், உங்கள் வாகனத்தை நிறுத்த உங்களுக்கு நேரம் போதாமல் இருக்கும்.
You must be logged in to post a comment Login