இடம்
க.கலாமோகன்
இடம் வந்தவுடன் தெரியாதுள்ளது என்பது எனக்கு விளங்கியது. ஆம் நானும் பிறந்தது தெரியாத இடத்தில். உண்மையில் யாவும் தெரியாதவையே. தெரிவைத் தேடித் தேடி………….. முடிவில் யாவும் தெரிவின்மையே எனும் முடிவுள் இறங்கும்போது………………
“நல்ல படம்! கீறுகளுக்குள் நிறையச் செய்திகள்!”
“ம்ம்ம்ம்ம்ம்ம், எனக்குள் செய்திகள் தெரியாமல் உள்ளன. படமும் எனக்குப் .பிடிக்கவில்லை.”
“இந்தப் படம் வித்தியாசமானது. ஓவியர் பலரும் கீறுகின்ற முறையை மறுத்துக் .கீறியுள்ளார்.”
“மறுப்பு! நான் மறுப்பின் எதிரியல்லன். படம் உனக்குப் பிடிக்கலாம். எனக்குப் பிடிகாமலிருக்கலாம். ஒருவன் என்பது ஓர் உலகம்.”
மூன்றாவது, ஓர் பெண், கதைக்குள் இறங்குகின்றாள்:
“நீங்கள் ஆண்கள். உங்களோடு கதைக்க முடியுமா?”
“ஏன் நீ எங்களை ஆண்கள் என்கின்றாய்?
“உருவம்? எனது கருத்துள் தவறு இருக்கலாமா?”
“உருவம் ஓர் மொழிபெயர்ப்பு அகராதி அல்ல.”
“நீங்கள் ஆண்கள் இல்லையா?”
“நாங்கள்: ஓர் ஆண் ஓர் பெண். நீ ஆண்களோடுதான் கதைக்க விருப்பமா?”
“ இந்த சித்திர விழாவில் ஓவியம் கீறியவர்கள் எல்லாம் ஆண்கள். ஆனால் நிறையப் பெண்கள் வந்துள்ளனர். ஓவியர்கள் எல்லோரும் வந்தார்கள் என எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களில் ஒருவர் ஓவியரா?”
“அவளுக்குக் கீறத் தெரியும். நான் ஓவியத்தில் பெரிய பற்று இல்லாதவன்.”
அவளால் அவளை அடையாளம் காணமுடியவில்லை. இந்த அடையாளம் அவசியமானதா? வாழ்வுத் தேரின் பயணத்துக்கு தடை செய்வதா இந்த அடையாளம்?
நான் ஓவியச் சந்தையை விட்டு வெளியில் வருகின்றேன்.
வாங்கில் ஒன்று இருந்தது. இருக்கின்றேன். நான் சிறியவனாக இருந்தபோது ஓவியனாகும் ஆசை எனக்கு வந்ததா?
உண்மையில் தெரியாது. தெரிவின்மையால் நான் சிக்கல் படுவதும் இல்லை.
தெரிவும் தெரிவின்மையும் ஓர் கடல்போல. இந்தக் கடலில் எனக்கு விருப்பம். இந்தக் கடலுள் கிணறுகள் கிடக்கலாம். ஆம், நான் இன்றுவரையும் கிணறுகளை விரும்புகின்றேன்.
எனது பிருஷ்டம் வாங்கின் மேலே அசைந்தது. வாங்கின் அருகில் ஓர் கிணறும் இல்லை. அதனது தொலைவிலாவது இருக்குமா?
சித்திர வயலைவிட்டு வெளியே போவதா? அவள், அவள், அவனது கதையை வெளியில் நுழைந்தால் இழப்பதுபோல பட்டது.
ஆம், கிணறு தேவை. அருகில் இல்லாமல் உள்ளது. தூரத்தில் இருந்தாலும் பரவாயில்லை. கிணறு பிடிபட்டதும் சித்திர வயலுக்குள் செல்வேன்.
வாங்கின் அருகில் கிணறில்லாதது நெருக்கடியாக இருந்தது. நான் நடந்தேன். நான் பல வீதிகளைக் கடந்தேன், அவைகளின் பெயரை அறியாமல். நான் எவரிடமும் இங்கு கிணறு உள்ளதா எனக் கேட்கவில்லை. நான் தேடினேன். நான் மீண்டும் மீண்டும் வீதிகளைக் கடந்தேன் அவைகளது பெயர்களை அறியாமல். கிணறு கண்முன் படவேயில்லை.
சரி, ஓவியச் சந்தைக்கு மீண்டும் போவது என் முடிவு……ஆனால் எப்படிப் போவது என்று தெரியாது. ஓர் இளம் பெண் என் அருகில் வந்தாள் . நேரம் கேட்டாள்.
நேரம் சொல்லிவிட்டு ஓவியச் சந்தை எங்கே என்று கேட்காமல் அவளிடம் “இந்தப் பகுதியில் கிணறுகள் இருக்கின்றனவா?” எனக் கேட்டேன்.
அவள் சிரித்தாள். பெரிதாகச் சிரித்தாள். அது அட்டகாசமான சிரிப்பு. அசந்துவிட்டேன். எப்போதும் கேட்டிருக்காத சிரிப்பாக இருந்தது. அது இன்னொரு அவளின் சிரிப்பு இல்லை. எங்கு கேட்டதென்பது விளங்கவில்லை. நான் இங்கு கேட்டதா? அங்கா? இங்கும் அங்குக்கும் இடையிலா?
“நீ! ஏன் சிரித்தாய்?”
மவுனம் அவளது உதடுகளை மூடியது.
நான் அவளைப் பார்த்தேன்.
உதடுகளில் ஈரம் இருந்தது. அவளது சிரிப்பு மங்கும் தடவையில் நான் அவளை முத்தமிட்டேன். அவள் என்னை இழுத்தாள்.
கன முத்தங்கள். கடைசி விடையில் அநித்தியம் இருக்குமாயின் முத்தங்கள் உலகை நனைக்கவேண்டும்.
வீடுகளில் முத்தங்கள். வீதிகளில் முத்தங்கள்.
இது உண்மையிலேயே கனவாகப் படலாம்.
அவள் முத்தங்களை நத்தினாள். மீண்டும்….. மீண்டும்….. நான் இந்தக் கணத்தில் கிணத்தை நினைத்தேன்.
என் நினைப்பு அவளது முத்தத்தால் உடைந்தது.
“நீ தொடர்ச்சியாக முத்தங்களைக் கேட்பது ஏன்?”
“நான் இறக்க விரும்புகின்றேன், முத்த வலையுள்.”
“ கிணறு தேடுகின்றேன் நான்.”
“ம்ம்ம்ம், விழுந்து சாவதற்கா?”
“சாவின் இலக்குகள் முத்த வலையுமில்லை, கிணறும் இல்லை.”
“ உனது முத்தங்களை நான் அங்கீகரித்தது எனது இறப்பைத் தியானித்து.”
“நான் கொலையாளியாக இருப்பது உனது விருப்பமாக இருந்ததா?”
“நானும் கொலையாளி நீயும் கொலையாளி, இது என் இலக்கணம்.”
“ நான் கொல்லும் இலக்கு இல்லாதவன். தற்கொலை செய்யும் ஆசை எனக்கு நிறைய வந்ததுண்டு.”
“உனது இருப்புள் பொய் உள்ளது. காரணம் நீ இருக்கின்றாய்.”
பொய், மெய், கொலை.
அவள் மீண்டும் முத்தங்களை நத்தினாள்.
நான் முத்தமிட்டேன்.
“நீ ஏன் சிரித்தாய் ‘நான் கிணறு இருக்கா?’ என்று கேட்டபோது ?”
அவள் மீண்டும் சிரித்தாள்.
“இங்கு நான் ஒருபோதுமே கிணறுகளைக் கண்டதில்லை. உனது தேசத்தில் இருக்கலாம். அவைகளைப் பற்றி பேசு!”
அவளது கட்டைக் கூந்தல் காற்றில் மெல்லிசாக ஆடியது.
“எமது நாட்டில் கிணறுகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு கிணறும் ஒவ்வொரு கதைகள். பல கிணறுகள் வேறு வடிவங்களில். அதனது தண்ணீரும் வேறுபட்ட சுவையாக இருக்கும். சில கிணறுகளின் அருகில் தொட்டில்கள். ஆம் எனது நாட்டில் கிணறுகள் எமது வாழ்வோடும் கலாசாரத்தோடும் இணைந்தவை. கிணறுகள் சிறிதும் உள்ளன. ஆழமான கிணறுகளில் கவனமாக. இருக்கவேண்டும்.”
தான் ஏன் சிரித்தாள் எனச் சொல்லாதிருப்பவளுக்கு நான் கிணறு பற்றிப் பேசவேண்டுமா?
நிறைய கிணறுக் கதைகள் எனக்குத் தெரியும். அவைகள் எனக்குள் ஒழிபட்டன.
மீண்டும் அவளுக்கு முத்தமிடும் ஆசை வந்தது. அவளை விட்டுப் பிரியும் ஆசையும் அருகில். ஆசையும் ஆசையின்மையும். இந்த வீதியில் நடந்து நடந்து, கிணறுகளையும் மறந்து நான் சித்திர வயலைத் தேடினேன்.
இடம், முகவரி தெரியாது.
சிலரிடம் கேட்கின்றேன். தெரியாது எனும் பதில்கள்.
வழியில் ஓர் சிறுவன் கீறிக் கொண்டுள்ளான். அவன் கீறுவது வீதியில். படம் புரியாது உள்ளது. எனக்குள் ஓர் ஆர்வத்தை ஊட்டுகின்றது இந்தப் புரிவின்மை. வாகன ஓட்டிகள் அவனைத் திட்டுகின்றனர். பாராட்டும் சொல்களும் கேட்கின்றன.
அவன் கீறிக் கொண்டுள்ளான்.
அவன் தனது ஓவியத்துக்குள்.
ஓவியச் சந்தையைக் கேட்டால் அவனது கலை கலைந்து விடாதா?
“உனது ஓவியம் அழகாக உள்ளது.” என ஓர் முதிய பெண் அவனது காதில் தனது மொழியை இலகுவாகச் சொல்கின்றாள்.
அவன் அவளைப் பார்க்கின்றான்.
“உனக்கு எனது நன்றி இல்லை. என் ஆக்கம் ஓவியம் அல்ல.”
“நீ உனது ஆக்கம் ஓவியம் இல்லை என்கின்றாய். நீயே ஓவியம்.”
“நான் ஓவியமா?”
“நீ! ஓவியம்.”
அவள் அவனது உதடுகளை தனது உதடுகளால் பூட்டுகின்றாள்.
ஆம்! எனக்கு ஓவியச் சந்தை தெரிகின்றது.
(நன்றி: புதிய கோடாங்கி, தமிழ்நாடு, டிசம்பர், 2015.)
You must be logged in to post a comment Login