Recent Comments

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    Tamilகுஞ்சன்

    என்னால் நான் பேசும் மொழியை உயர் மொழி எனச் சொல்லமுடியாது. இப்படிச் சொல்வதின் அர்த்தம் பிற மொழிகள் தமிழ் மொழிக்குத் தாழ்வு எனும்  கருத்தைத் தரலாம்.  உயர்வு/தாழ்வுப் பிரசாங்கங்கள் தாழ்த்தி வருவது மொழிகளையுமல்ல, மனிதர்களையும்.

    அண்மையில் முகப் புத்தகத்தில் தமிழ்தான் உலகின் மூத்த மொழி எனும் குறிப்பைப் பார்த்தேன். www.worldblaze.in இணையத்தளம் சொல்லுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்முள் பலருக்கு இக்குறிப்பு வீரவெறியைத் தரும் என்பதை நாம் நிச்சயமாக நம்பலாம். சரி தமிழ் இந்த உலகின் கடைசி மொழியாக இருந்தால் என்னவாம்?

    மனிதர்கள் இல்லாமல் மொழிகள் இல்லை. இந்த மனிதர்களே மொழிக்குள் பிரிவுகளைக் காட்டுபவர்கள் என்பதை நேற்றைய சரித்திரத்திலும் , இன்றையதிலும் கண்டுவருகின்றோம். நாளையதிலும் இவர்கள் இருப்பார்கள்.  இந்த பிரிவுகளைச் செய்ய பல்கலைக்கழக மூளைகள் உள்ளன.

    தமிழின் மன்னர்கள் தமிழ் மொழிக்குப்  பிற மொழிகள் அடிமைகள் எனச் சொல்வதில் நெஞ்சை நிமிர்த்தவில்லையா? வேறு மொழிகளிலும் மன்னர்கள் இல்லையா? ஒவ்வொரு மொழிகளும் தம்மைப்  பெருமைப்படுத்தவே துடிக்கின்றன. ஓர் நாட்டில் 50 பேர் வாழ்ந்து அவர்கள் ஓர் மொழியைப் பேசுகின்றனர் என வைப்போம். அந்த 50 பேரில் 10 பேர் தமது மொழியை உலகின் பெருமொழியாகச் சொல்லும் வியாதியைக் கொண்டவர்கள்.  இந்த வியாதிகளே உலகில் மொழிக் கொடுமைகளை உருவாக்குகின்றன.

    உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகள் தங்கள் மொழியை உலகின் தாய் மொழிகளாகச்  சொல்வதுண்டு. ஆங்கிலம் உலகில் பல பக்கத்திலும் பேசப்படுவதால் அது ஓர் பெரிய மொழியாம், இதனது “மொழிவெறியை” உடைக்கத் திரிவது பிரெஞ்சு மொழி வெறி. ஐரோப்பிய மொழிகள் உலகின் பிரபல மொழிகள் எனச் சொல்ல உலகம் முழுவதிலும் கிளைகள் உள்ளன.

    பிரெஞ்சு மொழியில் என்னால் பேசமுடியும். இந்த மொழியை ஓர் அழகிய மொழியாகப் பார்க்கின்றேன், தமிழ் மொழியையும் அழகிய மொழியாகப் பார்த்த விதத்தில்.  தமிழர்கள் போல, இந்த பிரான்சியரும் தமது மொழியை பெருமையாகவும், பல மொழிகளுக்கு மூத்ததாகவும் கருதுகின்றனர். இது ஓர் வியாதி.

    நான் மாலி நாட்டினது பமாக்கோ மொழியையும், கொங்கோவில் பேசப்படும் லிங்காலா மொழியையும், அல்லது ஆபிரிக்க மொழிகளை முதல் மொழிகளாகக் கருதினால் என்னை நிச்சயம் தூக்கிலிடுவதற்கு  பல பேர் ஆசைப்படலாம். இந்த மொழிகள் பேசப்படுவன, எழுதப்படுவதில்லை.

    ஒவ்வொரு மொழியும் தன்னைப்  பெரிய மொழி என்று சொல்வதாலும்,  இந்தப் பெரிய மொழித்துவத்தில் இருந்தும்தான் மனித வாழ்வுப் பிரிவுகள் தோன்றுதல் எனலாம்.

    மொழி ஆய்வாளர்களை நான் படிகின்றேன். 10 ஆய்வாளர்களை வாசித்தபோது உலகின் அழகிய மொழி ஆங்கிலமே  என்போர் 6 பேர், 5 பேர் பிரெஞ்சு மொழி என்கின்றனர். இந்த ஆய்வுக்குள் தமிழ், ஆபிரிக்க மொழிகளைக் காணவில்லை.  இந்த ஆய்வுச்  சூத்திரத்தின் முன்னால் எனது தமிழ் வாயை அறுப்பதா?  எழுதப்படாத மொழிகளைப் பேசுவோர் தமது நாக்குகளை வெட்டுவதா?

    உலகின் ஓர் கண்டத்தில் மொழிகள் எழுதப்படுவதில்லை, மொழிகளுக்கான எழுத்துகளும் இல்லை. இது ஆபிரிக்காக் கண்டம். இந்த மொழிகள் இல்லாத கண்டம் மொழிகள் தெரிந்த கண்டங்களினது மொழிகளை வாங்கி  அடிமையாக எப்போதும் இருக்கின்றது என்பது வேறு விஷயம். இந்த மொழிகள் எழுதப்படாத (சில மொழிகள் லத்தின் எழுத்துகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன, அவைகள் மக்களுக்கு அந்நியமானவை) ஆபிரிக்காக் கண்டத்தை எரிப்பதா? அங்கே உள்ளவர்களை மொக்குகள் என்பதா?

    மொழி எழுத்துக்கலை இப்போது இணையக் கலையாகவும் உள்ளது. இந்த இணையக் கலைகள் பரிசோதிக்கப்படுவன என இருந்தால், எழுதப் படாத மொழிகள் நிச்சயமாக ஒருவேளை சுதந்திரத்தை வாழும் எனச் சொல்லலாம்.

    எழுத்து மொழி தேவை எனக் கத்துவோர் எழுத்தினால் வரலாறு, கலை காப்புறும் என்கின்றனர்.   எது வரலாறாம்? யாழ்ப்பாணத்தின் மீது 100 வரலாறுகள் எழுதப்பட்டால் 90 வரலாறுகள் பொய்யாய் இருக்கும் என்பது உண்மை. இந்தப் பொய்கள் தாம் “வரலாற்று”க் கலையை வளர்க்கின்றன.

    முகப் புத்தகத்தில் தமிழ் வெறி நிறைய நிறையப் பெருகுகின்றது. ஆனால் தமிழ் நிச்சயமாக  ஒரு அழகிய மொழி, ஏனைய உலக மொழிகளையும் போல. யூகோஸ்லாவிய மொழியைப் பாரிஸ் வீதிகளில் பல தடவைகளில் கேட்டேன். இதுவும் ஓர் அழகிய மொழியே. எழுதப்படாத மாலியின் பம்பாரா, கொங்கோவின் லிங்காலா, செனெகலின் வோலோப் மொழிகளையும் கேட்கின்றேன். ஆம், இவைகளில் அழகும், நிறையக் கவிதைகளும் உள்ளன.

    Postad



    You must be logged in to post a comment Login