Recent Comments

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    Carbon Monoxideகுளிர்காலம் தொடங்கி விட்டது. வீட்டில் உள்ள காற்று சூடாக்கியை செயற்பட வைத்து, எரிவாயுவை எரித்துக் காற்றைச் சூடாக்கி வீடெங்கும் பரவ விட்டு உடலுக்கு இதம் தேடுவீர்கள். ஆனால் வீட்டுக்குள்ளே எரிவாயு எரிவதால் ஏற்படக் கூடிய மிகப் பெரிய ஆபத்து காபன் ஓர்ஒட்சைட்டை (CO- Carbon Monoxide) சுவாசிப்பதாகும்.

    எட்டாம் வகுப்பைத் தாண்டாமல், துப்பாக்கி தூக்கி, தூக்கத்திலும் உயிர் பறிக்கும் உயிர் கொல்லியாகாமல், விஞ்ஞானம் படித்திருப்பீர்களாயின், எரிபொருட்களில் உள்ள காபன் ஒட்சிசனில் எரிந்து காபனீர் ஒட்சைட் ஆகும் என்பது தெரிந்திருக்கும். தற்போதும் முகப்புத்தகத்தில் ஈழச் செய்திகளில் முகம் புதைக்காமல் இருந்தால், இந்த எரிபொருட்களினால் வரும் காபனீர் ஒட்சைட் வளிமண்டலத்தில் நிறைந்து பூமி சூடாகி, துருவப் பனி கரைந்து, உலகில் காலநிலை மாற்றம் வேகமாக நடக்கும் விவகாரம் தெரிந்திருக்கும்.

    காபன் எரியும் போது போதியளவு ஒட்சிசன் கிடைக்காமல், முழுமையாக எரியாமல் அதில் ஒரு பகுதி CO ஆக மாறுகிறது. இது மிகவும் நச்சுத் தன்மையான வாயு. இது நிறமோ மணமோ சுவையோ இல்லாதது. சுவாசிக்கும் போது, உங்கள் சுவாசப்பையில் இருந்து இரத்தத்தில் ஒட்சிசன் உறுஞ்சப்படுவதை தடுக்கிறது. அத்துடன் செங்குருதிக் கலங்களை நஞ்சூட்டி, ஒட்சிசனை உடலெங்கும் பரவுவதைத் தடுக்கிறது. இதனால் போதியளவு ஒட்சிசன் உங்கள் உடலில் உள்ள கலங்களுக்குப் போகாமல் அவை இறந்து, உள்ளுறுப்புகள் செயற்படாமல் போகும். குறிப்பாக மூளை ஒட்சிசன் போதியளவு இல்லாமல் செயற்பட முடியாது போகலாம். இந்த வாயுவைச் சுவாசிப்பதால் ஏற்படும் முதல் குணங்குறிகள் மூளையில் பாதிப்பு ஏற்படுவதால் வருபவையே.

    எனவே, அளவுக்கதிகமாக இந்த வாயுவைச் சுவாசித்தால் சில நிமிடங்களுக்குள்ளேயே மரணம் சம்பவிக்கலாம்.

    கனடாவில் 2000 ஆண்டு முதல் 2009 வரை 380 பேர் இந்த நச்சு வாயுவினால் இறந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் வருடாந்தம் 400 பேர் இறக்கிறார்கள். 4000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுகிறார்கள். 20 ஆயிரம் பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    வாகனங்கள், விறகும் வாயுவும் எரித்து சூடாக்கும் fireplaces, எரிபொருள் பயன்படுத்தும் அடுப்புகள், இறைச்சி வாட்டும் அடுப்புகள், வீட்டில் உள்ள நீர் சூடாக்கிகள், வாயு மூலம் உடைகள் உலர வைக்கும் கருவிகள், சக்தி பிறப்பாக்கிகள் என எரிபொருட்களை எரித்து செயற்படும் கருவிகளில் இருந்து காபன் ஓர் ஒட்சைட் வெளியேறும்.

    சரியான காற்றோட்டம் இருக்கும் போது, இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மூடிய வீட்டுக்குள், அதுவும் குளிர் காலத்தில் கதவுகள், ஜன்னல்களை இறுக மூடிய நிலையில், இந்த வாயு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் நிறைந்து உங்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தலாம்.

    கார் நிறுத்தும் அறைக்குள் காரை ஸ்டார்ட் செய்து ஓட விடுதல், வீட்டின் புகை போக்கி பனிக் கட்டிகளாலோ, அங்கு புகலிடம் தேடும் மிருகங்களின் கூடுகளாலோ அடைபடுதலால் கழிவு வாயு வெளியேற முடியாதிருத்தல் போன்ற காரணங்களால் வீட்டுக்குள் இந்த வாயு நிறைய வாய்ப்புண்டு.

    இந்த வாயு வீட்டுக்குள் நிறைந்து உங்களைப் பாதிக்கும் போது, தலையிடி, மயக்கம், வாந்தி போன்ற குறிகுணங்கள் காணப்படும். உங்கள் இரத்தத்தில் இந்த வாயுவின் அளவு கூடக் கூட, குழப்பம், வேகமான சுவாசம், இதயத்துடிப்பு அதிகரித்தல், நெஞ்சு நோ, பார்வைக் குழப்பங்கள், வலிப்பு என்பன தோன்றலாம். கடும் காய்ச்சல் போன்ற உணர்வுகளும் தென்படும்.

    அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ளோர் எல்லோருக்கும் இந்தக் குணங்குறிகள் இருத்தல், வீட்டிற்கு வெளியே போகும் போது இந்தக் குணங்குறிகள் இல்லாமல், திரும்பி வீட்டுக்குள் வரும் போது இதே குறிகள் வருதல் என்ற நிலை வரும் போது, இது காபன் ஓர் ஒட்சைட் நஞ்சு மூலமாக ஏற்படுகின்றது என்ற முடிவுக்கு உடனடியாக வரலாம்.

    இந்த நஞ்சாதல் குறுகிய நேரத்துக்குள்ளேயோ, அல்லது சிறிய அளவில் நீண்ட நேரத்துக்கோ நடக்கலாம். மிகச் சிறிய அளவில் இருக்கும்போது, சுவாசிப்பதில் கஷ்டம், மெல்லிய தலையிடி, மயக்கம் இருக்கும். அதிகளவில் இருக்கும்போது, கடுமையான தலையிடி, மனம் மயக்கமுற்றுக் குழம்புதல், பார்வை, கேட்பதில் சிக்கல், மயக்கம் என்பன ஏற்படும். மிகக் கடுமையான அளவில் இருக்கும் போது நினைவிழந்து கோமா நிலைக்குச் சென்று மரணம் சம்பவிக்கலாம்.

    எனவே இந்த குணங் குறிகளைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாகவே வீட்டை விட்டு வெளியேறி, அவசர உதவிக்கு அழைப்பு விடுங்கள். தொடர்ந்தும் அதே காற்றைச் சுவாசித்தால் நீங்கள் மயக்கமுற்று இறக்க நேரிடலாம்.

    வீட்டுக்குள் CO இன் அளவை உணரக் கூடிய CO Detectors ஒவ்வொரு வீட்டிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த வாயு புகையைப் போல மேலெழாமல் தளமட்டத்திலேயே இருப்பதால், அறையின் மேல் பகுதியில் இல்லாமல், நில மட்டத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும். இவை இந்த வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, காதைக் கிழிக்கும் ஒலியை எழுப்பக் கூடியன. இந்தக் கருவிகள் தூசிகளால் அடைபடாமல், பொருட்களால் தடைபடாமல் திறந்த இடங்களில் இருக்க வேண்டும்.

    மின்சாரத்தில் இயங்கு பவற்றை விட, பட்டரியில் இயங்குபவை மின்சாரம் தடைப்பட்டாலும் செயற்படக் கூடியன. ஒவ்வொரு வருடம் நேரம் மாற்றப்படும் போது மறக்காமல் இவற்றின் பட்டரிகளை மாற்றுங்கள்.

    குளிர்காலத்தில் மின் சாரம் நின்று விட்டால், விறகு மற்றும் எரிபொருளால் இயங்கும் அடுப்புகள், சூடாக்கிகள், மின் பிறப்பாக்கிகளை வீட்டுக்குள் இயக்குவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். அதுவும் நித்திரைக்குச் செல்லும் நேரங்களில் இவற்றைச் செயற்பட விடுவது மிகவும் ஆபத்தானது. நித்திரையிலேயே ஆபத்துக்களை உணர முடியாமல் மரணம் சம்பவிக்கலாம்.

    உங்கள் வாகனங்களின் உள்ளேயும் இந்த வாயுவின் அளவு அதிகரிக்கலாம். இயந்திரப் புகை போகும் குழாய் அடைபடுவதாலும், துருப்பிடித்து துளைகள் ஏற்படுவதாலும் வாகனத்தின் உள்ளேயே இந்த வாயு நிறையலாம். அதிலும் குளிர்காலத்தில் ஜன்னல்களை மூடியபடியே பயணம் செய்யும் போது, ஆபத்து ஏற்படலாம். எனவே உங்கள் கார் திருத்துபவர் மூலமாக அவற்றையும் நல்ல நிலையில் பேணுங்கள்.

    குளிர்காலத்தில் காரை ஸ்டார்ட் செய்து ஓட விடும் போது, கராஜிற்கு வெளியே நிறுத்தியே ஒட விடுங்கள்.

    குளிர்காலத்தில் இந்த வாயுவைச் சுவாசித்து ஆபத்தில் மாட்டுபவர்கள் பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் செய்தி வருகிறது. நித்திரையில் உங்கள் உயிரைக் குடிக்கக் கூடிய இந்த வாயு தேவன் பற்றி மிகவும் அவதானமாக இருங்கள்.

    சுவடி கார்த்திகை 2015

    Postad



    You must be logged in to post a comment Login