இறப்போர்…
இவர்கள் அப்பாவிகள்
குண்டுகளினது கைதிகள்
இந்தக் குண்டுகள்
இவர்களது கடைசிச் சேமிப்புகள்
இறப்போர்
வேலைக் களைப்பால் வந்து
Bar முன் அமைதியாகக்
குடிப்போர்…
நாளைய காலையை
மறந்தபடி
குண்டுகள்
வானத்தில் இருந்து வருவனவல்ல
அவை மனிதர்களிடமிருந்து
குண்டுகள்
தயாரிக்கப்படுகின்றன
அவைகள்
சாத்தானால் அல்ல
மனிதர்களால்
ஹெமிங்க்வே சொன்னான்
பாரிசில் தான் இறப்பது
நல்லதென்று
தான் ஓர் குண்டு வெடிப்பால்
சாவதெனச் சொல்லவில்லை
ஒவ்வொரு தினமும்
நான் பாரிஸ் வீதிகளை ரசித்தபடி
வேலைக் களைப்பால்
வீடு திரும்பும்
இளம், வயோதிபப் பெண்களையும்
ஆண்களையும் கண்டபடி
ஒவ்வொரு தினமும்
இந்த நிலத்தில்
கலை வாழும் கோலத்தை
மெத்ரோ விளம்பரங்களில்
ரசித்தபடி
சில தினங்களின் முன்
இந்த நிலத்தை நனைத்தது
குண்டுகள்!
அங்கும் குண்டுகள்
இங்கும்…
எங்கிருந்து
இந்தக் குண்டுகள் வருகின்றதோ
அந்த எங்குகள்
மனித விழிப்புக்கு
சாவுக் குழிகளைத் தேடுவன
இறப்போர்!
இவர்கள் இருப்போர் உள்ளத்துள்
வாழ்வோர்
கொடுமைகள்! கொடுமைகள்!
மனிதக் கொடுமைகள்
எங்களது வாழ்வின்
அழகிய கோலங்களை
அழித்தபடி
இன்று
பாரிஸ் வீதிகளில்
கொஞ்ச மக்களே
இன்று
இந்த வீதிகள்
சரிந்திருந்தன
ஆயிரம் கவலைகளோடு.
You must be logged in to post a comment Login