Recent Comments

    கணனிக்குள் நுழையும் காட்டிக் கொடுக்கும் உளவாளிகள்!

    இணையத்தின் மீதுலாவி வரும் போது, அவ்வப்போது அகிழான் புற்றுக்குள்ளால் எழுந்து வருவது போல, ஜன்னல்கள் தோன்றி, வைரஸ் பாதுகாப்பு, கணனிப் பாதுகாப்பு, கணனியை வேகமாக்கல், குறுவட்டுக்களை பிரதிசெய்தல் போன்றவற்றிற்கு இலவசமாய் மென்பொருட்களை தருவதாக கூறி, தரவிறக்கம் செய்யுமாறு வற்புறுத்தும். ஆகா, ஓசியில் வலிய வந்த சீதேவியை விடுவானேன் என்று ஓகே அடித்திருப்பீர்கள். தரவிறக்கம் செய்த பின்னால், உங்கள் கணனியின் மேசையையே அந்தப் புதிய மென்பொருள் மாற்றியமைத்து, அவ்வப்போது தங்கள் பொருட்களை விலைக்கு வாங்குமாறு தொல்லை கொடுக்கும். அதை விட, உங்களின் நடவடிக்கைளை, அதுதான் எந்த இணையத் தளங்களை பார்வையிடுகிறீர்கள், என்ன பொருட்களை வாங்குகிறீர்கள் என்ற தகவல்களைத் திரட்டி அனுப்பக் கூடிய இரகசிய உளவாளிகளை உள்ளே இறக்கியிருக்கும். இந்த உளவாளிகள் உங்கள் கணனியை பயன்படுத்த, கணனி வேகம் குறைந்து மெதுவாக நகரத் தொடங்கும். நீங்கள் கேள்விப்பட்டிராத நிறுவனங்கள் எல்லாம் தங்கள் பொருட்களை வாங்குமாறு தலையிடி கொடுக்க... வலிய வந்த சீதேவி இப்போது மூதேவி ஆகி, எப்படி விரட்டலாம் என்று வழி தேடுவீர்கள். முதலாவது, ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள நினைக்காதீர்கள். துன்பத்தை விலை கொடுத்து வாங்குவதை விட மோசமானது இது. உங்களுக்குப் பயன்படக் கூடியது, தேவையானது என்பவற்றை மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். காரணமில்லாமல், தங்களுக்கு லாபம் கிடைக்காமல் தருவதற்கு ஓசியில் தருபவர்கள் என்ன தெய்வங்களா? தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் install செய்யும்போது, Custom installation என்பதையே தெரிவு செய்யுங்கள். Standard Installation இல் உங்களுக்குத் தெரியாமல் அவர்கள் பல உளவாளிகளை மறைத்திருப்பார்கள். Custom Installation இல் யார் யார் உள்ளே வர விரும்புகிறார்கள் என்பதைப் பார்த்து, தேவையானவர்களை மட்டும் உள்ளே விடலாம்."Standard Installation," "the Express Installation," "the "Default Installation," "(recommended) Advanced installation" என எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். Custom Installation தரும் தெரிவுகளில் தேவையற்றவற்றை Uncheck செய்யுங்கள். சில நேரம் அவர்களாகவே தெரிவுகளுக்கு சரி குறியிட்டு, மற்றவற்றை சாம்பல் நிறத்தில் வைத்திருப்பார்கள். அது செயற்படாது என்பது போல. உங்கள் எலிக் குஞ்சை மேலே கொண்டு போய் அதைத் தெரிவு செய்யுங்கள். முடிவில் End User License Agreement எனப்படும் சட்ட விதிகளைக் கொண்டு வந்து அதை ஏற்றுக் கொள்கிறேன் என்பதைத் தெரிவு செய்யுமாறு கேட்கும். ஆனால் அதைக் கவனித்து வாசிப்பீர்களாயின் அதில் அவர்கள் செய்யும் குளறுபடிகள் எல்லாம் இருக்கும். அதை மறுத்துப் பாருங்கள். சில நேரம் உங்களுக்கு தேவைப்படும் மென்பொருள் மட்டுமே தற்போது உங்கள் கணனிக்குள் வர முடியும். அவ்வாறு மறுக்க அனுமதிக்கா விட்டால்,'போய்யா, நீயும் உன் ஓசியும்' என்று நடையைக் கட்டுங்கள். வானத்தில் போன சனியன்களை ஏணி வைத்து இறக்கியது போல தொல்லைப்படாதீர்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login