Recent Comments

    முண்டியடித்துக் கொண்டு செய்திகளை முந்தித் தருவது தாயகமே!

    news1 கனடாத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களிடையே மோதலா? ஆனந்தசங்கரியின் மகனின் வேட்புப் பதாகைகள் கிழிக்கப்பட்டன!

    IMG_20150905_091608 நடிகையின் நிர்வாணக் குளியல் வீடியோ, யாழ்ப்பாணத்தில் 167 பேருடன் உறவு கொண்ட பெண்ணுக்கு வாழ்த்துக்கள், சுவிசில் கணவனை விட்டு இன்னொருவருடன் ஓடிப் போன பெண் போன்ற தமிழ் மக்களுக்குப் பயனுள்ள விடயங்களை வெளியிடாமல் தமிழர்களுக்குச் சிந்திக்கத் தெரியும் என்று நேரம் செலவிட்டு நாங்கள் வெளியிடும் கட்டுரைகளை எவரும் முகப்புத்தகத்தில் லைக் பண்ணியோ, ஷெயர் பண்ணியோ கௌரவிக்காததால், நாங்களும் செய்திகளை முண்டியடித்துக் கொண்டு முந்தித் தருகிறோம். 90 ஆயிரம் தமிழர்கள் கலந்து கொண்டதாக அண்டப்புழுகு வெடி போட்ட தமிழர் கொத்துரொட்டி விழா நடந்த அதே பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் காலை நேரங்களில் இரண்டு டொலருக்கு விற்கப்படும் இரண்டு தோசை, இரண்டு இட்லிகளுடன் போனசாக வடையும், சுடச்சுட கோப்பியும் வாங்கிக் கொண்டு வரும் போது, அந்த வளைவில் தேர்தல் பதாகைகள் அனைத்தும் ஒரே  வடிவத்தில் கிழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, காரை அடுத்த சிக்னலில் திருப்பி, (மயிர்க்கூச்செறிய!) போய், சூரிய வெளிச்சம் கண்ணில் குத்த, செல்பி எடுக்கும் பழக்கம் இல்லாததால் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத செல்போன் கமெராவில் தெளிவில்லாமல் சில படங்களை எடுத்துக் கொண்டு மீதி எங்கள் கற்பனையையும் கலந்து இந்த மயிர்க்கூச்செறியும் செய்திகளை தாயகம் வாசகர்களுக்காக வெளியிடுகிறோம். இதை உடனடியாக லைக் பண்ணி, ஷெயர் பண்ணுவதன் மூலம் தமிழினத்தின் விடிவுக்கு உங்களாலானதை (ஏதோ!) செய்வதன் மூலம் உங்களுக்கு தமிழ் இரத்தம் ஓடுவதை உறுதி செய்யுங்கள். சரி, கனடா அரசியல் நிலவரங்கள் தெரியாத வெளிநாட்டுப் புலன் பெயர்ந்தோரின் வசதி கருதி.. (ஏதோ இங்கே இருப்பவர்களுக்கு விசயம் தெரிந்தது மாதிரி!) பின்னணிக் கதை பற்றிய முன் கதைச் சுருக்கம்... கனடாவில் தமிழினத் தலைவியை தெரிவு செய்து கனடா பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கும் பெருமையைச் செய்த புலன் பெயர்ந்த தமிழர்கள் வாழும் ரூஷ் நதிப் பள்ளத்தாக்கு தொகுதியின் எல்லை மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, புதிய தொகுதியில் லிபரல் கட்சிச் சார்பில் ஆனந்தசங்கரியின் மகன் கரி ஆனந்தசங்கரி போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல கிரிக்கட் வீரர் சாந்திகுமார் போட்டியிடுகிறார். IMG_20150905_091507இருவருடைய ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்தப் பகுதியை சிவப்பு, தோடம்பழ நிறப் பதாகைகளால் நிறைத்துள்ளார்கள். இங்கு வாழும் தமிழுணர்வாளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேசியத் தலைவரின் ஆணைக்காய்க் காத்திருக்கும் வேளையில், கொத்துரொட்டி விழாவில் நாடு கடந்த அரசாங்கத்திற்கு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்ய இடம் அளிக்கப்படாதது பற்றி பெரிய வாதப்பிரதிவாதங்கள் (முகப்புத்தகத்தில் தான்!) இடம் பெற்று வருவது தமிழுணர்வாளர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்படி தமிழர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், இவர்கள் தேசியத் தலைவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தவர்களா என்ற கேள்விக்கான பதிலைப் பொறுத்தே தமிழுணர்வாளர்களின் வாக்குகள் விழும் என்ற நிலையில், ஊரில் சங்கரியருக்கு உள்ள மரியாதை காரணமாக, தனயன் அவருக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை இல்லை என (இரத்த?) இயேசுவை தலைமைச்சீடன் மறுத்தது போல மறுத்திருந்தார். சாந்திகுமாரின் தேசியத் தலைவர் தொடர்பான நிலைப்பாடு பற்றி நமக்கு இன்னமும் தெரியாது. இருந்தாலும், கனடியத் தமிழுணர்வாளர்களின் மேய்ப்பர்கள் லிபரல் வேட்பாளரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று வரிந்து கட்டுவதாக கதைகள் அடிபட்டன. IMG_20150905_091538 இந்த நிலையில் ஈழத் தேர்தல் பிரசாரப் பாணியில் இங்கே பதாகைகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்கள் தங்கள் கொத்துரொட்டியோடு ஈழத் தேர்தல் பிரசாரப் பாணிகளையும் கனடிய அரசியலில் அறிமுகம் செய்து, பல்கலாசாரக் கனடாவின் கலாசாரப் பண்பாடுகளுக்கு வளம் சேர்ப்பார்கள் என்று தமிழுணர்வாளர்கள் பெருமை கொண்டுள்ளனர். கொத்துரொட்டி விழாவில் முன்னாள் கனடியப் பிரதமர் ரூடோவின் மகனும் தற்போதைய லிபரல் கட்சித் தலைவராக இருந்து கனடிய பிரதமராகும் வாய்ப்பும் உள்ள ஜஸ்டின் ரூடோவை  கொத்துரொட்டி அடிக்க வைத்தது இதற்கான அடிக்கல் நாட்டே என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பரும், புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரான தோமஸ் மல்கெயரும் அடுத்த கொத்து ரொட்டி விழாவுக்காக வாய் ஊறிக் கொண்டிருப்பதாக உட்கட்சித் தகவல்களை அறிந்த எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.IMG_20150905_091522  

    (சரி, இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இங்கே இருக்கும் மற்ற விடயங்களையும் வாசித்தால் என்னவாம்?)

    Postad



    You must be logged in to post a comment Login