இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!
ஜோர்ஜ் இ.
சில நேரங்களில் எங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கும். எதிர்பாராத கணங்களில், எதிர்பாராத விதங்களில் நடைபெறும் சம்பவங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அதிலும் துயரமான, துன்பமான நிகழ்வுகள் என்றதும் மனம் சஞ்சலப்படும். ஏன் இதெல்லாம் நடக்கிறது என்ற கேள்வி எழும். அவற்றுக்கான விளக்கங்களை எங்கள் மனங்கள் தேடிக் கொண்டிருக்கும். விதி, கஷ்ட காலம் என்றெல்லாம் மனம் தனக்குத் தானே ஆறுதல்களைக் கூறிக் கொள்ளும்.
இதைவிட, தற்செயலாக நடக்கும் சில சம்பவங்கள் ஏதோ எங்கோ யாரோ திட்டமிட்டுச் செய்தது போல இருக்கும். தானாகவே நடக்கும் நிகழ்வுகள் சில நேரம் எங்கள் கட்டுப்பாட்டையும் மீறி, எங்கள் எதிர்பார்ப்புகளை சிதறடித்து கவலைக்குள் ஆழ்த்தும். அவற்றுக்கான தொடர்புகள் என்னவாக இருக்கும் என்று மனம் குழம்பும்.
அவற்றில் மனதில் இன்றும் நிழலாக இருக்கும் சில நிகழ்வுகளை அவ்வப்போது இரை மீட்டிப் பார்க்கத் தோன்றுகிறது.
* * *
இன்றைக்கு சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால்...
நாங்கள் புதிய தம்பதிகளாய் வாழ்ந்த கட்டடத் தொகுதி. எங்களுக்கு மகன் பிறந்து ஆறு மாதங்கள் இருக்கும்.
பக்கத்து வீட்டில் பிலிப்பினோக் குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களின் குழந்தைகளுடன் தாய்க் கிழவி. இவர்களை அடிக்கடி அந்தக் கிழவியின் மற்ற மகள் தன் கணவனுடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு. இளம் தம்பதியினர். குழந்தைகள் இல்லை. கணவன் உயரமானவன். பெண் செந்தளிப்பான முகம் கொண்டவள். அடிக்கடி எலிவேட்டரில் காண்பதுண்டு. கண்டாலும் சிரிக்காத தமிழர்கள் போலன்றி, தயக்கமில்லாமல் உரையாடுவார்கள்.
பகலில் பிள்ளைகள் வேலைக்குப் போனால் கிழவி தனியே குழந்தையோடு இருக்கும். ஆங்கிலம் அறவே தெரியாது.
ஒரு நாள், எங்கள் கதவு தட்டிச் சத்தம் கேட்டது. திறந்தால் கிழவி! கையில் அழுகையை நிறுத்தாத குழந்தை!
கிழவிக்கு ஆங்கிலம் தெரியாது. சைகை மூலமாக 'குழந்தை நிறுத்தாமல் அழுது கொண்டிருக்கிறது' என்றும் எனது வீட்டுக்காரியை அந்தக் குழந்தையின் நெற்றியில் கையை வைத்திருக்கும்படி கேட்டது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. அழும் குழந்தைக்கு நெற்றியில் கை வைத்து என்ன பயன் என்பது எங்கள் நினைப்பு.
என்னவோ, நம்ம முகராசி... குழந்தைகள் நம்மை அண்டாது. அதிலும் கண்ணை உருட்டி செய்யும் சேட்டைகளால், தாய்மாரின் பின்புறம் ஒளித்து நின்று, எட்டிப் பார்த்து ஒளித்து விளையாடும் குழந்தைகள் அதிகம்.
வீட்டுக்காரி அப்படி அல்ல. எந்தக் குழந்தையும் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.
குழந்தையை நெஞ்சில் வைத்து அணைத்திருந்து, குழந்தை அழுகையை நிறுத்த நீண்ட நேரம் சென்றது.
அது களைத்துப் போய் தூங்கிப் போகும் சாதாரண அழுகை அல்ல. ஏதோ ஒரு அழுகை!
* * *
அன்றைய தினம், அடிக்கடி வந்து போகும் கிழவியின் மகளும் மருமகனும் எங்கோ போயிருக்கிறார்கள். பாதாள ரயிலுக்காக கீழே வந்த போது, புகையிரதம் புறப்படுவதற்காக கதவை மூட, மகள் பாய்ந்து கதவைப் பிடித்துக் கொண்டு, மூட விடாமல் கணவனையும் உள்ளே நுழைத்திருக்கிறாள்.
இவர்கள் அமர்ந்திருந்தது கடைசிப் பெட்டி.
அன்றைய தினம், வேலையில் சேர்ந்து இரண்டே நாட்களான சாரதி, தனது ரயிலை கவனக் குறைவாகச் செலுத்திக் கொண்டு இரண்டு சிவப்பு விளக்குகளைத் தாண்டி, வளைவில் திரும்பிய போது, திடீரென்று முன்னால் இவர்கள் பயணம் செய்த புகையிரதம் தரித்து நின்றிருக்கிறது.
ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வந்த விபத்து. சாரதி பாய்ந்து தப்பி விட்டார். பின்பெட்டியில் அவசரப்பட்டு பாய்ந்து வந்து ஏறிய கிழவியின் மகள் அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். மருமகன் இரண்டு கால்களையும் இழந்தான்.
அந்த நேரம் தான் அந்தக் குழந்தை எங்கள் வீட்டுக்கு அழுதபடி வந்திருந்தது!
* * *
(ஆகஸ்ட் 11, 1995 அன்று நடந்த விபத்து பற்றி, இருபது வருட நினைவாக இன்றைய ரொறன்ரோ ஸ்டாரில் செய்தி வந்திருக்கிறது, அந்தப் பெண்ணின் படத்துடன்! அதில் கிடைத்த நஷ்ட ஈட்டுக்காக கணவனும் கிழவி குடும்பத்தினரும் சண்டையிட்டுக் கொண்டதாக என்னோடு வேலை செய்த பிலிப்பினோ நண்பர்கள் முன்பு சொல்லியிருந்தார்கள்!
அந்த விபத்து நடந்த தினம், ரொறன்ரோவின் போக்குவரத்துக்குப் பொறுப்பான சபையின் தலைமை அலுவலகத்தில் திரண்ட பலர் தாங்களும் அந்த ரயிலில் பயணம் செய்ததாக நட்ட ஈட்டுக்கு பதிவு செய்ய வந்திருந்தார்கள். அவர்களில் பலரிடம் அவர்கள் எந்தத் திசையில் பயணம் செய்தார்கள் என்று கேட்ட போது சரியான பதிலைச் சொல்ல முடியாதவர்களாக இருந்தனர். தாங்களும் அதில் பயணம் செய்ததாகக் கூறி நட்ட ஈடு பெற வந்த கூட்டம்.
இது தான் உலகம், இது தான் வாழ்க்கை!)
You must be logged in to post a comment Login