மூன்று மனிதர்கள்
க. கலாமோகன்
மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும் லாவகமாக ஓட விட்டு மூன்று மனிதர்கள் மீதும் தனது விழிகளை எறிந்தபடி அவர்களைக் கடந்தாள்.
2-பார் அவளை!
1-நான் அவளை ஏற்கனவே சுவைத்துமுள்ளேன்.
2-உனக்கு அவளைத் தெரியுமானால் ஏன் அவள் உன்முன் வரவில்லை?
1-அவளை நான் சுவைத்தேன். ஆனால் என்னைத் தேடிவந்தது அவளல்ல. நானே அவளது உடலை நோக்கி ஓடினேன்.
2-அதற்குப்பின். . .?
1-நான் அவளை எனது றூமுக்கு அழைத்தேன். அவளோ ஹோட்டலுக்கு என்னை அழைத்தாள். தனக்கு இருபது ஈரோ என்றும் ஹோட்டலுக்கும் இருபது என்றும் சொன்னாள். வீட்டுக் கட்டில் உறவுக்கும் ஹோட்டல் கட்டில் உறவுக்குமிடையிலே நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியுமானபோதும் நான் எனது மனைவியுடன் வாழ்வதால் அவளை எனது வீட்டுக்கு அழைக்க முடியாது போயிற்று. நான் திருமணமானவன். எனது மனைவியை ஒவ்வொரு இரவிலும் நான் சுவைக்கின்றபோதும் ஏனைய உடல்களைக் காணும்போது எனது தாகக்கிணறு கொந்தளிக்கின்றது.
2-என்னிடம் இன்று 40 ஈரோ இல்லை. இருந்தால் நான் அவளோடு போயிருப்பேன். நாளையும் அவள் எங்களைக் கடந்து செல்வாளா?
1-நீ முதலாவது தடவையாக இந்த இடத்தில் இருப்பதால் உனக்கு அவளின் அசைவுகள் பற்றித்தெரியாது உள்ளதை என்னால் விளங்க முடிகின்றது. இந்த வாங்கிலில் நான் ஒவ்வொரு மாலையிலும் இருப்பதுண்டு. அருகிலே துங்கிக்கொண்டிருப்பவரும் இங்கு அடிக்கடி வருவார்.
2-அவரும் அவளைச் சுவைத்ததுண்டா?
1-நான் இந்த இடத்தை விட்டுப் பிரியும் வேளை அவரது பிரியும் வேளையாக இல்லாது இருப்பதால் இந்தப் பிரியும் வேளைக்குப்பின்னர் அவர் எப்படி அசைகின்றார் என்பது பற்றி என்னால் பெரிதாக எதுவுமே சொல்ல முடியாது.
2-அவரோடு நீங்கள் அவள் பற்றிக் கதைத்ததில்லையா?
1-அவரோடு நான் பல விஷயங்கள் பற்றிக் கதைத்துள்ளேன். அவளைக் காணும்போது நான் அவளோடு சென்றுவிடுவதால் எங்களது சம்பாஷனை தடைப்பட்டு விடுவதுண்டு.
2-நீங்கள் அவளோடு போகும் கணத்தில் அவருக்கும் அவளோடு போகவேண்டும் என்கின்ற துடிப்பு அவருக்குள் இருந்திருந்தால். . .
1-எனக்குள்ளும் இந்தக் கேள்வி எழுந்ததுண்டு. அவர் அவளோடு போனதை நான் ஒருபோதுமே கண்டதில்லை. இதனை வைத்து அவர் அவளோடு போகவில்லை என்று முடிவெடுக்கவும் முடியாது. அவர் அவளோடு போனாரா, போவாரா, போகவில்லையா, கட்டாயம் போகவேண்டுமா என்கின்ற கேள்விகள் ஒருபோதுமே எனக்குள் எழுந்ததில்லை.
2-அவர் எப்போதும் தூங்கிக்கொண்டிருப்பவரா?
1-தூங்குவார், விழிப்பார்.
2-அவர் எப்போது விழிப்பார்?
1-அவர் அபூர்வமாகவே தனது விழிகளைத் திறப்பதுண்டு. அது எப்போது என்று என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.
2-அவரை நாங்கள் எழுப்பினால்?
1-தூங்குபவர்ளைத் தூங்கவிடுவோம்.
2-நாளை நான் இங்கு 40 ஈரோவுடன் வருவேன். அவள் வருவாளா?
1-வா! அவள் வருவாள்.
முதலாவது மனிதன் போனபின்னர் இரண்டாவது மனிதன் சில கணங்கள் வாங்கில் இருந்துவிட்டு தானும் போக வெளிக்கிட்ட வேளையில் மூன்றாவது மனிதனின் விழிகள் திறபட்டன.
3-காலை வணக்கம்!
1-நன்றி! எனது சார்பில் உங்களுக்கு மாலை வணக்கம்!
3-காலம் வெளிச்சங்களோடும் நிறங்களோடும் சம்பந்தப்பட்டதென்பது உங்களது கணிப்பெனக் கருதுகின்றேன்.
1-நாங்கள் சொல்களினது கைதிகள். காலம் நிலத்தினதும் வானத்தினதும் காதலியாக இருந்த காலம் மடிந்துவிட்டது. காலம் இப்போதோ மொழியின் கைதி.
3-எனது முதலாவது காதலியின் கதையை கேட்க உங்களுக்கு நேரம் உள்ளதா?
1-நான் போக வெளிக்கிட்டேன். இதற்கு அர்த்தம் நான் கட்டாயமாகப் போகவேண்டும் என்பதல்ல. அவள் இன்று ஒரேயொரு தடவைதான் எங்களைக் கடந்து சென்றாள். அவள் மீண்டும் வருவாள் என்கின்ற எதிர்பார்ப்பே என்னை இவ்வளவு நேரமும் என்னை இங்கே இருக்கவைத்தது. சரி! உங்களது முதலாவது காதலியின் கதையை நான் கேட்கத்தயார்.
3-அவளின் கதையை என்னால் ஒரே தடவையில் சொல்லமுடியாது. அதனை என்னால் பிரித்துப்பிரித்தே சொல்லமுடியும். பல மாதங்களுக்குக் கதை இழுபடலாம்.
1-படங்கள் தொடங்கிய பின்னரேயே திரைச்சாலைகளுக்குள் நுழைகின்ற அனுபவம் எனக்கு அதிகமாகக் கிடைத்ததால் இடையில் இருந்தும் கதைகளை விளங்க என்னால் இப்போது முடிகின்றது.
3-அவளை நான் ஓர் மலையின் அருகில் முதல் தடவையாகக் கண்டேன். அவளது நீள் கூந்தல் நனைந்திருந்தது. கலைந்து கிடந்த கூந்தலிலே நான் இப்போது பெயரை மறந்துவிட்ட வெண்ணிறப்பூக்களின் சில இதழ்கள் விழமுடியாமல் அலைந்துகொண்டிருந்தன. இந்த இதழ்களின் நிறமே அவளது இதழ்களின் நிறமாகவும் இருந்தது. எனது விழிகளின் மொழிகளைக் கண்டு அவளது விழிகள் தாழ்ந்தன. அருகில் சென்று 'உன்னை நான் விரும்புகின்றேன்' எனச் சொன்னேன். அவள் பதில் தந்த மொழி எனக்கு விளங்கவேயில்லை. என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அவளது சிரிப்பை ரசித்தேன். அவள் மீண்டும் பேசினாள். எனக்கோ விளங்கவேயில்லை. திடீரென அவள் என் முகத்தைவிட்டு மறைந்தாள். நான் அவளைத்தேடி ஓடினேன். தேடினேன். அழுதேன். காலையில் ஓர் உப்புக் கடலின் கரையில் விழித்தேன்.
1-உப்புக் கடலுக்கும் மலைக்கும் இடையேயுள்ள தூரம் அதிகமானதா?
3-அதிகமானது எனச் சொல்லமுடியுமானாலும் அவளது உடலின்முன் தூரம் பற்றிய பிரக்ஞை எனக்குள் ஏற்படவேயில்லை.
1-மறுதினம் மலைக்குச் சென்றீர்களா? அவளைக் கண்டீர்களா?
3-அவளைக் கண்டேன். தனியாகவல்ல. ஓர் ஆணுடன். அவன் அவளது உதடுகளை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
1-உங்களுக்குப் பொறாமை வரவில்லையா?
3-முதலில் எனக்குப் பொறாமை வந்தது. பின்னர் எனது இரண்டாவது காதலி எழுதிய ஓர் கவிதை ஞாபகத்துக்கு வந்ததால் சற்றே அமைதியாகிக்கொண்டேன்.
1-அந்தக் கவிதையை நான் கேட்கலாமா?
3-''நீ போகும் வீதிகளை
நான் ஒருபோதுமே தேடமாட்டேன்
ஆனால் எனது வீதியை மட்டும்
நீ மறந்துவிடாதே!''
1-இந்தக் கவிதைக்கு நீங்கள் தரும் மொழிபெயர்ப்பு எது?
3-நான் கவிதைகளை மொழிபெயர்ப்பவன் அல்லன். வாசிப்பவன். வாழ்பவன்.
1-இந்தக் கவிதை கவிதையே அல்ல, கருத்து.
3-கருத்து எனக்குத் தெரியாது. கவிதையை வாசிக்கப் பிறந்தனவே எனது விழிகள்.
1-கவிதை போலியானது.
3-ஏன்?
1-அது யதார்த்தத்தைக் காட்டுவதில்லை.
3-கவிதை போலியானது எனில் ஏன் கருத்தின் காவலர்களால் கவிஞர்களும் கவிஞைகளும் கொல்லப்பட்டனர், கொல்லப்படுகின்றனர்?
1- நேரம் போய்விட்டது. உங்களது முதலாவது காதலியினது கதையில் தொடங்கி எங்கோ வந்து விட்டோம். எனது மனைவி காத்திருப்பாள். நாளை சந்திப்போம்.
3-நீங்கள் போகும் தருணத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பதற்காக என்னை மன்னிக்கவும். அவள் உங்களது காதலியாக இருந்தாளா?
1-இல்லை.
------------
மறுநாள் முதலாவது மனிதரும் இரண்டாவது மனிதரும் வாங்கிலிலே இருந்தனர்.
2-எங்கே அவரைக் காணவில்லை?
1-முறைப்படி அவர் எனக்கு முன்பே வந்துவிடுவார். அவரை இந்த நேரத்தில் நான் காணாமல் இருப்பது இதுதான் முதல்தடவை.
2-சிலவேளை அவர் பிந்தி வரலாம் அல்லவா!
1-நீங்கள் சொல்லுவதும் சரி. நேற்று நீங்கள் சென்றபின் சற்றுநேரம் அவரோடு உரையாடினேன். முதலாவது தடவையாக அவர் எனக்குத் தனது காதல் கதையைச் சொல்லத்தொடங்கினார்.
2-அது ஓர் சோகக்கதையா?
1-காதல் கதைகள் எல்லாம் சோகக் கதைகள் என்பதா உங்கள் கணிப்பு?
2-கணிப்பல்ல, அனுபவம். நான் எனது கதையைச் சொல்லவா?
1-இப்போது சொல்லவேண்டாம். அவரது கதையை நான் கேட்டபின்னர் உங்களது கதையை நிச்சயமாகக் கேட்பேன்.
2-அவள் இன்றும் வருவாளா?
1-அவள் ஒவ்வொரு நாளும் வருபவள்.
2-அவரைப்போல அவளும் வராதுவிட்டால். . .
1-அவரைவிட அவளை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் கட்டாயம் வருவாள்.
2-நான் 40 ஈரோவோடு வந்துள்ளேன். அவளைச் சுவைக்கவேண்டும் என்கின்ற தாகம் எனக்குள் பொங்கிக்கொண்டுள்ளது.
1-பார் அவள் வருகின்றாள்.
2-எங்கே?
1-அங்கே பார்!
2-அங்குதான் பார்க்கின்றேன். ஒரு பெண்ணின் தலைகூடத் தெரியவில்லையே.
1-உண்மை. அவள் தூரத்தில்தான். அவள் எவ்வளவு தூரத்தில் நின்றாலும் நான் எனது விழிகளால் அவளை அடையாளம் கண்டுவிடுவேன். அவளது தொப்புள்கூட எனக்குத் துல்லியமாகத் தெரிகின்றது. அதுபோன்ற அழகியதும் ஆழமானதுமான தொப்புளை எனது விழிகள் எங்குமே கண்டதில்லை.
2-இன்று உங்களிற்குமுதல் நான் அவளைச் சுவைக்கலாமா?
1-எனக்கும் இன்று அவளைச் சுவைக்கவேண்டும் என்கின்ற தாகம் அவளைத் துரத்தில் பார்த்தபோதே வந்துவிட்டது. நீங்கள் ஒருபோதுமே அவளைச் சுவைக்காதபடியால், உங்களுக்குப் பின்னர் காத்திருக்கத் தயார்.
அவள் அருகில் வந்துவிட்டாள். இரண்டாவது மனிதனின் விழிகள் குதறும் வேகத்துடன் அவளைப் பார்த்தன. தனது நாக்கை மேலுதட்டின்மீது சற்றே ஓடவிட்டபடி அவரைப் பார்த்துக்கொண்டு முதலாவது மனிதரின் முன்னே வந்தாள்.
1-உனது உடலில் தினத்துக்குத் தினம் கவர்ச்சியை அதிகரிக்கும் வித்தையை எங்கே கற்றுக்கொண்டாய்?
அவள்: ஆண்களது பள்ளிகளில்.
1-உனது பதில் உன்னோடு என்னைப் பேசத் தூண்டுகின்றது. உனக்காக இவர் காத்திருக்கின்றார். நீ இவருக்குத் தேவையானதைக் கொடுத்து முடித்தபின் கட்டாயம் இங்கே வா! உனது கோலம் எனக்குள் வெறி நெருப்பைக் கிளறிவிட்டது.
'வா!' என அவள் அழைத்ததும் அவர் எழுந்தார். இருவர் உருவமும் மறைந்தபின்னர் முதலாவது மனிதன் அவளுக்காகப் பல மணித்தியாலங்கள் காத்திருந்தார். இந்தக் காத்திருப்பு வேளையில் மூன்றாவது மனிதன்கூட வரவில்லை. மிகப்பெரிய மனவருத்தத்துடன் தனது வீட்டை நோக்கி நடந்தார்.
------------
இன்று மூவரும் அதே வாங்கிலில். வழமைபோல மூன்றாவது மனிதன் தூங்கிக்கொண்டிருந்தான்.
2-என்னை மன்னித்துக்கொள்.
1-எதற்காக?
2-நேற்று நீ அவளுக்காக நீண்டநேரம் காத்திருந்திருப்பாய். அவள் வராததற்கு அவள் ஓர் காரணமாக இருந்தாலும் நானும் ஓர் காரணமே. அவளோடு நான் விடியும்வரை இன்பம் சுவைத்தேன். இது காரணமாக வேலைக்குக்கூட பிந்தியே சென்றேன்.
1-நேரம் பிந்தப்பிந்த என்னால் இந்த அனுமானத்திற்கு வரமுடிந்தது.
2-இன்றும் அவள் வருவாளா?
1-வருவாள். ஆனால் அவள் எனக்காக. நேற்று உனது காதல் கதையை எனக்குச்சொல்ல விரும்பினாய். சொல்.
2-நேற்றைய தினத்திலிருந்து எனது காதல் கதை எனக்கு மறந்துவிட்டது. மரியாவின் கதையை நான் உனக்குச் சொல்லவா?
1-உனக்குத் தெரிந்த கதை எனக்கும் தெரிந்த கதையே.
2-இதனை எப்படி உன்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும்?
1-இந்த வாங்கிலில் எனது அருகில் நீ இருந்ததாலேயே அவளின் உடலை உனக்குத் தெரியும்.
1-அவள் உனது சொத்தல்ல.
2-அவள் உனது சொத்துமல்ல.
1-அவள் இன்று வருவாள். எனக்காக.
2-இல்லை எனக்காகவே.
1-ஓர் இரவில் அவள் உனது சொத்தாகிவிட்டாளா? நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவளோடு நீ சுகம் பெறுதல் தடைப்பட்டிருக்கும்.
2-அவள் வேசை! அவளை யாரும் வாங்கலாம்.
1-நான் அவளை வாங்கவில்லை. வாழ்கின்றேன்.
2-அவளைச் சுகிப்பதற்காக நீயும் என்னைப்போல பணம் கொடுக்கின்றவன் அல்லவா?
1-நான் வேலை செய்கின்றேன். எனக்கு முதலாளி சம்பளம் எனும் பெயரில் பணம் தருகின்றான். இதற்கு அர்த்தம் நான் அவனுக்கு எனது உடலைக் கொடுக்கின்றேன் என்பதா?
2-என்னை மன்னித்துக்கொள்! நான் உன்னோடு காரசாரமான மொழிகளால் கதைத்துவிட்டேன். நான் பல வருடங்களாக செக்ஸ் உறவு எதுவும் செய்யவில்லை. அவளோடு நான் எனது முதலிரவை வாழ்ந்தேன். எனது கதையை நான் உனக்குச் சொல்ல விருப்பமெனச் சொன்னபோது தூங்கிக்கொண்டிருப்பவரின் கதையகை; கேட்ட பின்னரேயே எனது கதையைக் கேட்பதாக நீ என்னிடம் சொன்னாய். எனது கதையைக் கேட்டால் உனக்கு எனது கொந்தளிப்பு விளங்கும்.
1-அவர் எப்போது விழிப்பார் என்பது எனக்குத் தெரியாது. சரி உனது கதையைச் சொல்.
2-அவர் விழிப்பதற்கு முன்னர் எனது கதையைச் சொல்லி விடலாம் என நினைக்கின்றேன்.
1-சொல்!
2-நான் ஒருபோதுமே எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை. காதலிக்கும் உரிமையை எனது பெற்றோர் எனக்குத் தரவில்லை. அவர்களே எனக்காகப் பெண் பார்த்தனர். எனக்குப் பெண் பிடித்தபோது அது அவர்களுக்குப் பிடிக்காததாலும், அவர்களுக்குப் பிடித்தவேளையில் அது எனக்குப் பிடிக்காததாலும் பல ஆண்டுகளாக எனக்கோர் பெண் கிடைக்கவில்லை. ஆனால் எனக்கும் பெற்றோரிற்கும் பெண்கள் பிடித்தவேளையில் பெண்களுக்கோ என்னைப் பிடிக்காதுபோய்விட்டது.
1-ஏன்?
2-எனது வயது ஓர் காரணமாக இருக்கலாம். எனது பெற்றோர் காலமானபின்னர் நான் திருமண வாழ்க்கையை வெறுத்தேன். எனது செக்ஸ் தேவைகளை வாழ விபச்சாரிகளைத் தேடினேன்.
1-உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்குமென நினைக்கின்றேன்.
2-அவைகளை அனுபவம் எனச் சொல்லமுடியாது. ஆனால் நேற்றுக் கிடைத்தது அனுபவம் அல்ல, வாழ்வு. இது காரணமாகவே அது எனக்குக் கிடைத்த முதலிரவு என்றுவேறு சொன்னேன். எனது மனைவியாக வா என அவளிடம் நான் கெஞ்சினேன். மறுத்துவிட்டாள்.
1-அவளின் சுயசரிதம் எனக்குத் தெரியாது. ஆனால் அவளது கட்டிலில் கிடைக்கும் சுகம் எனக்கு எனது வீட்டின் கட்டிலில் கிடைப்பதில்லை.
2-இது உங்களது மனைவிக்குத் தெரியுமா?
1-எனது மனைவி அழகானவள், கவர்ச்சியானவள். அவளிற்கு இன்பம் கொடுப்பதற்குக்கூட எனக்கு இவளின் முகத்தினது நினைவு தேவையானதாக உள்ளது.
2-உங்களது காதல் திருமணமா?
1-எனது மனைவியை அவளது உடலின் கவர்ச்சிக்காகவே நான் காதலித்தேன். பலர் அவள் பின்னே வெறிபிடித்து அலைந்தபோதும் என்னால் அவளை அடையமுடிந்தது. காமசூத்திரத்தின் அனைத்துப் பக்கங்களையும் அவளோடு வாழ்ந்த பின்னரேயே அது ஓர் முற்றுப்பெறாத புத்தகம் என்கின்ற முடிவு எனக்குள் ஏற்பட்டது.
2-உங்களது உடல் விலங்குகள் அற்றது எனக் கருதுகின்றேன்.
1-அது உண்மைதான்.
அவள் வந்தாள். இரண்டாவது மனிதனோடு எதுவும் பேசாமல் முதலாவது மனிதனைப் பார்த்தாள். உதட்டில் முத்தமிட்டாள். பின்னர் இருவரும் இரண்டாவது மனிதனின் முகத்தைவிட்டு மறைந்தனர். தனக்குள் பொங்கிய தாகத்தை அடக்கிக்கொண்டு அவன் மூன்றாவது மனிதனைப் பார்த்தான். அவனோடு பேசவேண்டும் என எண்ணியபோதும் அவனது ஆழ்தூக்கத்தைக் கண்டதால் பேசுவதைத் தவிர்த்து ஓர் சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். இன்னொருத்தி அவனைக் கடந்தபோது கண் சிமிட்டினாள். அவனுக்கோ அவளுடன் செல்வதற்கான எந்த விருப்பமுமே வரவில்லை. நிலத்தை இருள் கௌவத் தொடங்கியபோது அவன் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
--------------
மறுநாள் இரண்டாவது மனிதன் தனது மாலை இருக்கையை நோக்கி நடந்துவந்த வழியில் மூன்றாவது மனிதனைக் கண்டான். ஒருபோதுமே அவனோடு கதைத்திருக்காதபடியால், கதையைக்கொடுக்காமல் அவன் பின்னால் நடந்தான். இருவரும் வந்து அதே வாங்கில் அமர்ந்தனர். Sade இனது “Le crime de l’amour” புத்தகத்தை புரட்டிப்பார்த்துவிட்டு தனக்கு அருகில் வைத்தான் மூன்றாவது மனிதன்.
2-உங்களோடு நான் பேசலாமா?
3-பேசலாம்.
2-தூங்கும் வேளைகளிலேயே நான் உங்களைக் கண்டதுண்டு. உங்களது ஓய்வைத் தடைசெய்யக்கூடாது என்பதற்காகவே நான் பேசத் தயங்கினேன்.
3-நான் தூங்குவது ஓய்விற்காகவல்ல. கனவிற்காக.
2-நான் சில தினங்களின்முன் ஓர் கனவை வாழ்தேன்.
3-நீங்கள் அதிஸ்டசாலி.
2-நான் வாழ்ந்த கனவை இன்று, இந்தக்கணத்தில் இன்னொருவர் வாழ்ந்துகொண்டுள்ளார்.
3-அவரும் அதிஸ்டசாலியே.
முதலாவது மனிதனின் முகம் தூரத்தில் தெரிந்தது.
2-நான் வாழ்ந்த கனவை வாழச்சென்றவர் வந்துகொண்டுள்ளார்.
3-அவரை எனக்குத் தெரியும்.
2-எனக்கும்.
அவர் அவர்களுக்கு மாலைவணக்கம் சொல்லிவிட்டு வாங்கில் அமருகின்றார்.
2-இன்று உங்களைக் காணமுடியாது என நினைத்தால். . .
1-நீங்கள் சொல்வது உண்மைதான். அவள் இன்று மிகவும் சோகமாக இருந்தாள். முதலாவது தடவையாக அவளை இந்த நிலையில் கண்டது இன்றுதான். அவள் தனது ஆடைகளைக் களைய வெளிக்கிட்டபோது வேண்டாம் எனச் சொன்னேன். தான் ஆடைகளைக் களையாதுவிட்டால் எனது பணம் தனக்குக் கிடையாது எனச் சொன்னாள். இந்த இரவில் எனக்கு உனது உடல் தேவையில்லை எனச் சொல்லியபடி பணத்தை நீட்டினேன்.
1-அவள் என்ன சொன்னாள்?
2-நீ என்னை நுகராதபடியால் எனக்கு உனது பணம் தேவையில்லை என்றாள்.
1-நீ என்ன சொன்னாய்?
2-நான் எந்த விவாதங்களும் செய்யாமல் அவளது பாதங்களை முத்தமிட்டபின் அவைகளின் முன் பணத்தை வைத்துவிட்டு இங்கு வந்துள்ளேன்.
1-பணத்தை எடுத்துச்செல் என அவள் கேட்கவில்லையா?
2-கத்தினாள். நான் என்னைச் செவிடன் ஆக்கிக்கொண்டேன்.
1-அவள் வித்தியாசாமானவள். எங்கள் கனவுகளை வாழுவதற்குத் தோதானவள். அவளின் துயரம் எங்களது துயரமுமாகும்.
2-எங்களது சம்பாஷனை உங்களுக்குத் தொல்லை தருமாயின் மன்னிக்கவும்.
3-அது எனக்குக் கேட்காது. விழித்துக் கொண்டிருக்கும்போதுகூட நான் தூங்கிக்கொண்டிருப்பவன்.
2-அது எனக்குத் தெரியும். உங்களது கதையை நான் முழுமையாக் கேட்கவில்லை. அதனைத் தொடர முடியுமா?
3-எந்த இடத்தில் அது நின்றது.
2-உங்களது இரண்டாவது காதலியின் ஓர் கவிதையோடு.
3-நீங்கள் சொல்வது சரி.
2-அவளோடு உங்களுக்குத் இப்போது தொடர்பு உள்ளதா?
3-இல்லை.
2-ஏன்.
3-அவள் கொல்லப்பட்டுவிட்டாள்.
1-என்ன கொடுமை! யாரால்?
3-என்னால்.
2-ஏன் அவளைக் கொன்றீர்கள்?
3-அவள் என்னைப் பலதடவைகள் கொன்றாள்.
இரண்டாவது மனிதனும் முதலாவது மனிதனும் தங்களை ஊமைகளாக்கினர். ஆனால் மூன்றாவது மனிதரோ தூங்காமல்.
3-கதையைத் தொடரவா?
அவள் அவர்கள் முன் வந்தாள். மூன்றாவது மனிதனின் விழிகள் மூடிக்கொண்டன.
1-நீ ஏன் இங்கு வந்தாய்?
அவள்: நீ எனது பாதங்களின்முன் விட்டுச்சென்ற பணத்தை உன்னிடம் திருப்பித்தர.
2-எனது மனவிருப்போடுதான் அதனை உனது பாதங்களின் முன்வைத்தேன்.
அவள்-உனது நாணயம் எனக்குத் தெரியும். வா! என்னைச் சுவை! நான் உனது பணத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
2-என்னால் இன்று உனது கட்டிலிற்கு வரமுடியாது.
அவள்-ஏன்?
2-என்னிடம் விளக்கங்கள் இல்லை.
1-அவர் உன்னோடு வரமாட்டேன் என்கின்றார். நான் உன்னோடு வருகின்றேன்.
அவள்- நான் உன்னோடு வரமாட்டேன்.
1- நேற்று உன்னோடு வரச் சம்மதித்தாய். இன்றுமட்டும் ஏன் இந்த மறுப்பு?
அவள்- நாளை எனக்கு நேரம் இருந்தால் நீ என்னோடு வரலாம். இன்று முடியாது. (இரண்டாவது மனிதனிற்கு மிகவும் நெருங்கி) வா! வா!
2-நான் வரமாட்டேன் என்று சொன்னதற்கான காரணம் எனக்கு உன்னோடு வரவிருப்பமில்லை என்பதல்ல. போ! நான் எப்படியும் வருவேன்.
அவள் தனது முதுகைத்திருப்பி நடக்கத் தொடங்கியவேளையில் மூன்றாவது மனிதனின் விழிகள் திறபட்டன.
1-அவள் இன்று மிகவும் கவர்ச்சியாக உள்ளாள். என்னை அவளிடம் கூட்டிச்செல்!
2-மன்னித்துக்கொள். என்னால் முடியாது.
1-நாளை எனக்காக நீ அவளுடன் போகாதிருக்கமுடியுமா?
2-அது அவள் எடுக்கும் முடிவோடு சம்பத்தப்பட்ட விஷயம்.
முதலாவது மனிதன் மூன்றாவது மனிதன் பக்கம் திரும்புகின்றான்.
1-நீங்கள் அவளோடு எப்போதாவது போனதுண்டா?
3-ஆம்.
1-எத்தனை தடவைகள்?
3-ஒவ்வொரு நாளும்.
2-என்ன ஒவ்வொரு நாளுமா?
3-ஆம். ஒவ்வொருநாளும். சிலநாள்களில் பல தடவைகள்.
2-கடந்த பலவருடங்களாக நான் உங்களை இந்த வாங்கிலில் காண்கின்றேன். ஆனால் ஒருதடவைகூட நீங்கள் அவளை நிமிர்ந்துகூடப் பார்த்ததும் இல்லை அவளோடு பேசியதும் இல்லை.
3-நான் பகலிலேயே அவளைச் சுவைப்பதுண்டு.
1-ஒவ்வொரு நாளும் அவளுடன் போகின்றதாகச் சொல்கின்றீர்கள். நீங்கள் வசதியானவர் என்பதல்லவா இதற்கு அர்த்தம்.
3-நான் வசதியும் தொழிலும் இல்லாதவன்.
2-என்ன? அப்படியானால் எப்படி உங்களால் ஒவ்வொருநாளும் அவளுடன் போகமுடிகின்றது?
3-ஏன் முடியாது. அவள் எனது மனைவி.
ஒன்றும் இரண்டும்---- ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
பாரிஸ் 17-06-2003
(நன்றி : புதியகோடாங்கி )
You must be logged in to post a comment Login