Recent Comments

    கனடாவில் இருந்து 140 ஆயிரம் தமிழர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

    Deport இணையத் தளங்களிலும் முகப்புத்தகத்திலும் ஒரே அமர்க்களம். இலங்கை இணையத்தளம் செய்தி வெளியிட, வழமை போல, தமிழ் கொப்பி-பேஸ்ட் இணையங்களும் ஊடகங்களும் முண்டியடித்துக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன. பிறகென்ன, 'காணாமலே விசுவசிக்கும் கனடிய பாக்கியவான்கள்' இந்த இணையங்களைப் படித்து விட்டு, 'என்ன, ஒண்டரை லச்சம் பேரை டிப்போர்ட் பண்ணப் போறாங்களாம்?' என்று புரளி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். கனடாப் பிரதமர் செத்தாலும், வன்னியிலிருந்து வந்தால் மட்டுமே தெரிந்து கொள்கிற நம் கனடிய தமிழர்களுக்கு இது வயிற்றைக் கலக்கக் கூடும். கனடிய செய்திகளை ஆர்வத்துடன் கேட்கும், பார்க்கும் பழக்கம் இருந்திருந்தால் தானே இதன் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு! நமது தமிழர்கள் பலர் பின்னால் திரியும் ஹார்ப்பர் அரசு வழமை போல, வந்தேறுகுடிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைப் பலப்படுத்துகிறது. C-24 எனப்படும் புதிய சட்டமூலம் ஒன்று கனடியக் குடியுரிமை வழங்குவது பற்றி புதிய இறுக்கமான விதிகளை அமுல்படுத்துகிறது. குடியுரிமை விண்ணப்பத்தை நூறு டொலரில் இருந்து மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. கடுமையான சந்தர்ப்பங்களில் குடியுரிமையைப் பறிக்க சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது. குடியுரிமை பெறுவதற்கு கனடிய மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அத்துடன் வேறுநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றோர் யாராவது கனடியக் குடியுரிமை பெற்றிருந்தால் அதைப் பறிக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் அவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே என்பதுடன், குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் ஒருவர் நாடற்றவராகும் நிலை ஏற்பட்டால் அதைப் பறிக்க முடியாது என்ற விதியுடன். இதை அரைகுறையாக விளங்கிக் கொண்ட கொழும்பு ஊடகவியலாளப் பெருமகன் யாரோ, தமிழர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க கனடாவிலிருந்து ஒன்றரை லட்சம் பேர் நாடு கடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்று செய்தி எழுதப் போக, நம் இணையத் தளங்கள் விழுந்தடித்துக் கொண்டு ஊதிப் பெருப்பித்து செய்தி போட, அச்சில் கண்டதை எல்லாம் விசுவசித்துப் பழக்கப்பட்ட நம்மவர்களும் அதை நம்பி இப்போது புரளி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, வந்தேறு குடிகளாக லட்சக்கணக்கில் வந்திறங்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தும். அதை விட, இவர்கள் தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தண்டனை பெற்றிருக்க வேண்டும். இதெல்லாம் கொழும்பு ஊடகவியலாளருக்கு தெரியவில்லை. முதலில் கனடியத் தமிழர்கள் ஈழத்தில் நடப்பதாக கிளப்பப்படும் புரளிகளை நம்ப முதல், தாங்கள் வாழும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அக்கறையாக அறிந்து கொள்ளப் பழக வேண்டும். ஊரைக் கெடுக்கும் கேள்விச் செவியன்கள் போல, மழைக்கு முளைத்த காளான்கள் போல கிளம்பி, பரபரப்புச் செய்தி வெளியிட்டு, சனம் சேர்க்கும் தமிழ் ஊடகவியலாளர்களை நம்பினால் இது தான் பிரச்சனை. சும்மா சதா விஜய் டிவி, சீரியல், மரண அறிவித்தல் தளம் என்பதுடன் அறிவுத் தேடலை நிறுத்திக் கொண்டால், பொய்களை நம்ப வேண்டி வரும். பொய்களை நம்ப புறப்பட்டால், என்ன நடக்கும் என்பது இன்னுமா புரியவில்லை? சுவடி ஆனி 2015

    Postad



    You must be logged in to post a comment Login