குடை
க.கலாமோகன்
வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது சொன்னால் அன்று குளிர். அது குளிர் என்றால் சூடு.
இந்த நிழல் தோற்றம் கூட சுவையானது. மனதை மப்பும் மந்தாரமுமான ஓர் வெளிக்குள் இழுத்துச் சென்றுவிடும். மனித நடமாட்டங்களை இருள் நிறத்துள் பார்க்கும்போது ஓர் மத்திய காலச் சுவாசிப்புக்குள் நான் நுழைந்துவிடுவதுண்டு.
என்றும்போல வீதியில் நிறைய அசைவுகள். திடீரென மழை பெய்யத்தொடங்கியது.
"அசிங்கமான காலம்" என மழையைத் திட்டியபடி பலர் என்னைக் கடந்து சென்றனர்.
குளிர் காலத்தில் குளிரைத் திட்டி கோடைக்கு அழைப்பு விட்டு, கோடை வந்ததும் "சூடு! தாங்கமுடியாத சூடு!" என்றபடி "குளிரே வா!" எனக் கத்துவதையும் கேட்டு நான் செவிடனாகாமல் போனது அதிசயமே.
பலர் பஸ் தரிப்புகளை நோக்கி ஓடினர். பஸ் எடுப்பதற்காக அல்ல, மழையின் மெல்லிய துளிர்களுக்குப் பயந்தே. என்னைக் கடந்து பல குடைகள் சென்றன. எனது விழிகளின் கவனத்தை ஈர்த்தன அவைகளது வடிவமைப்புகள். சிலர் தலைகளில் குடைகள். அவர்கள் கைகளை ஆட்டிக்கொண்டு நடந்தனர். எனது தலையியோ மழை.
"வயோதிபரே! ஏன் மழையில் நனைகின்றீர்கள்? எனது குடைக்குள் வாருங்கள்!" என ஓர் இளம்பெண் என்னை அழைத்தாள்.
நல்ல காலம்! நான் இளைஞனாக இருக்கவில்லை. கிழவர்களாக இருப்பதில் சில சலுகைகள் உள்ளன . ஆனால் முன்புபோல இல்லை. முன்பென்றால் மெட்ரோக்களில் இளசுகள் கிழடுகளைக் கண்டதும் எழுந்து தமது இருக்கைகளைத் தந்துவிடும். இப்போதோ கிழடுகள் எழுந்து இளசுகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய நிலை.
"நனைதல் எனக்கு இடையூறு செய்யும் ஒன்றல்ல, குடையின் கீழ் ஒதுங்குதல் எனக்குப் பயம் தருவதுமல்ல" என்றபடி அவளது குடைக்குள் நான் இடம் பிடித்துக் கொண்டேன்.
"இந்த மழையில் பலர் நனைந்து கொண்டுள்ளபோதும் என்னை மட்டுமே நீ உனது குடைக்குள் வரவேற்றது ஏன்?"
"உங்களை நான் இந்த வீதியில் பல தடவைகள் கண்டுள்ளேன். ஆனால் அதனை ஓர் காரணமாகச் சொல்ல முடியாது. எனது குடை பெரியது. அதுதான் காரணம்."
"நான் எதுவரை போவேன் என்பது தெரியாமல் நீ என்னை வரவேற்றது எனக்கு ஆச்சரியத்தை தருகின்றது."
"நீங்கள் எங்கு போகின்றீர்கள்?
"இந்த மழை இப்படியே தொடர்ந்தால் நான் போகுமிடம்வரை உன்னால் வரமுடியுமா?"
"என்னால் வரமுடியும்".
"அது தூரம்".
மழை விடுவதாகத் தெரியவில்லை. அதனது உக்கிரம் சற்றே கூடியது. நானோ குடைக்குள் இன்னும் நுழையவில்லை. அவள் மீண்டும் எனக்கு அழைப்பு விடுகின்றாள்.
"உங்கள் தலை நனைகின்றது! குடைக்குள் வாருங்கள்!"
"எனது தலை நரைத்துப் பல வருடங்கள்."
"மழைத் துளிகளால் அது மீண்டும் தனது சுய நிறத்தைப் பெற்றுவிடும் என நினைக்கின்றீர்களா?"
"நான் கிழவன் என்பது உனது மதிப்பா? "
"உங்களது வயது? "
"அது எனக்குத் தெரியாது. உனக்குத் தெரியுமா?
"எனது பாட்டன் உங்கள் தோற்றத்தில் இருப்பார்."
"அவரது பெயர் எனது பெயரா?"
"அவரது பெயரை நான் மறந்துவிட்டேன்."
"எனது பாட்டன் காலமாகிவிட்டார்."
"அவரது பெயர் உங்கள் நினைவில் உள்ளதா?
"எனது நினைவுக்குள் நிறையப் பெயர்கள் உள்ளன. ஆனால் உன்னைப்போல நானும் எனது பாட்டனின் பெயரை மறந்துவிட்டேன்."
"அவர் முகம் உங்களது நினைவில் உள்ளதா?"
"ஆம், ஆனால் எனக்கு ஓவியம் வரையத் தெரியாததால் அவரது முகத்தை உனக்கு வரைந்து காட்ட முடியாமல் உள்ளது."
"இந்த மழை சடுதியில் நின்றுவிடும் என நான் கருதியது தப்பு."
"உன்னிடம் குடை இருக்கும்போது நீ ஏன் மழை பற்றி அங்கதப்படவேண்டும்?"
"முதலாவது தடவையாக இன்றுதான் நான் ஓர் பெரிய மழையைக் காண்கின்றேன்."
"நான் கண்ட மழைகள் பல. ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு கதை போல."
"அந்தக் கதைகளை எனக்குச் சொல்வீர்களா?"
"நான் கதைகள் சொல்லுபவனல்லன். புத்தகங்கள் வாசித்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஓர் மழைக் காலத்தில்தான் எனது இரண்டாவது மனைவியைப் பிரிந்தேன் ."
"முதலாவது மனைவி காலமாகிவிட்டளா?"
"இல்லை அவள் என்னை விட்டுப் பிரிந்தது ஓர் இலைதளிர் காலத்தில். அந்தத் தினத்தின் காலநிலை எனக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது."
"நீங்கள் இப்போது தனியாகவா?"
"இல்லை, நான் ஒருபோதுமே தனிமையில் வாழ்ந்ததில்லை."
என்னை அவளுக்குத் தெரியாது. ஆனால் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது கேள்விகள் எனக்கு இடையூறு தரவில்லை. அவளது கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லியபடி அவளின் வேகத்திற்கு ஏற்ப நடந்துகொண்டிருந்தேன்.
"என்னோடு பேசுவதால் உங்களது நேரம் வீணாகி விடாதா? "
"நான் இன்று எந்தத் திட்டத்துடனும் வெளியே இறங்கவில்லை."
"நீங்கள் விரும்பினால் ஏதாவது குடிப்பதற்கு உங்களை நான் அழைக்கின்றேன்."
"அழைப்பை ஏற்கின்றேன், ஆனால் இன்னும் கொஞ்ச தூரம் நடக்கலாம் போல உள்ளது."
எனக்குக் கிடைத்த முதலாவது குடை ஓர் கிழிந்த குடையே. அது ஓர் கறுப்புக் குடை என்பது இன்றும் எனது நினைவில் உள்ளது. ரவுணில் உள்ள திரைப்பட மாளிகையின் முன்னால் இருந்த குடை திருத்துபவரிடம் பல ஆண்டுகளாக நான் அந்தக் குடையுடன் சென்றதுண்டு. பல தடவைகள் அவர் என்னிடம் குடையை எறியும்படி கேட்டபோதும் என்னால் அதை எறிய முடியவில்லை. குடையை நான் எறியாது விட்டதற்கு காரணம், அது எனது பாட்டனின் பரிசாகக் கிடைத்தது என்பதே.
வாழ்வு குறுகியதுதான். இந்த குறுகிய பாதையுள் நாம் நடத்தத் துடிக்கும் பயணங்களோ ஏராளம். வசீகரிப்பவை அனைத்தையும் சேமிக்க விளைகினறோம். திட்டங்கள் திட்டங்களாக தீட்டுகின்றோம். ஏன் பாட்டனின் குடையை நான் எனது சேமிப்பாகக் கொண்டேன் என்பது ஒருபோதும் எனக்கு விளங்கியதில்லை.
எனது குடையின் கதையை நான் அவளிடம் சொன்னபோது "அந்தக் குடையை நீங்கள் வெளியே கொண்டு செல்வதுண்டா ?" எனக் கேட்டாள்.
"அது மழைக்கும், வெயிலுக்கும் உதவாத நிலையில் உள்ளது. ஆனால் என்னிடம் நிறையப் புதிய குடைகள் உள்ளன. எனது இரண்டாவது மனைவி குடைகள் சேமிப்பதில் பெருவிருப்புக் கொண்டவள். அவள் என்னைப் பிரிந்து சென்றபோது அனைத்துக் குடைகளையும் எடுத்துச் செல்லமுடியாததால், அவள் விட்டுச் சென்றவைகள் என்னிடமே உள்ளன. அவைகளை நான் எறியவில்லை."
அவளது பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் நீண்ட தூரம் அவளோடு நான் நடந்து விட்டேன். எனது பெயரைக்கூட அவள் என்னிடம் கேட்கவில்லை. குடை இருந்தபோதும் அவளது கூந்தலின் ஒரு பகுதி சற்றே நனைந்திருந்தது. ஹென்றி மத்திசின் "அமர்ந்திருக்கும் நிர்வாணம்" ஓவியத்திற்காக வரையப்பட்ட பெண்ணின் முகத்தை அவள் கொண்டிருந்தாள். அவளது வெண்முகத்தில் களைப்பின் கோடுகள் ஏறுவதுபோல எனக்குப்பட்டது.
"சரி, நீண்ட நேரம் நடந்துவிட்டோம். இந்தக் கோப்பிக் கடைக்குள் நுழைந்து ஏதாவது குடிப்போம்."
நாங்கள் நேருக்கு நேராக இருந்து கொண்டோம். விரைவில் சேர்வர் எங்கள்முன் ஆவி பறக்கும் கோப்பிகளை வைத்துவிட்டு என்னை ஒருவிதமாகப் பார்த்துச் சென்றான். நான் கிழவனாகவும் அவள் குமரியாகவும் இருந்ததுதான் காரணம் என்பதை விளங்க எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவள் குடையைச் சுருட்டி தனது நாற்காலி அருகில் வைத்துவிட்டு "எனக்கு மழைக்காலம் பிடிப்பதில்லை. ஆனால் உங்களோடு நடந்ததாலும் உரையாடியதாலும் இது ஓர் மழைக்காலம் போல எனக்குப் படவேயில்லை." என்றாள்.
அவள் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டுவிட்டாள். ஆனால் நான் எந்தக் கேள்வியும் கேட்காமல். அவளிடம் கேள்விகள் கேட்பது எனக்கு அவசியமானதாகப் படவில்லை. ஆனால் அவள் ஏன் என்னோடு ஒட்டிக்கொண்டாள் எனும் கேள்வி என்னை அரித்தது. சில இளம் பெண்களிற்கு வயோதிபர்களில் மட்டுமே விருப்பம். அவள் இந்த ரகப் பெண்ணா? அவள் தனிமையில் வாழ்கின்றாளா? அவளிற்கு ஓர் இளம் பையனோடு காதல் உறவு இல்லையா? என்னை பலதடவைகள் வீதியிலே கண்டதாகச் சொன்னாள். நானோ ஒருபோதுமே அவளைக் கண்டதில்லை. நான் அவளால் கண்காணிக்கப் படுகின்றேனா?
"ஏன் மவுனமாகிவிட்டீர்கள்? என்னோடு பேசுவது உங்களிற்கு சலிப்பைத் தருகின்றதா?" என அவள் கேட்டாள்.
"எனது பாதைகளில் நான் சலிப்பு ரசத்தை பல தடவைகள் குடித்ததுண்டு.
"வாழ்வு அர்த்தம் இல்லாதது எனும் தெளிவால் இந்த சலிப்பு ஜனித்ததா?"
"எமக்குள் எழும் தெளிவுகளும் அர்த்தம் இல்லாதவையே. எனது அனைத்து அசைவுகளையும் நான் சந்தேகிக்கின்றேன்."
"நீங்கள் சொல்வது சரி போலவே எனக்குப் படுகின்றது."
"உன்னை நான் ஆக்குவது என் இலக்கு இல்லை. நீ நீயாகவே இரு. இந்த ஒழுங்கு உடைந்தால் நானும் இல்லை நீயும் இல்லை."
திடு திப்பென ஏன் நான் அவளோடு பேச்சைக் கொடுத்தேன் எனும் கேள்வி என்னைக் குடைய வெளிக்கிட்டது. இந்தக் கேள்வி பதில்கள் மூலம் நாம் எங்களை ஒருவகையில் அறிமுகம் செய்து கொள்ளவில்லையா? இந்த அறிமுகம் உண்மையிலேயே அவசியமானதா? எப்படி இந்த அறிமுக வலைக்குள் நான் விழுந்தேன் என்பது எனக்குள் ஒரு புதிராகியது.
"ஏன் திடீரென மௌனமாகிவிட்டீர்கள்?"
"இந்த மௌனம் பிந்தி வந்ததற்காக வருந்துகின்றேன். நான் போகப் போகின்றேன்."
"இன்னும் மழை விடவில்லையே?"
எனது திடீர் மாற்றம் அவளது முகத்திலும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என் எனக்குப் பட்டபோதும் நான் அவள் பக்கம் திரும்பவில்லை. நான் இப்போது வெளியே. எனது தலையை நனைத்தது மழை. பெரிய மழை அல்ல.
ஆம், நான் வெளியே.
வானத்தைப் பார்த்தேன். அது எனக்கு வெளியைக் காட்ட மழைத்துளிகள் எனது முகத்தில் வீழ்ந்தன. திடீரென அது கறுப்பாகியது.
அது வானத்தின் நிறமா?
அவள் எனது தலைக்கு மேல் குடையைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
நான் இப்போது நிலத்தைப் பார்த்தேன்.
அது ஓர் மௌனச் சிரிப்பை எனக்குப் பரிசாக வழங்கியது.
பாரிஸ் 17-03-2013
(தமிழ்நாட்டின் “புதிய கோடாங்கி” இதழினது ஏப்ரல் 2013 இல் பிரசுரமான இந்தச் சிறுகதை நன்றியுடன் பிரசுரிக்கப்படுகின்றது.)
You must be logged in to post a comment Login