கூலித்தமிழ்: மலையக வரலாற்றின் காத்திரமான பதிவுகள்
க.கலாமோகன்
“கூலித்தமிழ்” எனக்கு விரைவிலேயே கிடைத்தது. இதனது ஆசியரும், எனது நண்பரும், தமிழின் சிறப்பான திறனாய்வாளருமான மு.நித்தியானந்தன் என் வாசிப்புக்கு அன்புடன் அனுப்பி வைத்தார். இந்த நூல் மிகவும் முக்கியமான நூல். நூல்கள் வாசிப்பிலும், நூல்களை ஆக்கமான நோக்கில் திறனாய்வு செய்வதிலும், மலையக எழுத்தின் படைப்பு உலகைக் காப்பதிலும் தனது நேரத்தை ஒதிக்கிய மு.நித்தியானந்தன் தான் முதலாவதாகப் படைத்த நூல் இது. இந்த நூல் சிறப்பான ஆய்வு நூல், மலையகத்தின் தோற்றம், இயக்கம், சூழல்கள் மீதான பெரிய குறிப்புகளை வைக்கின்றது. நிச்சயமாக மலையகம் மீது நடாத்தப்படும் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் நூல் எனலாம்.
மலையக மக்கள் தமது வரலாற்றில் ஆங்கிலத் துரைகளாலும், சிங்களத் துரைகளாலும் , தமிழ்த் துரைகளாலும் அடிமைகளாகக் கருதப்பட்டனர், மிகவும் மோசமான முறையில் சுரண்டப்பட்டனர். இந்தியாவிலிருந்து வந்த இவர்களுக்கு மோசமான கூலிவாழ்வுதான் கிடைத்தது . இலங்கையின் ஜனநாயகம் போலியென்பதை இலங்கை அரசு எப்படி இவர்களை நடத்தியது என்பது காட்டும். இவர்களின் தேநீரைச் சுவைத்து இவர்கள் வாழ்வு கருகும் நிலையில் உள்ளதை எப்போதும் இந்த மூன்று இனத் துரைகளும் காத்தவர்கள். 20 ஆம் நூற்றாண்டின் அடிமைத்தனமாக மலையக மக்களினது வாழ்வு கருதப்பட்டது. இந்த வாழ்வின் கோலம் நீண்ட போராட்டங்களாலும், அவல நிலைக்குள் எழுந்த பெரும் படிப்புகளாலும் சிறிது மாறியது. இந்த மாற்றத்தின் குறிப்பிடத்தக்க புத்திஜீவிகளில் ஒருவராக உள்ளார் நித்தியானந்தன். இவரது தீவிர வேலைகளால் மலையகப் படைப்புகள் ஊக்குவிக்கப் பட்டுள்ளன. இந்தப் படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் அழிக்கப்படாத பகுதிகள் என்பதை இவர் காட்டியுள்ளார்.
“கூலித்தமிழ்” மலையக மக்களின் கொடுமைகளையும், இந்த மக்கள் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய சிறப்பான கொடைகளையும் ஆதாரத்துடன் காட்டுகின்றது.1869 ஆம் ஆண்டில் முதலாவது மலையக இலக்கியம் தோன்றுகின்றது. அது “கோப்பி கிருஷிக் கும்மி”. மத்திய மாகாணத்தில் கண்டக்டாரகப் பணி புரிந்த ஆபிரகாம் ஜோசப் எழுதிய இந்தப் படைப்பு இருமொழி நூலாகும். 280 கும்மிகள் ஆங்கிலத்தினது துரைத்தனத்தைப் பாடுவதற்காக எழுதப்பட்டது தூரத்திஸ்டம் எனும் நித்தியானந்தன், “மலையகத்தின் எழுத்து இயக்கத்திற்கு இதுவே ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகால சரித்திரத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறது” என்கின்றார்.
சில ஆண்டுகளின் பின்னர் ஆபிரகாம் ஜோசப் எழுதிய “தமிழ் வழிகாட்டி” (The Planters’ Colloquial Tamil Guide) எனும் நூல் துரைத்துவதுக்குத் தமிழ் மொழியைப் பேசும், எழுதும் கலையைச் சொல்கின்றது. இவரது மொழிப் புலமை சிறப்பானது என்கின்றார் “கூலித்தமிழ்” ஆசிரியர். இந்த நூலில் தரப்படும் 7 கட்டுரைகளும் மலையகத்தமிழ் வாழ்வின் மீதான நிறையக் குறிப்புகளை ஆய்வு முறையில் வைக்கின்றன.
மழவரையன் விஜயபாலன் இந்த நூலுக்கு எழுதிய அணிந்துரையில் பின்வாறு குறிப்பிடுகின்றார்: “மலையக மக்களின் சரித்திரத்தை ஆய்ந்து பார்த்தால், ஆண்டாண்டுகாலமாகத் தொடரும்
துன்பநிலையிலும், உரிமைபோரில் தலைமை வகிப்போரும், இன்னலில் இதந்தரும் இலக்கியம் படைப்போரும், புதுமையிற் தேர்ந்த புரட்சியாளரும், சோர்வில் சுகம்தரும் புத்துணர்வுப் புலவோரும், பல்துறை சார்ந்த படைப்பாளிகளும் தோன்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மண்ணிலும்,இலங்கைத் தீவிலும் தமது சமூகத்துக்குள்ளேயுள்ள ஒடுக்குமுறைகளையும் அடிமைத்தனத்தையும் கொடுமைகளையும் தகர்த்தெறிந்து, தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து பெருஞ்சேவை ஆற்றிய பெண்கள் இவர்களிடையே இருந்திருக்கிறார்கள்.”
ஆம்! இந்த பெண்களில் ஒருவரான அஞ்சுகம் மீது “அஞ்சுகம்: மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை” என “கூலித்தமிழ்” தரும் அத்தியாயம் தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்புகள் மீதான ஆய்வுக்கு நிச்சயமாகத் தேவையான அத்தியாயமாக உள்ளது.
“கூலித்தமிழ்”, தமிழ் இலக்கிய, சமூக வரலாற்றின் சிறப்பான பதிவாக உள்ளது. மு. நித்தியானந்தனின் எழுத்துகள் எப்போதும் காத்திரமானவை, தெளிவானவை. இந்த நூல் தமிழர்களாலும், தமிழ்ப் படைப்பாளிகளாலும் வாசிக்கப்படவேண்டியது, தமிழ் இலக்கிய வரலாற்றின் முழுமைக்கு உதவுவது என்பது என் கருத்து.
You must be logged in to post a comment Login