இனத்தின் அழிவையும் அவலத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களே!
You never cease to amaze me!
உங்களுடைய பகுத்தறிவும், அரசியல் தெளிவும், வாழ்வின் நேர்மையும், 'யாழ்ப்பாணத் தமிழராய் பிறந்திட யாம் என்ன மாதவம் செய்திட்டோம்?' என்று என்னை என்றுமே பிரமிப்புக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கும்.
புது வருட ஆடைகளைப் போட்டு அழகு பார்க்க, எப்போதடா விடியும்? என்று தூங்காமல் விழித்திருக்கிற சிறார்களைப் போல, எப்போதடா மே 18 வரும், இசைப்பிரியாவின் ஆடையில்லாத படத்தைப் போட்டு, வாண வேடிக்கை காட்டலாம்? என்று தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பீர்கள் என்பது தெரியும்.
பல கவிஞர்கள் கவிதைகளோடு வேறு தயாராக ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
அதிலும் தற்போது தீவுப் பகுதியில் கோரமாகக் கொல்லப்பட்டிருந்த அந்தச் சிறுமி படையினராலோ, 'ஒட்டுக் குழுக்களாலோ' கொல்லப்பட்டிருந்தால், அதை வைத்தே முகப்புத்தகத்தில் ஒரு பிரளயம் கிளப்பலாமே? என்று வாய் ஊறிக் கொண்டும் இருந்திருக்கக் கூடும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறினால், சில நேரம் மரண அறிவித்தல் தளக் குழுமத்தின் இணையத் தளங்களில் ஏதாவது அந்தப் பெண்ணின் அலங்கோலப் படங்களும் வந்து வாய்க்கக் கூடும். தற்போது வரை உங்கள் பிரார்த்தனை நிறைவேற எந்தச் சந்தர்ப்பமும் இல்லை. அந்தச் சிறுமியின் பெற்றோர்களின் துயரத்தை நீங்கள் கேலிக்கூத்தாக்க எந்தக் கடவுளும் விடக் கூடாது என்பதே எங்கள் பிரார்த்தனை.
உங்களுடைய வாழ்வும் அரசியலும், நீங்களே சொல்லி, நீங்களே நம்புகிற பொய்யை மற்றவர்களும் உண்மை என நம்ப வேண்டும் என்பதில் தானே ஆரம்பிக்கிறது. அது அகதிக் கோரிக்கைக்கான கட்டுக் கதையாக இருந்தால் என்ன? பிரபாகரன் சூரிய தேவன் என்பதாக இருந்தால் என்ன?
உங்களுடைய பிழைப்பே மற்றவர்களின் அவலத்தை காசாக்குவது தானே!
தமிழர்களின் அழிப்பு இனப்படுகொலையா? யுத்தக் குற்றமா? என்ற முடிவுக்கு, வெளிநாடுகளில் அரசியல் செய்கின்ற புலிகளின் எச்சசொச்ச தலைமைகளால் வர முடியாவிட்டாலும், இரண்டுக்குமே போய், வரிசையில் நின்று, றிசைக்கிள் பண்ணி விற்கும் மாலைகளையும், பூக்களையும், விளக்குகளையும் விலை கொடுத்து வாங்கி, அங்கே வைக்கப்பட்டிருக்கின்ற படங்களையும், பிணப் பெட்டிகளையும் தொட்டுக் கும்பிட்டு, (இப்போது செல்பி எடுத்து முகப்புத்தகத்தில் போடுவீர்களோ தெரியாது), அங்கே விற்கப்படும் கொத்து ரொட்டியை வாங்கி நினைவேந்தல் செய்து வீடு சேர்ந்து, உங்களுடைய தமிழுணர்வைக் காட்டி, தேசியக் கடமையை முடித்துக் கொள்வீர்கள்.
அதற்கப்புறம்?
உங்களுடைய நாளாந்தப் பிரச்சனைகள்...
சாமத்தியச் சடங்கு, ஊருக்குப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போய் காட்டுதல், அல்லது இங்கே குடித்து விட்டு ஆட்டம் போடும் உங்கள் குழந்தைகளைப் பற்றி மற்றவர்களுக்குப் புழுகுதல். நேர்மையில்லாத எந்த வழியால் பணம் சம்பாதிக்கலாம் என அதிதீவிரமாய் சிந்தித்தல்.
இனிமேல் எவனாவது ஒருவன் வந்து காட்டுகின்ற இடத்தில் வோட்டுப் போட்டு, உங்கள் தேசியக் கடமையை நிறைவேற்ற அழைத்தால் ஒழிய, மாவீரர் தினம் வரைக்கும் உங்களுக்கு இந்த தன்மானத் தமிழுணர்வு வராது!
உங்கள் இந்த திருக்கூத்தின் நோக்கம் எல்லாமே உங்கள் எதிரியை அவமானப்படுத்துவதே ஒழிய, தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதோ, தமிழ் இனத்தின் அழிவின் துயரத்தை நினைவு கூர்வதோ என்பது அல்ல.
எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் மூக்கை அறுக்கத் தயங்காதவர்கள் நீங்கள்.
உங்கள் தலைமையை நம்பி வன்னிக்குள் இருந்த மக்கள், எதிரியிடம் ஒரு நேரச் சாப்பாட்டுக்காக கை ஏந்தி நின்ற கொடுமைக்குள்...
அகதி முகாம்களில் விபச்சாரம் நடக்கிறது என்று கூச்சமில்லாமல் கத்தியவர்கள் நீங்கள்.
அங்கே அபலைகளாக நின்றது, உங்களுடைய தாய், மனைவி, சகோதரி, மகள் போன்ற தமிழ்ப் பெண்களே!
இதெல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை.
அந்த அபலைப் பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உண்மையாகத் தான் இருந்தாலும், அந்த அவலத்தின் சூத்திரதாரிகள் புலிகள் என்ற உண்மையை நீங்கள் நம்ப விரும்பவில்லை.
எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பது உங்களுக்கு மிக முக்கியம். உங்கள் மூக்கு அறுந்தாலும் பிரச்சனை இல்லை.
அதன் தொடர்ச்சி தானே இன்றைக்கு இசைப்பிரியாவின் படத்தை வைத்து நடத்தும் கூத்தும்!
உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்.
உங்களுக்கும் ஒரு தாய் உண்டு. மனைவி, சகோதரி, மகள் உண்டு.
அந்த இசைப்பிரியா இவர்களில் ஒருவராக உங்களுக்கு இருந்திருந்தால்...
இந்தப் படங்களைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்வீர்களா?
இல்லை.
கொள்கையை நம்பியோ, கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டோ, இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பெண்.
எதிரியைக் கழுவேற்ற வேண்டும், அதுவும் எங்கள் தலைவனை அழித்தவன் என்ற வெறி தானே உங்களை இந்த அப்பாவிப் பெண்ணின் அவலத்தை கேலிக் கூத்தாக வைக்கிறது?
உங்களைப் போல எங்களுக்கும் இசைப்பிரியாவின் படத்தைப் போட்டு, கவிதையும் எழுதி, சிங்கள அரசாங்கத்திற்கு சவாலும் விட்டு, எங்களில் ஓடுவதும் சுத்தத் தமிழ் இரத்தம் தான் என்று எங்கள் தன்மானத் தமிழுணர்வைக் காட்டத் தெரியாதா?
இன்றைக்கும் புலிகள் இருந்து, இசைப்பிரியா இப்படி ஒரு கொடூரமான நிலைக்கு ஆளாகியிருந்தால், 'இசைப்பிரியாவின்' அண்ணன் நான், தம்பி நான், அப்பன் நான் என்று எத்தனை பேர் அகதிக் கோரிக்கையில் கட்டுக்கதை எழுதி, முகாம் பொறுப்பாளர்களிடம் இருந்து அத்தாட்சிக் கடிதம் வாங்கி சமர்ப்பித்திருப்பீர்கள்?
மரணம் உங்களுக்கு ஒரு வியாபாரப் பொருள். அதில் மனிதம் இல்லை.
அது தான் இறந்து போன உங்கள் தலைவனுக்கு அவனது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையைக் கூட உங்களைச் செய்ய விடுவதில்லை.
செய்தால், எத்தனை பேரின் பிழைப்புக்கு நட்டம்? என்று மரணத்தில் லாப நட்டக் கணக்குப் பார்த்துத் தானே உங்கள் தமிழுணர்வுப் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
உங்களுடைய பிள்ளைகளை இங்கே பாதுகாப்பாக படிக்கவும், கூத்தடிக்கவும் வைத்துக் கொண்டு, அங்கே அப்பாவிப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய் பலி கொடுத்ததைக் கண்டும் காணாமல், 'பிள்ளைகள் தாங்களே விரும்பிச் சேர்கிறார்கள்'
என்று நீங்கள் சொன்ன பொய்யை, நீங்களே நம்பி, மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று, ஸ்காபரோவில் பொப் ரே உரையாற்றிய கூட்டத்தில் நடத்திய கேலிக் கூத்தில் இருந்து தானே, கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட கதை ஆரம்பமாகிறது. நீங்கள் துள்ளிக் குதித்த கதிர்காமர் கொலையிலிருந்து தானே, உலகெங்கும் புலிகள் தடை செய்யப்படும் தொடர்ச்சி ஆரம்பமானது.
உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கும் வரை எவன் பிள்ளை கொல்லப்பட்டால் என்ன? கால், கையை இழந்தால் என்ன? பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டால் என்ன?
அந்தப் படங்களைக் காட்டி பிழைப்பு நடத்தவும், மாவீரர் தினங்களில் பூப் போட்டு தொட்டுக் கும்பிட்டு சீன் காட்டவும், உங்கள் மனச்சாட்சி என்றைக்கும் தடையாக இருந்ததில்லை.
பிரபாகரனின் மகனுக்கு நடந்த அவலத்தைப் பார்த்தே, அந்த வயதில் இருக்கும் மகனைப் போலத் தானே, ஒன்றுமறியாக் குழந்தையாயிருப்பான், அவனுக்கு இப்படி ஒரு கொடுமையா என்று நாங்கள் மனம் நொந்ததை, உங்களுக்கெல்லாம் மாரடித்துத் தான் காட்ட வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை.
சேற்றுக்குள்ளால் நடந்து வரும் போது, 'அது நான் இல்லை' என்று களைத்துப் போய் ஈனக்குரலில் அழுத இசைப்பிரியாவைப் பார்த்த போது அழுததை எல்லாம் உங்களுக்குக் காட்டித் தான் எங்கள் தமிழுணர்வை நிருபிக்க வேண்டும் என்றும் இல்லை.
பிழைப்பு நடத்தும் பகிரங்க மாரடிப்பில் என்றைக்கும் நாங்கள் நம்பிக்கை கொண்டதில்லை.
உங்களுடைய தமிழுணர்வும், தமிழ் மக்களின் உயிர் மீதான அனுதாபமும் எங்களுக்குத் தெரியாததா?
மாவிலாறில் சொறியப் போய் தொடங்கிய சண்டையில், கிழக்கு மாகாணம் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்த போது, கிழக்கு மக்கள் கொல்லப்பட்டும், மயானங்களிலும் காடுகளிலும் அகதிகளாகவும் இருந்த போது, உங்கள் தமிழுணர்வு கொதித்ததில்லை.
ஏன் மட்டக்களப்பார், திருகோணமலையார் தமிழர்கள் இல்லையா?
மன்னாரில் இராணுவம் யுத்தத்தைத் தொடங்கி நகர ஆரம்பித்த போது, மக்கள் இடம் பெயர ஆரம்பித்தார்கள். அவர்களின் அழிவு உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.
யுத்த முனையில் புலிகள் தாச்சி விளையாடுவதாக வந்த செய்திகளைப் பார்த்து புல்லரித்தவர்கள் நீங்கள். இடம் பெயர்ந்த மக்களோடு மடுமாதா சுரூபத்தைக் கொண்டு வந்த மன்னார் ஆயர், பின்னர் அதை மடுவுக்கு கொண்டு போன போது, துள்ளிக் குதித்த தமிழுணர்வாளர்கள் இங்கே உண்டு.
கிளிநொச்சிக்கு படைகள் வந்த போது, மக்கள் அழிவுகளோடு இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். அது கூட உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. 'உள்ளுக்க வர விட்டு அடிக்கப் போறாங்கள்' 'இனிமேல் கிழுவந்தடியால சாத்துவாங்கள்' என்றுதான் நம்பிக் கொண்டிருந்தீர்கள்.
மக்களின் அவலம் உங்கள் கண்ணில் பட்டதில்லை.
இங்கே பார்ட்டி ஹோல்களில் அடையாள உண்ணாவிரம்.
உண்ணாவிரதம் முடிந்ததும் மூக்கு முட்டச் சாப்பிட வசதியாக!
கிளிநொச்சி விழுந்து, கல்மடு வரைக்கும் போன போதும், கல்மடுக் குள நீர்பெருக்கில் பல்லாயிரக்கணக்கான இராணுவம் பலி என்ற கதையை நம்பிக் கொண்டிருந்தீர்கள்.
அதன் பின்னால், தலைவருக்கு ஆபத்து என்றதும் தான், கொண்ட முதலுக்கே நட்டம் என்று நீங்கள் தெருவில் குதிக்க ஆரம்பித்தீர்கள்.
அதுவரைக்கும், தமிழ் மக்களின் அவலமும் அழிவும் உங்களை உலுப்பியதில்லை. தலைவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் களம் இறங்கினீர்கள், தமிழர்களின் அழிவை நிறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.
அப்போது கூட, இதை மனித அழிவாகக் காட்டுங்கள், தலைவரின் படத்தைக் கொண்டு போய், இதை ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் பிரச்சனையாகக் காட்டாதீர்கள் என்று தாயகத்தில் எழுதினோம்.
கேட்டீர்களா?
பிரபாகரன் தான் தமிழர்களின் தலைவர், புலிக் கொடி தான் எங்கள் தேசியக் கொடி என்று நீங்கள் சொல்லி, நீங்கள் நம்பிய பொய்யை கனடிய அரசு நம்ப வேண்டும், புலிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது தான் உங்கள் கோஷமாக இருந்ததே தவிர, மக்களின் அவலத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் இருந்ததா?
பாதையை மறித்து வீரம் காட்டி, கனடிய பொதுமக்களின் ஆதரவை இழந்தீர்கள்.
மக்களின் அழிவு உங்களுக்கு முக்கியமானதாக இருந்தால் எப்போதோ சர்வதேசத் தலையீட்டைக் கோரியிருப்பீர்கள். இப்போது தலைமைக்கே உலை என்றதும் தான் கண் கெட்ட பின் நடந்த சூரிய(தேவன்) நமஸ்காரம்!
கடைசியில் தலைவர் இறந்து விட்டார் என்று தெரிந்ததும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், நடுத்தெருவில் கறுப்புச் சட்டைகளோடு ஒப்பாரி வைத்ததைத் தவிர, உங்களால் அந்தத் தமிழ் மக்களின் அழிவை நிறுத்த என்ன செய்ய முடிந்தது?
உங்களுக்கு எந்தக் காலத்தில் ஐயா, தமிழ் மக்கள் பற்றியும் அவர்களின் அவலம் பற்றியும் கவலை இருந்தது?
தலைவருக்கு எல்லாம் தெரியும், மிரட்டும் போது பணத்தைக் கொடுத்தால் சரி என்பதைத் தவிர, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது, உங்கள் அகதிக் கோரிக்கைக்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்கும் எப்படி உதவும் என்ற லாப நட்டக் கணக்கே!
இன்றைக்கும் எவனாவது ஆமிக்காரனுக்கு பனங்கொட்டையால் எறிய மாட்டானா? தமிழரின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க முடியாது என்று இங்கே கூச்சல் போட வாய்ப்பே இல்லையா என்பது தானே உங்கள் ஆதங்கம்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த புலி, தமிழரைக் கடிக்கத் தொடங்கிய போதும், அதற்கு துரோகி வியாக்கியானம் கொடுத்தவர்கள் நீங்கள். சகோதரர்களைப் படுகொலை செய்யும் போது, கொக்கோ கோலா கொடுத்து இரத்த தாகம் தீர்த்தவர்கள் நீங்கள்.
இன்றைக்கும் கூட, புலிகளால் கொல்லப்பட்ட பெண்களைப் பற்றி எழுதினால், இசைப்பிரியாவின் அழிவைத் திசை திருப்பச் செய்யும் சதி போலவும், அவர்களும் துரோகம் இழைத்தவர்கள் என்றும், மற்ற இயக்கங்களும் கொலை செய்தன தானே என்றும் தான் உங்களால் சொல்ல முடிகிறதே தவிர, என்னவோ எதுவோ தமிழர்களான அவர்கள், அதுவும் பெண்கள் கொல்லப்பட்டது தவறு என்று பகிரங்கமாகச் சொல்ல முடியவில்லை.
உங்களுடையவர்களால் கொல்லப்பட்டவர்களையே தவறு என்று சொல்லாமல், இன்றைக்கும் நியாயப்படுத்துகின்ற உங்களுக்கு, இசைப்பிரியாவின் கொலையை வைத்து நீதி கேட்க என்ன மனச்சாட்சி இருக்கிறது?
முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட போது நியாயப்படுத்திய உங்களுக்கு, இனப்படுகொலை பற்றி நீதி கேட்க என்ன நியாயம் இருக்கிறது?
உலக நீதி என்று ஒன்று இருக்கிறது என்ற விசயம் உங்களுக்குத் தெரியாது. உங்களுடைய நீதி எல்லாமே, உங்களுடைய சுய நலத்தோடு சேர்ந்தது தான்.
தேவைப்படும் போது பயன்படுத்துவதும், முடிந்ததும் தூக்கி எறிவதும், வெற்றி கிடைக்கும் போது திமிரெடுத்து ஆடுவதும், வாங்கிக் கட்டும் போது ஒப்பாரி வைப்பதுமாகத் தானே உங்கள் அரசியல் தலைமை இருந்தது.
எதிரியால் அழிக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமையை விட, உங்கள் தலைமையால் அழிக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் அதிகம் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
துப்பாக்கிக்குப் பயந்து வாய் மூடி மெளனமாக இருந்து விட்டு, வேறு வழியில்லாமல் பின்னால் போய், அதுவே வெளிநாட்டு வாழ்வின் ஆரம்பத்துக்கு வசதியாகப் போக, 'அங்க சண்டை நடந்தால் தான் திருப்பி அனுப்ப மாட்டாங்கள், கேசுக்கு உதவும்' என்று காசு கொடுக்கப் போய், இப்போது உங்கள் கண் முன்னால் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பற்றி வாயே திறக்க மாட்டீர்கள்.
எவனாவது நீதி, நியாயம் பற்றிப் பேசியவுடன், 'சிங்களவனிட்ட காசு வாங்கினவன்' என்று கூசாமல் சொல்வதைத் தவிர வேறு என்ன தான் உங்களால் செய்ய முடியும்?
மாங்கிளியும் மரங் கொத்தியும் வீடு திரும்பத் தடையில்லை என்று இங்கே பாடிக் கொண்டிருந்த நீங்கள், புலிகள் சமாந்தரமான அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்று பீற்றிக் கொண்டிருந்த போது கூட, அங்கே போய் வாழ நினைத்ததில்லை. போனவர்கள் பணம் கட்டி விசா எடுத்துப் போனீர்கள். போனால் ஓமந்தையில் உருவுவார்களே என்று பலர் தமிழீழப் பக்கமே தலை வைத்துப் படுக்காமல் இருந்தீர்கள்.
இன்றைக்கு ஒன்றுமே நடக்காதது போல, உல்லாசப் பயணம் போய், அங்கே நாளாந்த வாழ்வைக் கொண்டு நடத்த அவலப்படும் மக்களுக்கு அர்த்தராத்திரியில் குடை பிடித்து உங்கள் பவிசுகளைக் காட்டிக் கொண்டு வந்த கையோடு, மறக்காமல் 'விடை கொடு தாய்நாடே' என்று சுப்பர் சிங்கருக்கு கள்ள வோட் போடுவதுடன் உங்கள் தமிழுணர்வும், தேசியக் கடமையும் முடியும்.
இதை நாங்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது தான் உண்மையான தமிழ் இரத்தம் ஓடும் பச்சைத் தமிழனின் இனமானத் தமிழுணர்வு என்றால், அது உங்களுடையதாகவே மட்டும் இருக்கட்டும்.
நாங்கள் துரோகிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம்.
உங்களுடைய அரசியல் தெளிவு எங்களுக்குத் தெரியாததா?
இல்லாத புலிகளுக்கான தடையை ஐரோப்பிய சமூகம் நீக்கியவுடன், இனிமேல் ஐரோப்பாவில் புலிகள் சுதந்திரமாக இயங்கலாம் என்று புல்லரித்தவர்கள் நீங்கள்.
இங்கே காட்டிய இடத்தில் வோட்டுப் போடும் போதெல்லாம் இதென்ன தீர விசாரித்து, சிந்தித்தா போடுகிறீர்கள்? தமிழன், தமிழருக்கு சப்போர்ட் பண்ண வேணும் என்பதைத் தவிர அடிநுனி உங்களுக்குத் தெரியாது. பிறகு அதே ஆட்களை கூசாமல் திட்டியும் திரிவீர்கள்.
இந்த லட்சணத்தில் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த வாரம் முழுவதும் முகப்புத்தகத்தில் கண் கொண்டு பார்க்க முடியாத படங்களை எல்லாம் போட்டு, கண்காட்சி நடத்தப் போகிறீர்கள்.
யாருக்கு? முகப்புத்தகத்தில் உங்களோடு நண்பர்களாக இருக்கிற மற்றத் தமிழுணர்வாளர்களுக்குத் தானே!
இன அழிப்பு என்று கூச்சல் போடப் போகிறீர்கள்.
அதற்குள் இன்றைக்கு நீங்கள் பின்னால் மந்தைகள் போலப் போகிற தலைமைகளுக்கே, அது இன அழிப்பா? இல்லை, யுத்தக் குற்றமா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.
ஏற்கனவே நூறு வருடங்களுக்கு முன்னால் நடந்த ஆர்மீனிய இன அழிப்பு பற்றியே இன்றைக்கும் சர்வதேசம் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை. அதுவும் மேற்குலகோடு சல்லாபம் செய்யும் ஐ.தே.க கட்சி அரசுக்கு வந்தால், எல்லாமே புஷ்வாணம் தான்.
கப்பல் அனுப்பி தலைவரைக் காப்பாற்றும் என்று நீங்கள் நம்பிய அமெரிக்காவே இன்றைக்கு, சிங்கள அரசோடு சேர்ந்து தீர்வைக் காணுங்கள் என்று சொல்கிறது.
சரி, சர்வதேசம் இனப்படுகொலை என்று அங்கீகரித்து விட்டால் மட்டும், ஈழம் கிடைத்து விடுமா? இல்லை, அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்வுக்கு விடிவு கிடைத்து விடுமா?
எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும். இனம் அழிந்து போனால் உங்களுக்கு என்ன?
இன்னொரு நூறு வருடங்களுக்கு தமிழர்களுக்கு விடுதலை உணர்வே வர முடியாத நிலையில் உங்கள் தலைமை எங்கள் மக்களை இன்று விட்டுச் சென்றிருக்கிறது.
யுத்தத்தின் பெயரால் நடந்த பொருளாதார அழிவிலிருந்து மீளவே எத்தனை தலைமுறை செல்லுமோ தெரியாது.
மறுபுறத்தில் சமூகச் சீரழிவும் வெளிநாட்டு மோகமும், வெளிநாட்டு வெள்ளிப்பணமும் எங்கள் இனத்தின் எதிர்கால இருப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு நீங்கள் குத்தி முறிந்து மாரடிப்பது எல்லாம் உண்மையாகவே அந்த மக்களின் விடுதலைக்கும் விடிவுக்கும் தான் என்றால்...
எமது இனம் சந்தித்த அழிவின் துயரத்தை அர்த்தமுள்ள வகையில் நினைவு கூருங்கள்.
அருவருப்பாக்கும் கேலிக்கூத்து ஆக்காதீர்கள்!
வெறும் மாரடிப்பு எங்களைத் திருப்திப்படுத்த மட்டுமே உதவும்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் விறைத்துப் போயிருக்கும் பிரபாகரனின் மகனின் படமும், மரண பயத்தோடு இருக்கும் இசைப்பிரியாவின் படமும் மட்டுமே போதும். எங்கள் துயரத்தைப் பறை சாற்ற!
குண்டு துளைத்த படமும், நிர்வாணப் படமும், உடல் சிதறிய குழந்தைகளின் படமும் உங்களின் வக்கிர உணர்வின் வெளிப்பாடே அன்றி, தமிழ் மக்களின் அழிவிற்கான துயரம் அல்ல.
எமது மக்களின் அழிவில் உங்களுக்கும் பங்குண்டு. உங்கள் அகதிக் கோரிக்கை வெற்றி பெறக் கொடுத்த உங்களின் பணமும், உங்களைக் குஷிப்படுத்த புலிகள் நடத்திய சாகச விளையாட்டுகளும் தான் எங்கள் மக்களை இந்த அவலநிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது.
எமது இனத்தின் எதிர்கால வாழ்வுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று உண்மையாகவே நினைத்தால்....
புலிகள் புனிதர்கள் அல்ல, அவர்களும் தவறிழைத்தவர்களே என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.
எங்கே தவறு நடந்தது? எங்கள் தலைமையின் தவறுகள் என்ன? என்ற கேள்விகள் எழுந்தாலே, துரோகிப் பட்டம் சூட்டுவதை விட்டு, தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
வாய்க்கு வாய் தமிழன் ஒற்றுமையில்லை என்று கத்தும் நீங்கள், எல்லாத் தமிழர்களையும் சகோதரர்களாக நினைக்கப் பழகுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு மனிதனுக்கும், மந்தையைப் போல பின்னால் போகாமல், சொந்தமான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கும் உரிமை உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
முடிந்தால், மறக்காமல், தலைவரினதும் அவரது குடும்பத்தினருக்குமான ஆன்ம சாந்திக்கான கிரியைகளையும், பிரார்த்தனைகளையும் செய்யுங்கள்.
இதுவே எங்கள் இனத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய கடமையாக இருக்கும்.
இதையெல்லாம் வெறும் கேலிக் கூத்தாக்கி, எங்கள் இனத்தின் அழிவை அருவருப்பாக்கிக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
You must be logged in to post a comment Login