( சீவிய பரியந்தம் சமூக உதவிப் பணத்தில் வாழ்ந்து, புலிகளின் புகழ் பாடும் 24 மணி நேரத் தமிழ் வானொலி மூலமாக மட்டுமே தமிழ் அரசியல் பற்றித் தெரிந்து கொண்டிருந்த ஒருவரைச் சந்தித்த போது 'மாமனிதர் சிவராமைச்' சுட்டுப் போட்டாங்களாம்' என்று புதினம் தெரிவித்தார். அட, இவருக்கெல்லாம் தராக்கியை எப்படித் தெரிந்திருக்கும் என்ற குழப்பம். உலகத்தமிழரைக் கூட வாசித்திருக்கக் கூடிய சந்தர்ப்பமில்லாத ஒரு மனிதனின் வாயில் வானொலி மூலமாக திணிக்கப்பட்டது தான் இந்த 'மாமனிதர் சிவராம்' பற்றி அறிவு. புலன் பெயர்ந்த நாடுகளில், இன்று அளவுக்கு மீறிப் பயன்படுத்தப்பட்டு அருவருப்பை ஏற்படுத்தும் 'ஊடகவியலாளர்' என்ற வகைப்படுத்தலுக்குள்ளாகத் தான், இந்த புலி ஆதரவாளர்களுக்கு சிவராம் அறிமுகமானார். ஐலண்டில் தொடர் கட்டுரை எழுதியதோ, சில நேரம் புலி ஊடகங்களே இவரைத் துரோகி என்ற விடயமோ இவர்களுக்குத் தெரிந்திருக்காது.
புலிகளின் பிரச்சார முற்றுகையின் Captive Audience ஆக இருந்த புலன் பெயர்ந்த தமிழர்களுக்கு சிவராம் பற்றி புலிகள் கொடுத்த பிம்பம் தவிர வேறெதுவும் இருந்ததில்லை.
சிவராம் கொலை செய்யப்பட்ட போது, thayagam.info இணையத் தளத்தில் வெளியான ஏடு இட்டோர் இயல் இது.
இறந்து போன மனிதனைத் தூற்றுவதோ, கொலையை நியாயப்படுத்துவதோ நோக்கம் இல்லை. ஒரு இனத்தின் தலைவிதி எவ்வாறு தனிமனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது, அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளுக்கு அந்த இனம் கொடுக்கும் விலை என்ன என்பதை இன்றாவது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிவராம் கொல்லப்பட்ட நினைவு தினத்தை ஒட்டி வெளியாகிறது. )
கொலைகளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடுகின்ற கூட்டம் திடீரென்று வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு குய்யோ முறையோ, இந்த அநீதியைக் கேட்பாரே இல்லையா என்று மண் அள்ளித் திட்டாத குறையாக ஒப்பாரி வைக்கிறது. அடுத்தடுத்து தினசரி அங்குமிங்குமாய் கொலைகள் நடக்கும் போது, அவையெல்லாம் 'உயிர்களல்ல' என்ற நினைப்பில் 'ஆகா, துரோகிகள் அழிகின்றனர், இலட்சியத்திற்கான தடைகள் நீங்கி தமிழீழம் மலர்ந்து விடும், தலைவரின் கனவு மெய்ப்படும்' என்று மகிழ்ந்தவர்களுக்கு தராக்கி சிவராமின் கொலை, கௌசல்யனின் கொலைக்குப் பின்னால், மனித நேயத்திற்கு எதிரானதாகவும் ஜனநாயகத்திற்கு சாவுமணியாகவும் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் தெரிந்திருக்கிறது.
இதே சிவராம் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்னால் கொல்லப்பட்டிருந்தால், இன்று ஒப்பாரி வைக்கின்ற இதே கூட்டம் அன்றைக்கு ஆனந்தக் கூத்தாடியிருக்கும். புலிகளின் ஊடகங்களான உலகத் தமிழரும், புலிகளின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகின்ற முழக்கங்களும், ஈழநாடுகளும், இன்று தூக்கிக் கொண்டாடுகின்ற இதே சிவராமை, துரோகி என்றும் அன்னிய உளவாளி என்றும் பக்கம் பக்கமாய் திட்டித் தீர்த்ததை வசதிக்காக தற்போதைக்கு மறந்திருக்கலாம். தலைவர் கூட 'பழையன கழிந்து' தற்போதைக்கு 'சிங்களப் பேரினவாதத்தின் கோட்டையில் நின்று கொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக் கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட போதும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்து நின்றார்' என்று மாமனிதர் பட்டமும் வழங்கலாம்.
ஆனால் இன்றைய இந்த மாரடிப்பு எல்லாம் உண்மையாகவே, நெருங்கிப் பழகிய ஒரு மனிதன் இறந்ததற்கான துயரத்தின் வெளிப்பாடல்ல. பிணத்தில் வியாபாரம் செய்து பழகிப் போன புலியின் முதலைக் கண்ணீர்! இந்தக் கொலையைக் கொண்டு இலங்கை அரசுக்கும் கருணாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவது தான் இன்றைய இந்த மாமனிதர் பட்டமும் பிண ஊர்வல முயற்சியும்.
மாகாணசபைக் காலத்தில் ஊடகத்திற்கு பொறுப்பாக இருந்த நடேசனைக் கைது செய்து சித்திரவதை செய்த பின்னால், அவர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்ட பின்னர், கருணாவினால் கொல்லப்பட்ட போது அவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்து, ஊரூராய் ஊர்வலம் கொண்டு சென்றதெல்லாம் அவரது இழப்பின் துயரத்தினால் அல்ல, அதைக் கொண்டு கருணாவிற்கு கிழக்கில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் செல்வாக்கை உடைப்பது தான். இதே போன்றதுதான் இன்றைக்கு சிவராமுக்கு செய்யும் அதே 'இராணுவ' மரியாதைகள்!
நடேசனுக்கு புலிக் கொடி போர்த்தப் போக, அதை குடும்பத்தினர் தடுத்த போது, 'புலிக் கொடி போர்த்துவதன் மூலம் அவரது நடுநிலைத் தன்மைக்கு களங்கம்' என்று தடுத்ததாக விளக்கம் சொன்ன புலிகள், இன்றைக்கு சிவராமின் மனைவி ஊர்வலத்திற்கான கோரிக்கையை நாகரீகமாக நிராகரித்த போதும், புலிக் கொடி போர்த்ததன் காரணம் சிவராமின் இழப்பின் மீதான துயரமல்ல!
அதைக் காட்டி அரசியல் லாபம் தேடுவது தான்.
இயக்கத்தோடேயே வளர்ந்து இயக்கத்தின் பெயரால் கொலைகள் செய்த மாத்தயாவை துரோகி என்று இரகசியமாகக் கொலை செய்த புலிகள், ஒரு கால கட்டத்தில் புலிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமைப்பின் முக்கியஸ்தராகவும், பின்னால் புலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் பத்திரிகையாளராகவும் விளங்கி, புலிகளாலேயே துரோகி என்றும் உளவாளி என்றும் குற்றம் சாட்டப்பட்ட சிவராமை மன்னித்து மறுவாழ்வு கொடுத்திருப்பார்கள் என்பது நம்பக் கூடியதொன்றல்ல.
சிவராம் 'Tiger Brand' 'தமிழ்த்தேசியத்தின்' பொழிப்புரைஞராக ஞானஸ்நானம் பெற்று பாவமன்னிப்பு அடைந்தது, எம் பெருமான் கடைக்கண் கருணையினால் அல்ல, தமிழ்நெட் மற்றும் ஊடகங்கள் மூலமாக தங்கள் கருத்துக்களை அவர் மூலமாக வெளியில் கொண்டு வரக்கூடிய தேவையினால் எழுந்தது. வழமை போல, எல்லோரையும் பயன்படுத்திய பின்னால் குதறுகின்ற புலிகளின் பாரம்பரியத்தில் ஒரு காலகட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டவர் தான் சிவராம். அந்த வசதிக்காக, புலிகள் சொன்ன 'துரோகம்' சில காலம் மறக்கப்பட்டிருந்தது. இதனால் தான் உலகத்தமிழர்களும், ஈழமுரசுகளும், முழக்கங்களும், ஈழநாடுகளும் சிவராமை மேற்கோள் காட்டவும் மறுபிரசுரம் செய்யவும் முண்டியடித்தது மாத்திரமன்றி, புலம் பெயர் புலி ஊடகங்களின் ஆஸ்தான ஆய்வாளராக, புலிகளின் Spin Doctor ஆக சிவராம் மறுபிறவி எடுக்க முடிந்தது.
ஆழிப்பேரலை அழித்த பின்னால் நீண்ட காலத்தின் பின்னர் அறிக்கை, பாப்பரசர் இறந்த பின்னர் சில நாட்களின் பின்னர் அனுதாபம்.. ஆனால் சிவராமுக்கு மறுநாளே மாமனிதர் பட்டம். புலிவால் சும்மா ஆடாது!
சமீபத்திய சிவராமின் எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்களும் தொடர்ந்திருந்தால், இன்னும் சில நாட்களில் புலிகளே ஆனந்தக் கூத்தாடியிருக்கவும் கூடும். இன்றைக்கு இந்த மாரடிப்பு புலிகளுக்கு பயன் தரக் கூடும் என்பதால், அரசாங்கத்திற்கு இக்கட்டான நிலையும் இராணுவத்தினால் கருணாவிற்கு கிடைக்கும் பாதுகாப்புக்கு நெருக்கடியும் வரக் கூடும் என்பதால் தான் இன்றைக்கு சிவராம் 'புனிதர்' பட்டம் பெற்றிருக்கிறார். தாங்கள் சுட்டுக் கொல்லும் போதெல்லாம் 'இனம் தெரியாதவர்களால்' என்று சொல்கின்ற புலிகள், தங்களைச் சுடும் போது மட்டும் 'இராணுவப் புலனாய்வுப் பிரிவு' என்று உடனடியாகவே கண்டுபிடிக்கின்ற மர்மத்திற்கான காரணம் இதுதான். நாட்டில் மரணங்கள் மலிவானவை மட்டுமல்ல, மர்மமானவையும் கூட!
ஆயுதம் இல்லாதவர்களை, சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை, பிள்ளையோடு போனவர்களை, திருவிழாவில் நின்றவர்களை எல்லாம் பிஸ்டல் குழு மூலம் கேட்டுக் கேள்வியில்லாமல் 'இனம் தெரியாமல்' 'போட்டுத் தள்ளி' தங்களை 'அழித்தல்' கடவுளாக நினைத்துக் கொண்டு, கொலை செய்வது தங்கள் மீது சுமத்தப்பட்ட தெய்வீகக் கடமை என்று கொலையைக் கூட புனிதமாகக் கருதுகின்ற கூட்டமாகத்தான் புலிகள் இருக்கிறார்கள். மற்றவர்களைத் தாங்கள் கொலை செய்வதை நியாயப்படுத்துவது, மற்றவர்கள் தங்களைக் கொல்வதற்கான நியாயத்தை வழங்குகிறது என்ற உண்மை இதுவரை காலமும் புலிகளுக்கு புரிந்ததில்லை. காரணம் இதுவரையும் புலி தான் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
மற்ற இயக்கங்கள் அன்று முதல் இன்றுவரை புலியின் கோரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனவே தவிர, எதுவும் தீவிரமாக புலிகளைத் திருப்பித் தாக்குவதில், பயம் காரணமாகவோ அன்றி நியாயம் காரணமாகவோ, முயற்சிக்கவில்லை. எனவே தட்டிக் கேட்க ஆளில்லாததால் தம்பி சண்டப் பிரசண்டன் ஆன நிலை வந்தது.
ஆனால் ஆழ ஊடுருவும் படையணியும் கருணாவின் குழுவும் புலி வேட்டையில் இறங்கிய பின்னர் தான், தன்னையும் குறி வைத்து வேட்டையாட முடியும் என்ற எண்ணம் புலிக்கு உறைத்திருக்கிறது. இதுவரையும் யுத்தத்தில் 'கும்பலோடு கோவிந்தா'வான ஆயிரக்கணக்கான போராளிகளை விட, தனித்தனியே புலியை குறி வைத்து வேட்டையாட ஒரு கூட்டம் இருக்கிறது என்றவுடன் தான் Shrek படத்தில் வருகின்ற 'சப்பாத்துப் போட்ட பூனை' போல, பரிதாபகரமாக 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' ரக முகத்தை வைத்துக் கொண்டு, 'இந்த ஒன்றுமறியா அப்பாவிக்கு' இப்படி அநியாயம் செய்யலாமா? என்று புலி கண்ணீர் விட்டு நீதி கேட்கிறது. தானும் உயிரைப் பாதுகாக்க தப்ப ஓட வேண்டிய நிலை வரும் என்றோ, பொலிசாரிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை வரும் என்றோ சமீப காலம் வரை புலி கனவிலும் நினைத்திருக்காது.
கண்ணகி பாண்டியனிடம் நீதி கேட்டது போல, எந்தக் காலத்தில் புலி மக்களிடம் நீதி கேட்டது? எல்லா இயக்கங்களையும் அழித்த போது மக்களிடம் நீதியா கேட்டது? கருணா பிரிந்து போன போது, அதை முறியடிக்க கிழக்கே புலிகளை அனுப்பிய போது மக்களிடம் நீதி கேட்டதா? தனக்கு வெற்றி ஏற்படும் என்ற நிலையில் புலி மக்களைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டதில்லை. இன்றைக்கு உயிரைக் கையில் பிடித்து வாழும் நிலை புலிக்கு ஏற்பட்டதால் தான் இன்று இந்தப் புலம்பல் எல்லாம். மற்றவர்களுக்கு தான் கொடுத்த கசப்புக் கசாயத்தை கட்டாயமாக விழுங்க வேண்டிய நிலை புலிக்கு.
புலிகளின் இந்த மாரடிப்புக்கும் அப்பால் ஒரு மனிதனின் இழப்பு என்ற வகையில் சிவராமின் இழப்பு துயரமானது தான். மனித நேயம் கொண்டவர்களால் எந்த உயிர்பறிப்பையும் கண்டு களிபேருவகை கொள்ள முடியாது.. அது புலியின் உயிராக இருந்தாலும் கூட!
பத்திரிகையாளர் சின்னபாலா கொல்லப்பட்ட போது, ஏதும் புரியாத அவரது குழந்தை தன் தங்கையை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி எப்படி இதயத்தைப் பிழிந்ததோ, அதைப் போன்றது தான் சிவராமின் உடலை அடையாளம் காட்டிய மனைவியும் மகளும் கதறும் காட்சி. புலிகளுடைய கொலை வெறியை கண்டிக்கும் எங்களில் பலர் எங்கள் குடும்பத்தினரை அங்கே கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். கொள்கை, இலட்சியம் என்ற பொய்மைகளுக்கும் மேலாக, மனிதம் என்பதை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்தக் காட்சிகள் துயரத்தை வருவிக்காவிட்டால், அவர்களில் மனிதம் இல்லை என்பது தான் அர்த்தம். இந்த நிலையில் இவ்வாறான காட்சிகளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடும் மிருகக் கூட்டம் திடீரென்று கண்ணீர் வடிக்கும் கோமாளித்தனத்தை என்னவென்பது?
சிவராமின் நிலைப்பாடுகள், கருத்துக்கள், அதன் மீதான உறுதிப்பாடுகள், எழுத்து நேர்மைகள் எல்லாம் பற்றி பலருக்கு கேள்விகள் இருந்தன. அவரது ஆரம்ப இயக்க வாழ்வில் உட்கட்சிக் கொலைகளில் நேரடியாக ஈடுபட்டது, ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டது என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்தும் இருந்தன. அது எங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றியெல்லாம் எழுத்து மூலமாக வெளிக்கொணர்வது எமது சமூக அரசியலின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகத் தான் இருந்தது.
எங்களுடைய நிலைப்பாடுகள் பற்றியும் அவருக்கு இருக்கக் கூடிய நியாயமான கேள்விகளுக்கும் கண்டனங்களுக்குமான விவாதத்திற்கும் எம்மில் பலர் தயாராகத் தான் இருந்தார்கள். ஆனால் எந்தக் கட்டத்திலும் அவரது உயிர் பறிக்கப்படுவது தான் சரியான முடிவு என்று யாரும் எழுதியதில்லை. அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தில் துரோகி, உளவாளி என்று புலிகள் எழுதிய அளவுக்கு கூட யாரும் எழுதவில்லை.
யாராவது சிவராம் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டிற்கு மரணம் தான் சரியான தீர்ப்பு என்று நினைப்பார்களாயின், தங்களைப் புலிகள் கொல்வதற்கான நியாயத்தையும் தாங்களே வழங்குவதாகவே கருத முடியும். எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் என்பது எப்படி விட்டுக் கொடுக்க முடியாத ஒன்றோ, புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் பிரச்சனை கருத்துச் சுதந்திரம் பற்றியதல்ல, கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டிருப்பதற்காக ஒருவரைக் கொல்லலாம் என்ற தத்துவம் தான் இங்கே பிரச்சனை. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்காக எப்படிக் கொல்ல முடியும், அந்த அதிகாரத்தை யார் வழங்கினார்கள் என்பதில் தான் கருத்து முரண்பாடே வருகிறது.
அதுகூட, எழுத்து மூலமானதே தவிர, சாப்பாட்டில் நஞ்சு வைத்துக் கொல்லும் அளவிலோ, ஆயுதம் ஏந்தி சுட்டுக் கொல்லும் அளவிலோ இல்லை.
ஒரு மனிதனின் வாழும் உரிமையை தன்னிச்சையாகப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. சமூகம் நீதிவிசாரணைகளின் பின்னால் வழங்குகின்ற மரண தண்டனையைக் கூட நிறைவேற்றுவதில் பல்வேறு எதிர்ப்புகள் நாகரிக உலகில் இன்றும் இருக்கின்றன. இந்த நிலையில் கொலையை ஆதரித்து நியாயப்படுத்துவது என்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகாது.
ஆனாலும், கருத்துச்சுதந்திரம் என்ற கருதுகோள், கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவர்களால் தவறான அர்த்தத்தில் திரிக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து வெளியீட்டிற்கான அச்சுறுத்தலை, மரண பயமுறுத்தலை நிராகரிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை ஆதரிப்பவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் பெரிதும் இருப்பதில்லை.. போட்டியாக அதே மிருக உணர்வுள்ள எதிர்க்கூட்டம் வரும் வரைக்கும்!
சர்வதேச நியதிகளின்படி கருத்துச் சுதந்திரம் 'ஜனநாயக வரம்புகளுக்கு' உட்பட்டது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். ரூவாண்டாவில் வானொலிகளில், பத்திரிகைகளில் மற்ற இனத்தவர்களைக் கொல்லும்படி பிரசாரம் செய்தவர்கள், அவர்கள் மறைந்திருக்கும் இடங்களை பகிரங்கமாக அறிவித்து கொலை செய்ய வைத்தவர்கள், வெறும் ஊடகவியலாளரின் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைக்குள்ளால் தப்ப முடியவில்லை. பலர் இனஅழிப்புக் குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதே போன்று புலிகளால் ஊடகவியலாளர்கள் என்று தூக்கிக் கொண்டாடப்படுபவர்கள் எல்லாம், தங்களை பரமசிவன் கழுத்துப் பாம்புகளாக நினைத்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் என்ற மாயைக்குள் புலிகளின் கொலைகளை கண்டும் காணாமலோ, நியாயப்படுத்தியோ வாழ்ந்தவர்கள்... அதுமட்டுமன்றி எதிர்த்தரப்பினருக்கு சவால் விட்டவர்கள். நிமலராஜனும் நடேசனும் சிவராமும் இந்த அடிப்படையில் தான் புலிகளால் போற்றிப் பாடப்படுகிறார்கள். அந்தப் பரமசிவனால் இந்தப் பாம்புகளைப் பாதுகாக்க முடியவில்லை, கரு(ணா)டன் வந்ததால்! நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், புலி வேசம் போட்டால் குதற வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது?
வெளிநாடுகளில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு, புலிகளின் கோட்டைக்குள் வாழ்ந்த இவர்களை சுலபமாக தீர்ப்பிடுவதாக பலரும் எங்களைக் குற்றம் சாட்டலாம். எங்களுக்கு வெளிநாடுகளில் ஒப்பீட்டளவில் இருக்கின்ற பாதுகாப்பு எங்கள் உயிருக்கு உத்தரவாதம் தர மாட்டாது. புலிகள் விரும்பினால் வெளிநாடுகளிலும், விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல், கொல்வார்கள் என்பதை நிருபித்துத் தான் இருக்கிறார்கள். புலிகளை விமர்சித்து சிவராம் ஐலண்டில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்த சபாலிங்கத்தின் கொலை சரியான உதாரணம். வெளிநாடுகளிலும் உயிர்ப்பயத்தில் கட்சி மாறிக் கொடி பிடித்தவர்கள் எத்தனை? வாய் திறக்கப் பயந்து மெளனமானவர்கள் எத்தனை?
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டே, முன்பக்கத்தில் தலைவர் பத்திரிகை வாசிக்கும் படத்தையும் பின்பக்கத்தில் இராணுவ அதிகாரியின் கருத்தையும் போட்டு, சிங்கத்திற்கு தலையும் புலிக்கு வாலும் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். இது உயிர்ப்பிரச்சனை. பிழைப்புக்கான வழியும் கூட. இந்த கயிறு திரிப்புகளும் கயிறு கொடுப்புகளும் கயிறு மேல் நடப்பது போன்ற நிலை. எந்த நேரமும் கழுத்தில் கயிறு விழலாம்.
பி.பி.சியின் நிருபராக இருந்தால்கூட, புலிகளின் உத்தியோகபூர்வ பிரசாரத்திற்கு மிஞ்சி எதுவும் சொல்ல முடியாத நிலை. இதனால் தான் பி.பி.சியின் சிங்கள சேவைக்கும் தமிழ்ச்சேவைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள்.
எனவே, புலிகளின் 'கோட்டையில் நின்று கொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக் கூறி' போர்க்கொடி தூக்க வேண்டும் என்றும் யாரும் இவர்களைச் சொல்லவும் இல்லை. அதிலும் எழுத்தை நம்பிய வருமானத்தில் வாழ்க்கை நடக்க வேண்டும் என்ற நிலையில் 'சத்தியசோதனைகள்' வருவதும் இயற்கை. விட்டுக் கொடுப்புகள் அங்கே நிச்சயமானவை. அதிலும் 'ஒரு ஆட்டிலறி வாங்கச் செலவிடும் பணம் இணையத்தளத்திற்கு செலவிட வேண்டும்' என்று சிவராம் புலிகளுக்கு புத்தி சொன்ன போதே, இது சம்பள உயர்வு கேட்கிறாரா?, சொத்துச் சேர்க்க நினைக்கிறாரா என்று தான் தோன்றியது.
ஊடகவியலாளர்கள் என்பதற்காக யாரையும் ஆதரிக்கக் கூடாது என்ற விதிமுறை எதுவும் இல்லை. நடுநிலைமை என்பதும் சாத்தியமானதில்லை. யாரும் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுக்கும் நிலையிலும் இல்லை.
ஆனால், மெளனமாக இருந்திருக்கலாம். கொண்டிருந்த தொடர்புகளுக்கு குடும்பமாகவே வெளிநாடு போய் தஞ்சம் அடைந்திருக்கலாம். ஆனால் ஒரு படிமேலே சென்று கருடனைப் பார்த்து சவால் விட வேண்டிய தேவை இவர்களுக்கு ஏன் வந்தது? புலிகளின் கொலைகளை 'முந்தி விழுந்து' நியாயப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?
கருணாவின் உடைவு பற்றி வந்த செய்திகளுக்கு புலிகள் உடனடியாக தெரிவித்த மறுப்பை நியாயப்படுத்த, கருணாவின் முகாமுக்கு சென்று வந்ததாகவும் அங்கு பிரிவு பற்றி எந்த தோற்றமும் இருக்கவில்லை என்று முன்னர் சொன்னது பொய்யாகி விடுமோ, அந்தப் பிரிவில் தானும் ஒரு காரணி என்று தேசியத் தலைவர் நினைத்து விடுவாரோ என்ற பயத்தில் 'அவலை நினைத்து உரலை இடித்த கதையாக' தலைவருக்காக சிவராமினால் எழுதப்பட்டது தான், புலி ஊடகங்களில் போற்றிப் புகழப்படும் 'கருணாவுக்கு ஒரு கடிதம்'. அதன் பின்னால், கருணா கோடிக்கணக்கில் வங்கியில் பணம் போட்ட விபரங்கள், பயமே இல்லாமல் கிழக்கில் சுற்றி வந்ததாக எழுதிய குறிப்புகள், தனக்கு பயமே இல்லையாம் என்று காட்ட வீரகேசரியில் உலக அரசியல் பற்றி எழுதிய கட்டுரையின் அடியில் படம் பார்த்து, சூப் குடிக்க நினைத்த தன்னை வற்புறுத்தி கட்டுரை எழுத வைத்த ஆசிரியருக்கு தெரிவித்த நன்றிகள், 'என்னையோ, நடேசனையோ கொல்வதால்..' என்றதெல்லாம் எந்தப் பாதுகாப்பை நம்பிய சவால்கள்?
கருணா பிரிந்ததாக செய்தி வெளியில் வந்ததும், தமிழ்நெட்டில் வந்த செய்திகளை ஆராய்ந்தால், இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். கருணா பிரிவது என்பது புலிகளைப் பொறுத்தவரை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத ஒன்று. இயக்க உடைவு பற்றி புலிகள் சுலபமாக கதையை வெளியில் விட்டிருக்க மாட்டார்கள். முழுமையாக தணிக்கை செய்திருப்பார்கள். ஆரம்பத்தில் உடனடியாகவே மறுத்திருந்தார்கள்.
ஆனால், கருணா பிரிந்ததும் அவருடைய கோரிக்கைகள், அவர் தலைவருக்கு கடிதம் எழுதியது என பல்வேறு விடயங்கள் தமிழ்நெட்டில் முழுமையாக பிரசுரமாகியது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவர் வன்னிப்புலிகளின் பக்கம் அப்போதே சார்ந்திருந்தால் அதை இருட்டடிப்புச் செய்திருக்க வேண்டும். பின்னால் இவர் சொன்ன எந்தக் கருத்துக்களும், கருணாவின் பிரிவின் தவறுகள் என்று சொன்ன எதுவும், அந்த குறுகிய இடைவெளிக்குள் வரவேயில்லை. கருணாவினால் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்ததும் அவரோடு கிழக்குவாதம் பேசிய கரிகாலன் உட்பட்டவர்கள் காலை வாரிய போது இவரும் சேர்ந்து காலை வாரியவர் தான்.
அதன் பின்னால் வன்னிக்கான விசுவாசத்தைக் காட்ட, தன் மீது சந்தேகம் கொள்ளும் புலிகளை நம்ப வைக்க இவர் கருணாவை நோக்கி குரைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினார். கிட்டத்தட்ட அவர் சூழ்நிலையின் கைதி என்ற நிலைக்குத் தான் தள்ளப்பட்டார். எப்போதும் எதிரிகளைப் பார்த்துக் குரைத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.
புளொட் மோகன் கொல்லப்பட்ட போது, அவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் சேர்த்தது பிரபல இராணுவ ஆய்வாளர் என்று தராக்கியைக் குற்றம் சாட்டியது கனடா ஈழநாடு. ஆனால், தான் இராணுவத்துடன் சேர்த்த அதே மோகனைப் பற்றி தமிழ்நெட்டில் எழுதும்போது 'ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருந்தவர், படிக்காதவர்' என்று தான் சிவராம் எழுதியிருந்தார். பழைய கதைகள் கிளறுப்பட்டு தனக்கு ஆபத்து வரக்கூடும் என்ற பயத்திலோ என்னவோ, இவர் இப்படியெல்லாம் கீழ்த்தரமாக எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஒரு காலத்தில் புலி எதிர்ப்பின் Poster Boy ஆக இருந்தவர் புலிகளால் மாமனிதர் ஆக்கப்பட்டது காலத்தின் கோலம் தான். தமிழ்ப் பத்திரிகையாளரிடையே ஈடு இணையில்லாத அவருடைய ஆங்கிலப் புலமை பிரமிப்பூட்டுவது. ஆங்கில இலக்கியம் முதல் சமகால அரசியல் வரை நிறைந்த வாசிப்பறிவும் ஆங்கிலத்தில் தர்க்க ரீதியாக எழுதும் ஆற்றலும் குறுகிய காலத்தில் அவரை அரசியல் எழுத்தாளராக்கியதுடன், இராணுவத்துடன் இருந்த தொடர்புகளால் செய்திகளைப் பெற முடிந்ததால், இராணுவ ஆய்வாளர் என்ற பட்டமும் ஒட்டிக் கொண்டது.
அவ்வாறான காலம் ஒன்றில் இவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்த சபாலிங்கம் கொல்லப்பட்ட போது, ஐலண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் தாயகம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். அத்துடன் பிறிதொரு தடவை கனடா வந்த போதும் நேரில் தேடி வந்து சந்தித்திருந்தார்.
2001ல் மட்டக்களப்பில் இவரும் சேர்ந்து வெளியிட்ட தினக்கதிர் பத்திரிகை அலுவலகம் 'இனம் தெரியாதவர்களால்' தாக்கப்பட்டு, கம்பியூட்டர்கள் உடைக்கப்பட்டு, இவரும் தாக்கப்பட்டிருந்தார். இது பற்றி தமிழ்நெட்டின் செய்தியில் வழமை போல, 'அடையாளம் காணப்படாத' நபர்கள் தான். ஆனால் இவரது தகவல்களின்படி 'இராணுவத்துடன் சேர்ந்த ஆயுதக்குழுக்கள்'. இது எந்த வகை 'இராணுவ ஆய்வு?'
புலியை ஆதரிப்பதால், பிழைப்பு நடத்தலாம் என்றோ, புலிகளின் கொலைப் பயமுறுத்தலுக்கு அவர்களை ஆதரிப்பது சமயோசித தந்திரோபாயம் என்றோ, மிஞ்சி இருப்பது புலிகள் தான் என்றோ, தமிழ்த்தேசியத்தை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு புலிகளினதும் தலைவரதும் புகழ் பாடத் தொடங்கினார். இராணுவ ஆய்வாளர் புலிகளின் இராணுவ பலத்தை சிலாகித்தும் பூதாகாரமாக்கி மிகைப்படுத்தியும் தனக்கு ஏற்கனவே இருந்த வாசகர் கூட்டத்திற்கும், புதிதாக ரசிகர்களாகி ஒட்டிக் கொண்ட வெளிநாட்டுப் பொங்குதமிழருக்கும், புலிகளின் விற்பனையாளராகவே மாறி விட்டிருந்தார்.
பேரலை அழிவின் பின் உதவிக்கு அமெரிக்கா வந்த போது 'அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக' புலிகள் கிலி கொண்ட போது 'புலிகளோடு மோதினால் ஈராக்கில் இழந்த இழப்பை விட அதிகமான இழப்பை அமெரிக்கா புலிகளிடம் சந்திக்க வேண்டும்' என்றெல்லாம் கதை அளக்கும் அளவுக்கு அவரது இராணுவ ஆய்வு இருந்தது. இவருடைய பிற்காலத்து எழுத்துக்கள் வெளிநாடுகளில் உள்ள பொங்குதமிழ் மந்தைகளைக் குஷிப்படுத்துவதிலேயே கண்ணாக இருந்தது. புலம்பெயர்ந்த புலி ஊடகங்களின் 'சன்மானம்' அதற்கான காரணமாக இருக்கக் கூடும்.
கருணாவின் குழுவினர் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்ட போது, மற்றவர்களுக்குத் தெரியும் முன்பாகவே இவர் தமிழ்நெட்டில் செய்தி வெளியிட்டு சாதனை புரிந்தது கடைசியில் இவர் மீது அரசாங்கம் கண் வைத்து வீட்டில் தேடுதல் வேட்டைகள் நடத்த சாதகமாக இருந்தது. 'சிங்களப் பேரினவாதத்தின் கோட்டையில் நின்று கொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக் கூறினார்' என்பது என்னவோ உண்மை தான். கொழும்பில் இருந்து கொண்டே அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கருணாவையும் எதிர்த்து எழுதிக் கொண்டே, பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், இவரால் சுதந்திரமாக உலவ முடிந்தது. இதே போல, வன்னியிலோ, யாழ்ப்பாணத்திலோ புலிகளுக்கு எதிராக எழுதிக் கொண்டு யாரும் உயிரோடு வாழ முடியாது. அத்துடன் இவர் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள குடும்பத்தோடு வன்னியில் சென்று வாழவும் 'ஏதோ காரணங்களுக்காக' விரும்பவேயில்லை.
ஆனாலும், கடைசிக் காலங்களில் அவரது எழுத்துக்களில் 'பாரிய மாற்றம்' என்று சொல்ல முடியாவிட்டாலும், சிந்தனை மாற்றம் தென்பட்டது. தமிழ்த்தேசியத்தின் வெற்றுத்தன்மை, ஜே.வி.பி கிழக்கில் கால் ஊன்றுவது பற்றிய ஆச்சரியம், அமெரிக்காவுக்கு எதிராக ஜே.வி.பியின் நிலைப்பாடு, நோர்வேயின் கையாலாகத்தனம் என்று 'வரிகளுக்கு இடையில்' அவருடைய போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடிந்தது. தமிழ்த்தேசியத்தின் பொய்மையை உணர்ந்து கொண்டாரா? அல்லது இன்னொரு குத்துக்கரணத்திற்கு தயாராகினாரா? என்பது கேள்விக்குரியது.
இவருடைய கொலைக்கான காரணம் என்ன? யார் செய்தார்கள்? என்பதில் தற்போதைக்கு ஆளாளுக்கு புத்திக்கு எட்டிய விதத்தில் ஊகங்கள் பலமாய் இருக்கின்றன.
புலிகளுடன் ஒட்டியுறவாடும் ஐ.தே.கட்சிச் சார்புப் பத்திரிகை சண்டே லீடர் எப்போதோ புலிகளின் கொலைகள் பற்றிக் கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டுக்கு சென்ற கருணா அணியின் ஒருவர் ஜே.வி.பியின் வீரவன்சவுடன் சேர்ந்திருந்த படம் ஒன்றைப் போட்டு, ஜே.வி.பி கருணா கூட்டுத் தான் இந்தக் கொலைக்கு காரணம் என்பது போல செய்தியும் எழுதி, டெயிலி மிரரில் தராக்கி கடைசியாக ஜே.வி.பியின் அமெரிக்க எதிர்ப்புப் போக்குப் பற்றி எழுதிய கட்டுரையில் The JVP is wielding its ideological cudgels against globally powerful foes indeed. The battle lines have been drawn. Weerawansa has fired the first shot என்பதை மேற்கோள் காட்டி, அதை தீர்க்கதரிசனமான வரிகள் என்று கூறியிருந்தது. அதன் மூலம் ஜே.வி.பிதான் இந்தக் கொலையைச் செய்வித்தது என்று காட்ட சண்டே லீடர் முயன்றது. அதற்காக, அதற்கு அடுத்ததாக வந்த வரிகளை திட்டமிட்டு மறைத்திருந்தது.
'But the JVP knows it can achieve a swift victory in this battle only when its captures state power.'
ஜே.வி.பியினரும், சிங்கள தீவிரவாத அமைப்புகளும் அவரை பயங்கரவாதி என்று குற்றம் சாட்டியிருந்தது உண்மை தான். அப்படிக் குற்றம் சாட்டப்பட்ட சிவராம் ஜே.வி.பி பற்றி சிலாகித்து எழுத வேண்டி வந்தது ஏன்?
வழமை போல, கருணாவின் குழு மீது சந்தேகம் உடனடியாகவே எழுந்தது. உடனடியாகவே, இதுவரையும் சிவராமைத் திட்டிய கருணா ஆதரவு ஊடகங்கள் சிவராமை 'மட்டுநகர் தந்த அறிவுப் பொக்கிசம்' என்று மாமனிதர் பட்டம் அளிக்காத குறையாகப் புகழவும் தொடங்கின. அத்துடன் வன்னிப் புலிகளின் மீது கொலைக்கான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தின. சிவராமின் பகிரங்கமான கருணா எதிர்ப்புப் போக்கும் சவால்களும் குற்றச்சாட்டுக்களை கருணா நோக்கி சுட்டுவதற்கு காரணமாய் அமைந்திருந்தன. கிங்ஸ்லி இராசநாயகம் கொலையில் கருணாவின் அணி அதை மக்கள் முன் கொண்டு சென்றது போல, சிவராமைக் கொண்டு செல்லவும் இல்லை. உண்மையாகவே புலிகள் கொன்றிருப்பதாக கருணா அணியினர் நம்பியிருந்தால், அந்த உண்மையை வெளிக் கொணர்வதிலும் அதிலிருந்து அரசியல் லாபம் பெறுவதிலும் முனைப்பாக இருந்திருப்பார்கள்.
ஆனாலும், கருணாவின் குழு கொழும்பில் புலிகளுக்கு தப்ப மறைந்து வாழ்ந்த நிலையில் இவ்வாறு சுதந்திரமாக காத்து நின்று கடத்திச் சென்றிருக்க முடியுமா? என்பது ஒரு கேள்வி. தற்போது நியூட்டன் கடத்தப்பட்ட நிலையில் இராணுவப் புலனாய்வுக் குழுவினரும் கருணா அணியினரும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளும் அதன் மூலமான பாதுகாப்புகளும் சாத்தியம். பொலிஸ் நிலையத்தின் முன் தமிழர்கள் காத்து நின்று கடத்திச் செல்வது என்பது கேள்விக்குரிய விடயம்.
கடத்திச் சென்றது சித்திரவதை செய்து தகவல் அறிவதற்காக அல்ல, உடனடியாகக் கொல்வதற்காகவே என்றால், கொலை கோபம் சம்பந்தப்பட்டது என ஊகிக்கலாம்.
இன்ஸ்பெக்டர் ஜெயரத்தினத்தை கடத்திய கோபத்தில் பொலிஸ் உளவுப் பிரிவினர் செய்திருக்கலாம் என்று ஒரு புறமான ஊகமும் வெளியாகிறது. அது சாத்தியம் என்றாலும், சிவராமைக் கொல்வதால் புலிகளுக்கு என்ன செய்தியைக் கொடுக்க முடியும்? நியூட்டன் கைது என்பது புலிகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அளவுக்கு சிவராமின் மரணம் புலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதை அவர்கள் பிரசாரத்திற்கு பாவிப்பதில் தான் முடியும். முக்கியமானவர்களைப் பிடித்து வைத்து, கைதிப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு சிவராமிற்கு புலிகளிடம் என்ன இராணுவ முக்கியத்துவம் இருக்கிறது?
சிவராமின் போக்கில் அதிருப்தியடைந்து புலிகளே கொன்றிருக்கலாம் என்று இன்னொரு வாதமும் எழுகிறது. சிவராமின் கொலையால் யாராவது பயன்பெறுவார்கள் என்றால் அது புலிகளாக மட்டும் தான் இருக்க முடியும். அந்த மரணத்தை தங்களுக்கு அரசியல் லாபம் பெறுவதற்கான வழியாக உடனடியாகவே பயன்படுத்துவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சிவராமின் பழைய வரலாறுகளால் 'வழிகாட்டப்பட்ட' புலிகள் அவரை மன்னித்திருப்பார்கள் என்பது நம்ப முடியாத ஒன்று. அல்லது நியூட்டன் காணாமல் போனதில் சிவராமுக்கு பங்கு இருப்பதாகவும் புலிகள் கருதியிருக்கக் கூடும். கடத்தப்பட்ட அன்று வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து பேசியவரின் குரல் 'தெரிந்த குரல்' என்று மனைவி சொன்னது, சிவராமுக்கு தெரிந்தவர்கள் என கருதப்பட்டால் அது புலிகளாகவும் இருக்கக் கூடும். அவசரமாக தலைவர் மாமனிதர் விருது கொடுத்தது கூட, கடத்தல் பற்றியும் கடத்திய வாகனம் பற்றியும் தகவல்கள் வந்ததால், மாட்டுப்படுவதற்கு முன்னால் பெயரைக் காத்துக் கொள்ளும் முயற்சியாகவும் இருக்கக் கூடும். தாங்களே கொலை செய்து விட்டு தாங்களே அஞ்சலி செலுத்தும் கலையில் புலிகள் கை தேர்ந்தவர்கள் என்பது தெரிந்த விடயம் தான். கிங்ஸ்லி ராசநாயகத்தைக் கொன்று விட்டு, தாங்களே அஞ்சலி செலுத்தியவர்கள் புலிகள்.
இருந்தாலும், தற்போதைய நிலையில் புலிகளுக்கு சிவராம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதை இழக்க புலிகள் தற்போதைய நிலையில் தயாராக இருந்திருக்க மாட்டார்கள் என்றே கருத முடிகிறது.
எது எப்படி என்றாலும், இந்த மரணம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் முக்கியமானது, புலிகளை ஆதரிப்பது என்பது உயிருக்கு உத்தரவாதம் அல்ல என்ற செய்தி. பரமசிவன் கழுத்துப் பாம்புகளாக நினைத்து கருடனைச் சௌக்கியம் கேட்ட பலர், இனிமேல் இடியோசை கேட்டது போல புற்றுக்குள் பதுங்கிக் கொள்ளவும் கூடும். இது ஒருவகையில் ஊடகவியல் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கும்.
இந்தக் கொலை தரும் செய்தி அதுதான் என்றால், அது சிவராம் தானே என்று மெளனமாக இருப்பது பல்வேறு பதில் கொலைகளுக்கும் வழி காட்டக் கூடும். இந்த மெளனத்தால் உற்சாகம் பெற்று பல 'இனம் தெரியாதவர்கள்' இவ்வாறான கொலைகளைத் தொடரவும் கூடும்.
இப்போது கனடாவில் முழக்கம் 'சிவராம் போன்ற கொலைகள் கனடாவில் ஈபிடிபி காரர்களினால் விரைவில் நடத்தப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று எழுதி, புலிகளின் கொலைகள் கனடாவில் நடப்பதற்கு கட்டியம் கூறியும் அதை மற்றவர்களின் தலையில் போடுவதற்கும் வழிவகுத்திருக்கிறது. புலி வரும் பின்னே, பூச்சுற்றல் வரும் முன்னே!
மனிதர்களின் மரணத்தின்போது அஞ்சலிகளில் அவரது 'மற்றப்' பக்கம் மறைக்கப்பட்டு, அவரை நல்லவராக மிகைப்படுத்திச் சித்தரிப்பது ஒரு மரபுதான். ஆனால் சிவராமைப் பொறுத்தவரை, பின்குறிப்புத்தான் சுவாரஷ்யமாக இருக்கிறது.
புலிகளின் பினாமி இணையத்தளமான நிதர்சனம் புலிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை விமர்சிக்கும் எவரையும் பண்பாட்டுக்கு ஒவ்வாத வகையில், எழுத்துப் பிழைகளுடன், கேவலமாக எழுதி வருவது தெரிந்ததே. அவர் கடத்தப்பட்டவுடனேயே, நிதர்சனம் அவரை 'நிதர்சனம் இணையத்தளத்தின் ஸ்தாபகர், பிரதம ஆசிரியர், பிரதம செய்தி ஆசிரியர், பிரதம ஆலோசகர்' என்றெல்லாம் வர்ணித்திருந்தது. சில நேரங்களில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் பழியை சிவராமின் மேல் போடும் நிதர்சனத்தின் செயற்பாடாகவும் இருக்கலாம். அல்லது இரகசியமாகவே சிவராம் பற்றி அவதூறு செய்யும் நோக்குடன் புலிகள் நடத்திய நாடகமாகவும் இருக்கலாம்.
ஆனால் இது உண்மையாக இருந்தால், சிவராம் பற்றி மேன்மையாக மிகைப்படுத்தி எழுத என்ன தான் எழுத இருக்கிறது?
வன்னி முதல் கனடா வரைக்கும் 'சிவராம் ஒரு ஆயுதம் ஏந்தாப் போராளி, நம் மத்தியில் உள்ள சில எழுத்தாளர்கள் எதிரிக்கு விலை போய் தமிழ்த் தேசியத்தை குத்திக் காயப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மாமனிதர் சிவராம் யாருக்கும் விலை போகாமல் தன் இறுதி மூச்சுவரை தமிழினத்திற்காக வாழ்ந்தவர்' என்று புலிகளின் பினாமி அமைப்புகள் சிவராமுக்கு புலிக் கொடி போர்த்துக் கொண்டிருக்கின்றன. சிங்கள ஆய்வாளர் ஒருவர் றிச்சாட் டி சொய்சா கொல்லப்பட்டபோது உலக அரங்கில் ஏற்பட்ட அதிர்வலைகள் போல இந்தக் கொலையின் போதும் ஏற்படும் என்று எழுதியிருக்கிறார். றிச்சாட் டி சொய்சா எந்த அமைப்பின் தலைவருக்கும் புகழ் பாடாமல், தன் நடுநிலைத் தன்மையில் நிலையாக நின்றவர். ராஜினி திரணகம போன்று மனித உரிமைகளுக்காக போராடியிருந்தால் கூட ஒருவேளை பாதிப்பு இருந்திருக்கும்.
ஆனால் சர்வதேசமே கண்டிக்கின்ற அரசியல் கொலைகளையும், சிறார் கடத்தல்களையும் செய்கின்ற புலிகளின் இணையத்தள ஆசிரியர் என்றதுமே அவருடைய நடுநிலைத்தன்மை போய், புலிப் பிரசாரகர் என்ற நிலைக்கு வந்ததும் சர்வதேச அரங்கில் அதன் பாதிப்புகள் வெறும் கண்டனங்களாகத் தான் இருக்கின்றன. வழமை போல, எந்த பத்திரிகையாளர் இறந்தாலும் கண்டிக்கின்ற ஊடக அமைப்புகள் தான் வழமை போல கண்டித்து அறிக்கை விட்டிருக்கின்றன. நிமலராஜன், நடேசன், தராக்கியை புலிகளின் ஊதுகுழல்கள் தான் கருத்துக்களுக்காக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் என்று தூக்கிக் கொண்டாடுகின்றன. சர்வதேச சமூகத்தின் முன் அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் தான். அவர்களை நடுநிலையாளர்களாகக் காட்டாமல், தங்கள் ஆதரவாளர்களாகக் காட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கூட புரிந்து கொள்ளும் அளவில் புலிகளும் அதன் பினாமிகளும் இல்லை.
சிவராம் தமிழ்நெட்டின் ஆசிரியராக இருக்கும்போது, புலிகளால் நடத்தப்படும் கொலைகளுக்கு 'இனம் தெரியாதவர்களால்' கொலை என்று எழுதி விட்டு, பின்னால் பொங்குதமிழ் மந்தைக் கூட்டத்திற்கு இந்தக் கொலை புலிகளால் தான் செய்யப்பட்டது என்று சூசகமாக உணர்த்த, கொல்லப்பட்டவர் 'முன்பு துரோகக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்', 'இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவர்' என்று பின்குறிப்பு எழுதுவார். அதன் மூலம் அந்தக் கொலைக்கான நியாயப்படுத்தல் துரோகி ஒழிப்பு என்ற பெயரில் அமுலாகும்.
அதே வழியில் சிவராமும் இன்று கொல்லப்பட்டு, 'புலி ஆதரவு இணையத்தள ஆசிரியர் இனம் தெரியாதவர்களால் கொலை' என்று பி.பி.சியில் செய்தி வெளியாவது கூட ஒருவகையில் 'கவித்துவமான நீதி'தான்.
கூசாமல் கொலை செய்யும் புலிகளுக்கும் அக்கொலைகளை நியாயப்படுத்திய சிவராம் போன்றவர்களுக்கும் யேசுவின் வார்த்தை ஒன்றை ஞாபகப்படுத்துவது இங்கே பொருத்தமானது. (பாவாடைப் பாதிரிகள் புலி வாலில் தொங்குவதால் பைபிள் பற்றிய பரிச்சயம் புலிகளுக்கு நன்றாகவே இருக்கும்)
தீர்ப்பிடாதீர்கள், ஏனெனில் தீர்ப்பிடப்படுவீர்கள்.
எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அந்த அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்!
You must be logged in to post a comment Login