மேற்குலகைப் பொறுத்த வரையில் ஒரு சில மக்களைத் தவிர, இரு ஆண்கள் துணைவர்களாக, அல்லது இரு பெண்கள் துணைவர்களாக இருப்பது சமூகத்தின் வெவ்வேறு தளங்களிலும் சாதாரணமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எமது சமூகத்தில் இது முற்றிலும் புதிதாக இல்லாவிட்டாலும், இன்னும் சரியான விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம்.
சிறிய பாடசாலை அனுபவம் ஒன்றைப் பகிர்வது மாறி வரும் சமூகத்தின் தேவைகளைச் சுட்டிக்காட்டுவதை அவதானிக்க உதவும் என நினைக்கிறேன்.
எமது பாடசாலையில் எனது வகுப்பிலுள்ள குழந்தை ஒன்று, தனது பிறந்த நாளும் அதுவுமாய், என்னிடம் வந்து, “ நான் உனக்கு ஒரு விசயம் சொல்லப் போறன், கேட்டுக் கொள்ளுவியோ?” என்ற போது, ஒரு 6 வயதுக் குழந்தைக்கான பேச்சைக் கேட்க ஆயத்தமானேன்.
“ சொல்லு பார்ப்பம் ?” என்று கூற, அவளோ,” எனக்கு மூண்டு அப்பாமார் இருக்கினம், ஒரு அப்பா வேற வீட்டில இருக்கிறார்!” என்று கூறிய போது அவள் கண்களில் தெரிந்த கலக்கம் எனக்கு ஆரோக்கியமானதாய்த் தென்படவில்லை. இருந்த போதும் இந்த மூன்று அப்பாமார்களும் இந்தக் குழந்தைக்கு எந்த விதமான குறைகளுமின்றி, அன்போடும் ஆதரவோடும் தான் அவள் கல்வியிலிருந்து அவள் பாடசாலையில் ஏனைய துறைகளில் மிளிர்வதற்கான தேவைகள் வரை பார்த்துக் கொள்கிறார்கள். நான் அந்தக் குழந்தையின் நலம் சார்ந்து எந்த ஒரு அறிவுரை வழங்கினாலும் மிக மரியாதையுடன் அதை செவி மடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு பெண் குழந்தைக்கு ஒரு தாயின் ஸ்பரிசம், ஆதரவு அனைத்தையும் இரு ஆண்களால் மட்டும் கொடுக்க முடியமா என்ற கேள்வி எனக்கு எழாமல் இல்லை.
“எனக்கு அம்மா இல்லை, அம்மாவைத் தெரியேல்ல!” என்றும் தொடர்ந்து பேசியபடி என்னை அணைத்துக் கொண்டவளை பள்ளி சட்ட விதிமுறைகளைத் தாண்டி அணைத்துக் கொண்டேன். அவளோடு இது குறித்து ஆரோக்கியமான, அவளுக்குத் தேவையான விடயங்களை கல்வி மூலமாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
இங்கு நாம், ஆசிரியர்களாய் இப்படியான சமூகவியல் மாற்றங்களையும் தகுந்த முறையில் கொண்டிழுத்து செல்ல வேண்டியே இருக்கிறது. குழந்தைகளின் மனச்சுமையை இறக்கி வைக்கும் தோள்களாயும் நாம் இருக்கும் போது, நாமும் சரியான விளக்கத்தை கொடுக்கக்கூடிய முறையில் ஆசிரியப் பயிற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெற்றோர்கள் தமது குழந்தைகளை, மாறி வரும் சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப இப்படியான விடயங்களை அங்கீகரிக்கும், சக மனிதர்களை நேசிக்கும் - மதிக்கும் மனநிலைக்கு கொண்டு வருவதில் எவ்வாறு செயற்பட வேண்டும் என அறிந்து கொள்வதும் அவசியமாகின்றது.
வளர்ந்த குழந்தைகள் ஓரின சேர்க்கையாளர்களைப் பற்றி தங்கள் நண்பர்கள் மூலமாகவோ, ஊடகங்கள் மூலமாகவோ அல்லது ஓரின சேர்க்கையாளர்களைத் தங்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல அப்படி அறிந்த பின் அவர்கள் பள்ளியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்லது அன்றாட வாழ்வின் ஒரு நிலையிலோ இது தொடர்பான சில வார்த்தைகளைக் கேட்கலாம்,
ஆனால் அவர்களுக்கு அவற்றின் சரியான அர்த்தம் உண்மையில் என்னவென்று தெரியாது. சமூக ஊடகங்கள் தம் வாயிலாக சமூக மாற்றங்கள், பருவ வயதின் வளர்நிலைப் படிகள், முக்கியமாக எம்மைச் சுற்றியுள்ளவர்களை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் போன்றவற்றைப் பற்றி பதின்ம வயதுக் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். மேற்குலக நாடுகளில் பாடத்திட்டங்களில் பால் சமநிலை, ஓரின இணையர்கள் பற்றியவை சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை பற்றிய வழிகாட்டுதலுக்காக குழந்தைகள் இன்னும் பெற்றோரையே பார்க்கிறார்கள். பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளத்தைப் பற்றி பெற்றோர்கள் தமது குழந்தையுடன் இளம் வயதிலேயே பேசுவதன் மூலம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டிய பண்பாடு, அவர்களுக்கான சுய மரியாதையைக் கொடுக்கும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் மதிப்பை அவர்களுக்குக் கற்பிக்கலாம், அதே போல் எதிர்காலத்தில் அவர்களின் சொந்த அடையாளத்தைப் பற்றிய உரையாடல்களுக்கான கதவைத் திறப்பதற்கான ஒரு சாவியாகவும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்துக் கொள்ளலாம்.
பாலினம் (Gender), பாலின அடையாளம் (Gender Identity) என்னும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கிடையேயான வித்தியாசத்தை அறிந்து கொள்வது குழந்தைகளுக்கும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இன்றியமையாததாகிறது.
பாலினம் (Gender) என்பது ஒவ்வொரு கலாச்சாரப் பண்புகளும் தம் எதிர்பார்ப்புகள் சார்ந்து ஒரு நபரின் உயிரியல், பௌதீக ரீதியான உடலிற்கு இருக்கக்கூடிய உணர்வுகள், நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை பாகுபடுத்தி வைத்திருப்பது எனலாம். இதற்கு உதாரணமாக பெண் குழந்தைகள் இளஞ்சிவப்பு உடைகளை அணிந்து பொம்மைகளுடன் விளையாடுவதையும் சிறுவர்கள் நீல உடை அணிந்து வாகனங்கள், வைத்தியர்கள் போல விளையாடுவதையும் கூறலாம்.
பாலின அடையாளம் (Gender Identity) என்பது ஒரு நபர் தனக்குள்ளே யார் இருக்கிறார்கள் என உணர்ந்து தன்னை அதற்கேற்ப அடையாளப்படுத்திக் கொள்வது. அவர்களின் பாலின அடையாளம் என்ன என்பதை அந்தத் தனிநபர் மட்டுமே சொல்ல முடியும். குழந்தைகள் பொதுவாக 5 வயதிற்குள் தங்கள் பாலின அடையாளத்தை அறிந்து கொள்வார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. மேற்கத்தேய நாடுகளில் வாழுகின்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்கள் இவை குறித்த அனுபவங்களைக் குறைவாகவே கொண்டிருப்பதால் தமது அறிவை வளர்த்துக் கொள்வது தமது குழந்தைகளை உள ஆரோக்கியத்தோடு பேணுவதற்கும் வழி வகுக்கும்.
Reference:
You must be logged in to post a comment Login