Recent Comments

    உயிர் கொல்லும் செல்லிடப் பேசி

    செல்லிடப் பேசிகள் தற்போது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. உடுக்கை இழந்தவன் கை போல, செல்லிடப் பேசியை இழந்தவர் கை படும் பாடு சொல்லவே தேவையில்லை. சுற்றாடலில் உள்ளவர்கள், நடைபெறும் சம்பவங்கள் பற்றி எந்தக் கவலையுமே இல்லாமல் பாட்டுக்கு யாருடனோ பேசிக் கொண்டு போவர்கள் எங்கும் உளர். ஆனால் அதன் ஆபத்துக்கள் சொல்லி மாளா. கண் திறந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கும், மனம் செல்லிடப் பேசியில் திளைத்திருக்க போய்க் கொண்டே இருக்கும் போது இடம் பெறும் விபத்துக்கள் உயிரைக் கூடப் போக்கலாம். செல்லிடப் பேசிகள் மட்டுமன்றி, பாட்டுக் கேட்கும் கருவிகள் எல்லாமே எங்கள் புலன்களை மறைத்து, ஆபத்துக்களில் மாட்டி விடக் கூடியவை. காதில் பாட்டுக் கேட்கும் கருவியை மாட்டிக் கொண்டே புகையிரதப் பாதையில் நடந்து போய் புகையிரதத்தால் மோதுண்டு இறந்தவர்கள் பலர். வாகனம் செலுத்தும் போதே செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டே போய் விபத்துக்குள்ளானவர்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வருகின்றன. இதனால் பல இடங்களில் வாகனம் செலுத்துவோர் செல்லிடப் பேசி பயன்படுத்துவது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. அதையும் விட நடந்து கொண்டே குறுஞ் செய்தி அனுப்புவர்களை விட, வாகனம் செலுத்தும் போதே, குறுஞ்செய்தி அனுப்பும் மாவீரர்களும் உள்ளனர். நடந்து கொண்டே வீடியோ விளையாட்டுக் கருவி விளையாடிக் கொண்டு செல்வோர் ஒரு புறம். சமீபத்தில் நிலக்கீழ் புகையிரத மேடையில் செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டே புகையிரதப் பாதையில் வீழ்ந்தவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக புகையிரதம் வராததால் தப்பித்துக் கொண்டார். பிலடெல்பியாவில் நடந்த இந்த சம்பவத்தில் அவர் சுதாகரித்துக் கொண்டே மீண்டும் தப்பி மேடையில் ஏற பல நிமிடங்கள் பிடித்தன. இவ்வாறான விபத்துக்கள் நடைபெறும் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேரிலாண்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி கடந்த ஆறு வருடங்களில் காதில் கேட்கும் கருவியைக் கொழுவிக் கொண்டே சென்று விபத்தில் அகப்பட்டு கொல்லப்பட்ட 116 பேரில் மூன்றில் இரண்டு பகுதியினர் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆவர். இதில் பாதிப் பேர் புகையிரதங்களால் கொல்லப்பட்டவர்கள். மூன்றில் இரண்டு விபத்துக்களில் சாரதிகள் ஹோர்ண் அடித்தும் இறந்தவர்கள் பாதையை விட்டு விலக முயற்சிக்கவில்லை. கடந்த வருடம் அமெரிக்காவில் 1152 பேர் செல்லிடப் பேசிப் பாவனை விபத்துக்களில் மாட்டிக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஆபத்தில் மாட்டிய பலர் தாங்கள் செல்லிடப் பேசி பாவித்த விடயத்தை மறைத்திருப்பார்கள். 24 வயதான ஒருவர் நடந்து கொண்டே குறுஞ்செய்தி அனுப்பப் போய் ஒரு மின் கம்பத்தில் மோதிக் கொண்டார். 67 வயதான ஒருவர் காதில் கேட்கும் கருவி மாட்டிய சைக்கிள்காரர் ஒருவரால் மோதுண்டார். பிலடெல்பியாவில் ஒரு பெண் அங்காடித் தொகுதி ஒன்றில் குறுஞ் செய்தி அனுப்பிக் கொண்டே நடந்து போகும் போது அங்குள்ள நீர்த் தொட்டி ஒன்றில் விழுந்துள்ளார். பஸ் ஒன்றை ஓட்டிக் சென்ற ஓட்டுனர் ஒருவர் வாகனம் செலுத்திக் கொண்டே குறுஞ்செய்தி அனுப்பப் போய் விபத்தில் மாட்டிக் கொண்டுள்ளார். லொஸ் ஏன்ஜலஸில் சுற்றாடலைக் கவனிக்காமல் குறுஞ் செய்தி அனுப்பியவர் ஒருவர் கரடி ஒன்றிடம் மாட்டிக் கொண்டார். பலரும் தங்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும் என்று கருதுகின்ற போதும், ஆய்வாளர்களின் ஆய்வின்படி பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போது எந்த ஒரு வேலையிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது. தாங்கள் செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருமே தாங்கள் கவனமாக இருப்பதாகவும் மற்ற முட்டாள்கள் தான் கவனம் இல்லாமல் இருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் எல்லோருமே கவனக்குறைவாக இருப்பதால் தங்களை மட்டுமன்றி மற்றவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login