விடுமுறைக் கொடுப்பனவு: தொழிலிட உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
ஒன்ராறியோவில் வேலை செய்வோருக்கு, தொழிலிடங்களில் சட்டபூர்வமாய் வழங்கப்படும் விடுமுறை பற்றியும் அதற்கான கொடுப்பனவு பற்றியும் பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஒன்ராறியோ சட்டப்படி விடுமுறை வேறு (Vacation Time), விடுமுறைக் கொடுப்பனவு (Vacation Pay) வேறு.
வங்கிகள், விமானசேவை நிறுவனங்களில் பணி யாற்றுவோர், பயிற்சிக்காக வேலை செய்யும் மாணவர்கள் போன்றவர்கள் தவிர்ந்த மற்ற சாதாரண வேலையாட்களுக்கு ஒரு வருடம் முழுமையான வேலை செய்த பின்னால் வருடாந்தம் இரண்டு கிழமைகள் விடுமுறை (Vacation Time)) வழங்கப்பட வேண்டும். உங்கள் வேலை இடத்தில் தொழிற் சங்கம் (யூனியன்) உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினால், அது நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தப்படி சில நேரம் உங்களுக்கு அதை விட அதிகமான விடுமுறையும் வழங்கப்படலாம். நீண்ட காலத் தொழிலாளிகளை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக நிறுவனமே அதிகளவு விடுமுறையை வழங்கலாம்.
அந்த விடுமுறை காலத்தில், கடந்த வருடத்தில் உங்கள் மொத்த வருமானத்தின் நான்கு வீதம் விடுமுறைப் பணமாக (Vacation Pay) வழங்கப்பட வேண்டும். 52 வாரங்கள் கொண்ட வருடத்தில் 40 மணி நேர வார வேலைப்படி, வருடாந்தம் வரும் 2000 மணிகளுக்கு நான்கு வீதமாக கிடைக்கும் 80 மணிகள் இரண்டு வாரங்களாகும்.
வழமையான மணி நேரச் சம்பளத்தை விட, மேலதிக நேர வேலை, விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு, போனஸ் போன்றவற்றை உள்ளடக்கி நான்கு வீதம் கணக்கிடப்படும்.
விடுமுறை எப்போது வழங்கப்பட வேண்டும் என்பதை நிறுவனமே முடிவு செய்யும். சில நேரங்களில் விடுமுறைக்காக முழு நிறுவனத்தையும் நிர்வாகம் மூடி வேலையாட்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்மஸ் காலத்தில், விடுமுறை வழங்கலாம். சில நேரங்களில் வேலை குறைந்த நாட்களில் உங்கள் விடுமுறையை எடுக்கும்படி நிறுவனம் வற்புறுத்தலாம். வேலை கூடிய நாட்களில் விடுமுறை தர மறுக்கலாம்.
ஆனால் இரண்டு வாரங்களை ஒன்றாகவோ, அல்லது ஒவ்வாரு வாரமாகவோ விடுமுறையை வழங்க வேண்டும். விடுமுறையை முடிவு செய்வது நிறுவனமாக இருந்தாலும், வேலையாட்களை ஒவ்வொரு நாட்களாக எடுக்கும்படி வற்புறுத்த முடியாது.
நீங்கள் விரும்பினால், வருடத்தில் எப்பகுதியிலாவது நிறுவனத்தின் சம்மதத்துடன் அந்த விடுமுறையைப் பெறலாம். நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு நாளாக, நீண்ட வார இறுதிகளில் இன்னொரு நாளை விடுமுறை தினமாக்கி, நீண்ட ஓய்வு பெறலாம்.
உங்கள் விடுமுறை நாளில் அரச பொதுவிடுமுறை நாள் வந்தால், அடுத்த மூன்று மாதத்திற்குள் அல்லது எழுத்து மூலமாயின் ஒரு வருடத்திற்குள் சம்பளத்துடனான ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும். அந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக சம்பளத்தைத் தரும்படியும் கேட்கலாம்.
பிரசவ விடுமுறை, புதிய பெற்றோருக்கான விடுமுறை போன்ற விடுமுறைகளில் இருந்தாலும் வருடாந்த இரு வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்தக் காலங்களில் வருமானம் குறைவாக இருப்பதால், அதற்கான விடுமுறைக் கொடுப்பனவு குறைவாகவே இருக்கும்.
வேலை செய்யும் வருடம் முடிந்த பின்னால் பத்து மாதங்களுக்குள் விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கான விடுமுறையைப் பயன்படுத்த முடியாது போனால், வருட முடிவின் பத்து மாதங்களுக்குள் அந்த விடுமுறையைப் பயன்படுத்த நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ஆனால், அடிப்படை இரண்டு வாரங்களை விட அதிகமாக விடுமுறை பெறுவோர், பயன்படுத்தா விட்டால், இரண்டு வாரங்களுக்கு அதிகமான மீதி வாரங்களை இழக்க நேரிடலாம்.
நீங்கள் தற்காலிக வேலை செய்பவராயின், உங்களுக்கு வேலை வாங்கித் தரும் முகவர் (Temporary Agency) உங்களுக்கு நான்கு வீத சம்பளத்தை வருட முடிவில் விடுமுறைப் பணமாகத் தர வேண்டும்.
நீங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால், அதுவரையும் சம்பாதித்த தொகையின் நான்கு வீத விடுமுறைப் பணம் உங்களுக்குத் தரப்பட வேண்டும்.
பண நெருக்கடியாலோ, 'லீவு எடுத்தால், வீட்டில உந்த அறுவான்ரை தொல்லை தாங்கேலாது, மனிசரை சும்மா இருக்க விடான்' என்று விடுமுறை எடுக்க விரும்பாமலோ இருந்தால், உங்கள் நிறுவனத்தின் எழுத்து மூலமான அனுமதியுடன், அரசாங்கத்தின் Director of Employment Standards இன் அனுமதியுடன் பணமாகப் பெறலாம்.
உங்களுக்கு விடுமுறையாகத் தரும் இரு வாரங்களிலும் வழமையான சம்பளம் வழங்கப்படும். சில நேரம் மேலதிக வேலை காரணமாக நீங்கள் அதிகமாய் சம்பாதித்து, அதன் நான்கு வீதம் இரண்டு வார கொடுப்பனவை விட அதிகமாயிருந்தால், அந்த மீதித் தொகையை நிறுவனம் உங்களுக்குச் செலுத்த வேண்டும்.
எனவே உங்கள் தொழில் உரிமைகளைத் தெரிந்து கொண்டால், மானத்துடன் வேலை செய்வது மட்டுமன்றி, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நிறுவனங்கள் தராமல் ஏமாற்றுவதையும் தவிர்க்கலாம்.
பதிவு செய்யாமல் தமிழ் மகன் நிர்வாக நிறுவனங்களில் கைக் காசுக்கு வேலை செய்வோருக்கு இந்த விதிமுறைகள் செல்லுபடியாகாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
You must be logged in to post a comment Login