வசதிக்கேற்ற மாடி வீட்டு வாசம்
வீடு வாங்க நினைப்போர்களுக்கு பல்வேறு தெரிவுகள் உள்ளன. பலமாடிக் குடியிருப்பாகவோ, காணி நிலமும் அப்பிள் தோட்டமும் உள்ள தனியான வீடாகவோ உங்கள் தெரிவு இருக்கலாம். வருமானம், வாழ்க்கை முறை, தேவை என்பவற்றைப் பொறுத்து அந்தத் தெரிவுகள் அமையும்.
வருமானம் குறைந்தவர்களும் சொந்தமாக வாங்கக் கூடியதாக கைக்கு எட்டிய விலையில் உள்ளவை கொண்டோ எனப்படும் பலமாடிக் குடியிருப்புகளே. அமைவிடம், அருகில் உள்ள வசதிகள், வீட்டின் அளவு என்பவற்றுக்கு ஏற்ப விலை கூடிக் குறைந்தாலும், ஒப்பீட்டளவில் சொந்த வீடு என்று வரும்போது மலிவானவை இவையே. வீட்டுச் சொந்தக்காரர் ஆவதற்கான முதற்படியாக இதைக் கருதலாம். வீட்டின் விலை அதிகரித்தால் இதை விற்று பின்னால் நீங்கள் பெரிய வீடாகவும் வாங்கலாம். அல்லது இருக்கும் வீ;ட்டை விற்று, குறைந்த விலையில் இவற்றை வாங்கி, லாபத்தை வேறெங்காவது முதலிடலாம். மலிவு விலை என்பதால், வாங்கி வாடகைக்கு விடக்கூடிய முதலீடாகவும் இது அமையும்.
தனியாட்கள், புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்கும் தம்பதியர், பிள்ளைகள் திருமணமாகி வெளியேறியதால் தனித்த பெற்றோர், வயோதிபர்கள், நகர் மையத்தில் வேலைக்கு அருகில் குடியிருக்க விரும்புவோர் போன்றோருக்கு தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு பெறுவது வசதியாக இருக்கும்.
நகர் மையத்தில் மட்டுமன்றி, நகரின் பல பகுதிகளிலும் இந்த பலமாடிக் குடியிருப்புகள் பெருமளவில் கட்டப்படுவதால், வாங்குவோருக்கு பல்வேறு தெரிவுகள் செய்ய வசதியாக எங்கும் இவை உள்ளன.
நிலத்துடனான வீடுகளுக்கு இருக்கும் பனி ஒதுக்கல், புல் வெட்டுதல், வேலிச்சண்டை போன்ற தலையிடிகள் இவற்றுக்கு இல்லை. இதைவிட, நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி வசதிகள், கட்டடத்திலேயே கடை, மண்டபம் போன்ற வசதிகள் உள்ளன.
இவற்றுக்கு பாதுகாப்பு கமெரா, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளதால், இவை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை.
ஆனாலும், இவற்றுக்கான சிக்கல்களும் உள்ளன.
மாதாந்தம் பராமரிப்புக்காக பணம் செலுத்த வேண்டி வரும். அந்தத் தொகை வருடாந்தம் அதிகரிக்கலாம்.
பொதுவாழ்வு என்பதால், சட்ட திட்டங்கள், விதிமுறைகள் அதிகம். நினைத்தது போல சத்தம் போட முடியாது. சனிக்கிழமை பார்ட்டி வைத்து கும்மாளம் போட முடியாது. மிருகங்கள் வளர்க்க முடியாது. குழந்தைகள் இருந்தால் கொல்லைப்புறத்தில் ஓடியாட முடியாது. கொல்லைப்புற விவசாயம் சரிப்படாது. சிலநேரங்களில் கார் நிறுத்தும் இடத்திற்கு தனியாக விலை கொடுக்க வேண்டி வரும். மின்சாரம், நீர் தடைப்பட்டால் பெரும் தலையிடி.
என்னதான் இருந்தாலும் கடைசியில் உங்கள் வாழ்க்கை முறை என்ன, வருமானம் என்ன, தேவை என்ன என்பதைப் பொறுத்தே உங்கள் வாழிடத்திற்கான தெரிவு அமையும்.
எனவே முன்னரே சாதக பாதகங்களை சரியாக அறிந்து கொண்டால், உங்கள் புத்திசாலித்தனமான முதலீடாக இது அமையும்.
You must be logged in to post a comment Login