சுப்பர் சிங்கர் போட்டியில் ‘விஜய் டிவி துரோகம் இழைத்து விட்டது, 37 நாடுகள் சதி செய்து விட்டன, திட்டமிட்ட இன அழிப்பு நடந்து விட்டது’ மாதிரி நடக்கும் திருக்கூத்துக்களைக் கண்டு, எரிச்சல் தாளவில்லை. ஈழத்தை விற்றாரா? வாங்கினாரா? பிச்சை கேட்டாரா? என்று விவாதம் வேறு நடக்கிறது.
இந்த வாய்வீச்சு வீரர்களுடன் நேரத்தை வீணாக்காமல் வாயை மூடி மெளன விரதம் மேற்கொள்வதாகத் தீர்மானித்தாலும், இந்த முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியவில்லை. கேட்பவன் கேனயன் என்ற நினைப்பில் நடுறோட்டில் பிளேன் விடும் இவர்களிடம், நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்காவிட்டால், மனிதர் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறது.
எங்களுக்குத் தெரிந்தவரையில் சுப்பர் சிங்கர் போட்டி, குழந்தைகளின் பாடல் திறமையை வெளிக்கொணர்ந்து கௌரவிப்பதாகத் தான் இருந்தது. ஏதோ தமிழ்நாட்டுக்கும் புலன் பெயர்ந்த தமிழர்களுக்குமான உதைபந்தாட்டப் போட்டி மாதிரி, கலைத் திறமைக்குள் தமிழ் ஈழத்தைப் புகுத்தியது யார்? சாட்சாத் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்கள் தான்!
திறமை இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமல், எப்படியாவது கள்ள வோட்டுப் போட்டு வெல்ல வைக்க வேண்டும் என்று நடந்த கூத்து சொல்லி மாளாது. சமூக வலைத் தளங்கள், வானொலி, தொலைக்காட்சி எல்லாம் போடுங்கோ, போடுங்கோ என்று, தமிழ் இரத்தம் ஓடுகிறது என்பதை நிருபிக்க வோட்டுப் போட வைத்தன. ஒரு கம்பியூட்டரில் இருந்து ஐநூறு வோட்டுப் போடலாம், எப்படிப் போடுவது என்றெல்லாம் அறிவுரைகள்.
இத்தனைக்கும் அந்தப் பிள்ளை தன்னைத் தமிழர் என்பதற்காகவோ, தமிழீழத்தின் அவலத்தைக் காட்ட சந்தர்ப்பம் தாருங்கள் என்றோ வாக்குக் கேட்கவில்லை. தனக்குத் திறமை இருப்பதாக நினைத்தால் வாக்களியுங்கள் என்று தான் பண்போடு கேட்டது.
உடம்பெல்லாம் சுத்தத் தமிழ் இரத்தம் ஓடும் தமிழுணர்வாளர்களே,
உலகில் எந்தத் தேர்தல் நடந்தாலும், கிடைக்கும் வாக்குகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தால், irregularities என்று கூறி வாக்குகளை வெளியிடாமல் நிறுத்தி விசாரணை மேற்கொள்வது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
அதுசரி, நீங்கள் எந்தக் காலத்தில் விசயத்தை விளங்கி வோட் போட்டீர்கள்?
‘கூட்டம் கூட கூப்பிடும் இடத்திற்கும்,
காட்டிய இடத்தில் வோட்டுப் போடவும்,
கேட்டுக்கேள்வி எதுவுமில்லாமல்
கூட்டம் கும்பலாய் அள்ளுண்டு வருவாய்’ என்று கடியரசு கொடுமொழி கோத்தவராயன் எழுதிய ‘புலன் பெயர் தமிழா! புறப்படு’ கவிதை போல, ‘சொந்தப் புத்தி எதுவுமில்லாத மந்தைக் கூட்டமாய் திரண்டெழுந்திங்கே’ அள்ளுப்பட்டுப் போய் வோட்டு போடுகிறவர்கள் தானே நீங்கள்.
1. ‘உங்களைப் புத்திசாலி என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவனை முட்டாள் என்று நினைப்பது தப்பு’ என்று ஒரு பேரறுஞர் சொன்னார். மற்றவனை மடையன் என்று நினைத்து, ‘என்ன, நம்மடையா?’ என்று, முன்யோசனையில்லாமல் வோட்டை எண்ணுக் கணக்கில்லாமல் அள்ளிப் போட்டு, அவர்களுக்கே சந்தேகம் வர வைத்து, அந்தப் பிள்ளைக்குக் கிடைத்திருக்கக் கூடிய வெற்றியின் தலையில் நீங்கள் மண் அள்ளிப் போட்டதை ஏற்றுக் கொள்வீர்களா?
2. உங்களை மட்டும் புத்திசாலிகளாக நினைக்கும் தமிழுணர்வுச் சுத்திஜீவிகளே, உங்களுக்கு இருக்கும் இனஉணர்வு தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் வந்து, ஆறு கோடி பேரில் ஒரு பாதிக் கோடிப் பேர் தங்கள் ஐநூறு வாக்குகளைப் போட்டிருந்தால், தாங்குவீர்களா? இதென்ன, திருப்பித் திருப்பிச் சொல்லி நம்பிய பொய்யான ‘உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டினோம்’ கதையா?
3. சரி, உடம்பெல்லாம் தமிழ் இரத்தம் ஓடும் தமிழுணர்வாளர்களான உங்களை விடுங்கள். ‘தமிழ் இரத்தமே ஓடாத’ துரோகிகளான எங்களையும் விடுங்கள். காலை பார்க்கின்ற அதே சீரியலை தவறாமல் மாலையும் பார்த்து, பிள்ளைகளைப் பார்க்க விடாமல் கதை சொல்கிற ஒரு அம்மா நேற்று முன்தினம் சிண்டுவுக்குச் சொன்னதைக் கேளுங்கள். ‘என்ன பாட்டு அது! அறைய வேணும் போல கிடந்தது’. எந்த வித அரசியல் சார்பும் இல்லாத ஒரு அம்மாவின் கருத்து இது.
அந்தத் திறமையான பாடலுக்கு பரிசு கொடுக்கத் தான் வேண்டும் என்று எங்களால் அடித்துச் சொல்ல முடியாத அளவுக்கு பாடகியின் தரம் குறைந்திருந்ததை உங்களால் மறுக்க முடியுமா?
4. உங்களுக்கு தேசிய கீதம் இசைத்து கண் கலங்க வைக்க முடியும் என்றால், அவர்களுக்கும் வந்தே மாதரத்தை இசைத்து, தமிழ் மண்ணுக்கு வணக்கம் செய்து, தமிழன் என்று பெருமைப்படாமல், இந்தியன் என்ற தேசிய உணர்வை வெளிக்காட்டத் தெரியாதா? அற்புதமாகப் பாடினார் என்று அடித்துச் சொல்ல முடியாவிட்டாலும், மற்றவர்களையும் சேர்ந்து பாட வைத்து உணர்வைக் கிளப்பிய அந்தச் சின்னஞ் சிறுமி வெற்றி பெற்றதும் உங்களைப் போன்ற உணர்வுக் கிளப்பலால் தானே! அந்தப் பெண் வென்ற போது எழுந்தது ஆனந்தக் கூச்சல் தானே? அநீதி நடந்ததாக யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லையே?
5. புலன் பெயர்ந்த உங்களுக்குச் சீன் காட்டுவதற்காக உங்கள் தேசியத் தலைவர் நடத்திய போராட்டம் போல, உங்களைப் புல்லரிக்க வைக்க உங்கள் விடுதலை மற்றும் தேசிய கீதங்களை, வெறும் சென்டிமென்ட் சீன் காட்டி, எந்த வித பாவமும், ராகமும் இன்றி செயற்கைத் தனமாக வலிந்து பாடியதும் பரிசு கிடைக்காததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குப் புரியுமா?
6. இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கிடைத்த பரிசை அனாதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, இலங்கையில் இன ஒற்றுமைக்காக சகல இன அனாதைகளுக்கும் பயன்படக் கூடியதாகக் கொடுக்கிறோம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், இந்தப் பிள்ளை மீது காறித் துப்ப உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? (இங்கே தமிழ் எம்.பியை தெரிவு செய்து உலக சாதனை படைக்க, கள்ள வோட்டுப் போட்டு, இப்போது ‘அவர் துரோகமிழைத்து விட்டார்’ என்று கூறி, அவரைத் தோற்கடிக்க கள்ள வோட்டுப் போட்டு, அபேட்சகர் போட்டி நடத்திய கூத்து எங்களுக்குத் தெரியாததா?)
7. யாராவது திட்டமிட்டு, அந்தப் பிள்ளையின் குடும்பத்தினர் மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று வதந்தி கிளப்பியிருந்தால், அது உண்மையா என்று கூட அறிந்து கொள்ளாமல், உங்கள் தமிழுணர்வையும் மறந்து அந்தப் பிள்ளையைத் தோற்கடிப்பதற்காகவே, கன்னடப் பிள்ளைகளுக்கு கள்ள வோட்டுப் போட உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?
8. இவ்வளவு தூரம் ஏதோ முள்ளிவாய்க்கால் அழிவு மாதிரி ஒப்பாரி வைக்கிறீர்களே! இதே பெண் சுப்பர் சிங்கருக்குப் போகாமல், இங்கே நடக்கும் மாவீரர் தின இசை நிகழ்ச்சியில் பாடினால், உங்களில் எத்தனை தமிழுணர்வாளர்கள் டிக்கட் எடுத்துப் போய் பார்த்திருப்பீர்கள்?
9. பெற்றவர்களே ‘சமூக வலைத் தளங்களில் யாரும் எதையும் எழுதலாம். அதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது’ என்று நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது என ஏற்றுக் கொண்ட பின்னால், நீங்கள் எதற்கப்பா காவடி ஆடுகிறீர்கள்?
10. விஜய் டிவி, தனுஷ்க்கு ஐரோப்பாவில் தடை, விஜய் டிவி மீது வழக்குத் தொடர தமிழ் சட்டத்தரணிகள் முடிவு என்று செய்தி வெளியிட்டு உங்களைப் புல்லரிக்க வைக்கும் புலன் பெயர்ந்த ஊடகங்களோடு போட்டி போட்டுக் கொண்டு, வழமை போல, விஜய் டிவியைப் பகிஷ்கரிப்போம் என்று பெரிதாக பீற்றிக் கொள்கிறீர்களே!
உங்களுக்கு சவால் விடுகிறோம். நீங்கள் தெருவில் இறங்கிப் போராடத் தேவையில்லை. ஐரோப்பாவில் தடை செய்யத் தேவையில்லை.
அடிக்கிற வாய்ச்சவடாலுக்கு… நீங்கள் மாவீரர்களாக இருந்தால், முடிந்தால் உங்கள் வீட்டு டிவிக்கு முன்னால் நின்று, உங்கள் மனைவி, அம்மா, மாமி, அம்மம்மா பார்ப்பதை மறைத்துக் கொண்டு, ‘இன்றுடன் இந்த வீட்டில் விஜய் டிவிக்குத் தடை’ ஒன்று சொல்லிப் பார்க்க முடியுமா? (துடைப்பக்கட்டைப் பூசை தான் நடக்கும்!)
11. இனிமேல் விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் தமிழர்கள் இனத்துரோகிகள் என்று உங்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?
நீங்கள் இத்தனை குதியங் குத்திய பின்னாலும், நடக்கும் அடுத்த சுற்றுப் போட்டியில் புலன் பெயர்ந்தவர்கள் போய் பங்குபற்றத் தான் போகிறார்கள். தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதி புலன் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து கிடைப்பதை உறுதி செய்ய, விஜய் டிவி அவர்களில் சிலரை இறுதிச்சுற்று வரைக்கும் கொண்டு வரத் தான் போகிறது. நீங்களும் வழமை போல, மானம், ரோஷம், சூடு, சுரணை எதுவுமில்லாமல் ‘தமிழருக்குக் கிடைத்த பெருமையாகவும், தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும்’ கருதி திரும்பவும் அள்ளிக் கட்டிக் கொண்டு கள்ள வோட் போடத் தான் போகிறீர்கள்.
ஆறு கோடி தமிழர்களின் கோபத்தைச் சம்பாதிக்காமல் இருக்க, விஜய் டிவி திரும்பவும் முதல் பரிசை தென்னகத்திற்குள்ளேயே கொடுக்கும். (அதுசரி, வீடு பரிசாகக் கிடைத்தால், உங்கள் மேல்நாட்டுக் குடியுரிமையைத் துறந்து, இந்தியாவில் வாழும் நோக்கம் ஏதும் உண்டோ?). இதே கூத்தை இன்னொரு தடவை நீங்கள் மேடையேற்றத் தான் போகிறீர்கள்.
சரி, உண்மையில் திறமையைக் கண்டு அவர்கள் முதல் பரிசு தந்தாலும், உங்கள் கள்ள வோட்டுகளை மறந்து, ஏதோ தமிழீழம் கிடைத்து விட்டது போல துள்ளிக் குதிப்பீர்கள். முன்னம் ஒரு காலத்திலே, கோட்டையைப் பிடித்தது முதல் கொட்டாவாவில் கருணாவின் சகாக்களுக்கு சாப்பாட்டில் நஞ்சு வைத்துக் கொன்றது வரைக்கும் உங்களின் ஆனந்தத் தாண்டவத் துள்ளிக் குதிப்புகளை நாங்கள் கண்டு ரசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
உங்களுக்கு ஈழம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, இன்று அவயவங்களை இழந்தும், வாழ்வை இழந்தும் நிர்க்கதியாக வாழும் முன்னாள் போராளிகள் தங்கள் நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்லவே அவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே சாப்பிட்ட சாப்பாடு செமிக்காமல் கூத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சும்மா போங்கப்பா! போய் வேலையைப் பாருங்க!
அப்படி வேலை வெட்டி தான் இல்லாவிட்டால்…
போய் யாருடையவாவது கொடும்பாவியை எரியுங்க!
You must be logged in to post a comment Login