Recent Comments

    முற்பணம் கட்டின் பிற்பகல் விளையும்

    வீட்டுக் கடனை விரைவாய் அடைக்க ஒரு வழி! மாதம் மாதமோ, மாதம் இருமுறையோ தப்பாமல் வரும் வீட்டுக் கடன் கொடுப்பனவு வழமையில் 25 வருடங்கள் நீளும். வீடு வாங்கிய தொகையை விட, அதிகமான வட்டியை அந்த நீண்ட காலத்திற்குள் வங்கிகள் அறவிடுகின்றன. அனாவசியமாய் வங்கிக்கு கொடுக்கும் பணத்தைச் சேமிக்கப் பல வழிகள் உண்டு. அதில் ஒரு வழி, மாதாந்தக் கட்டுப்பணத்தை விட, மேலதிகமாகச் செலுத்துதல். அதிலும் கடனின் ஆரம்ப காலத்திலே, வங்கிகள்  உங்கள் கட்டுப் பணத்தில், தங்கள் வட்டியை அதிகமாகவும், உங்கள் கடன் முதலைக் குறைவாகவும் அறவிடுகின்றன. எனவே, கடனின் ஆரம்பக் காலத்தில் எவ்வளவு அதிகமாக முற்பணத்தைக் கட்டுகின்றீர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் பணத்தைச் சேமிக்க முடியும். இந்த முற்பணத்தை வருடம் சில தடவைகள் ஒரு தொகையாகவோ, அல்லது மாதாந்தக் கட்டுப்பணத்தை அதிகரிப்பதாலோ செலுத்த முடியும். மாதாந்த தொகையை வெறும் ஐம்பது டொலர்களால் அதிகரித்தாலோ, வருடம் ஒருமுறை சில ஆயிரங்களை மேலதிகமாய் செலுத்தினாலோ, 25 வருடங்களுக்குள் பல ஆயிரம் டொலர் வட்டியைச் சேமிக்க முடியும். கட்ட வேண்டிய காலத்தைச் சில வருடங்களால் குறைக்க முடியும். வங்கிகள் சும்மா விடுமா? வங்கிகளின் தொழிலே உங்களிடம் வட்டியை அறவிடுவது தானே. இதனால் வீட்டுக் கடன் ஒப்பந்தத்தில் பல விதிமுறைகளை வங்கிகள் அடக்கும். சில நேரம் முற்பணம் செலுத்த தண்டம் அறவிடும். சிலநேரம் அனுமதிக்காது. சட்டப்படி, வங்கிகள் கடன் ஒப்பந்தம் தரும்போது, முற்பணம் கட்ட முடியுமா, எவ்வளவு, எப்போது கட்ட முடியும், அதற்கான விதிமுறைகள் என்ன, தண்டப்பணம் அறவிடப்படுமா என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எனவே கையெழுத்து வைக்க முன்னால், ஒப்பந்தங்களை முழுமையாக வாசித்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்து, விளங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டியது உங்கள் கடமை. எனவே, முன் பணம் கட்டி, பிற்பகல் விளைபயனை அறுவடை செய்யுங்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login