மார்க்கத்தில் மில்லியன் டொலர் கனவு வீட்டை வாங்க கனவு காண்பதற்கு முன்னால், விரலுக்குத் தகுந்த வீக்கம் போல, வருமானத்திற்குத் தகுந்த வீட்டை வாங்குவதற்கு வசதியாக, உங்கள் வருமானத்திற்கு பெறக் கூடிய அதிகளவு வீட்டுக் கடன் அளவை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். (mortgage pre-approval))
உங்கள் குடும்பத்தின் மாத வருமானம், செலவீனங்களைக் கணக்கில் எடுத்து, வீடு வாங்குவதற்கான உங்கள் தகுதியையும், நீங்கள் வாங்கக் கூடிய அதிகளவு வீட்டு விலையையும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உறுதி செய்து, அந்தக் கடன்களை உங்களுக்குத் தருவதாக உறுதி செய்த பின்னால், அந்தத் தொகைக்கு உட்பட்ட விலையில் வீட்டைத் தேடிக் கொள்வது பின்னால் ஏற்படக் கூடிய மன உளைச்சல்களைக் குறைக்க உதவும்.
உங்களுக்குக் கடன் தருவதற்கான உறுதிமொழியை 90 முதல் 120 நாட்கள் வரை இந்த நிறுவனங்கள் காப்பாற்றும். இதனால் இந்தக் கால இடைவெளிக்குள் வட்டி வீதம் கூடினாலும், உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட குறைந்த வட்டி வீதத்திலேயே உங்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்படும். வட்டி வீதம் குறைந்திருந்தால், வழங்கிய உறுதி மொழிக்காக அதிக வட்டி வீதத்தில் கடனை வாங்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
வீடு விற்பவர்களும் முகவர்களும் இவ்வாறாக கடன் உறுதிமொழியைப் பெற்றிருந்தால், நீங்கள் உண்மையாகவே வீடு வாங்கும் எண்ணத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை நம்புவார்கள். அதிலும் நீங்கள் போட்டிக்கு விலையைக் கூட்டும் ஏலம் கூறும் விளையாட்டில் ஈடுபட்டால் இது கட்டாயம். காரணம், ஏலத்தில் அதிக விலைக்கு வாங்குவதாகக் கூறிய பின்னால் வீட்டுக்கடன் பெற முடியாமல் அல்லல்படும் போது உங்களோடு இழுபட அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
இந்தக் கடன் உறுதிமொழிகள் இலவசமானவை மட்டுமன்றி, அவற்றைத் தரும் நிறுவனங்களிடம் தான் கடன் பெற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. வேறெங்காவது குறைந்த வட்டி வீதத்தில் கிடைக்குமாயின், புதிய இடத்திலே கடன் பெற எந்தத் தடையும் இல்லை.
ஆனால் இந்த உறுதிமொழிகள் நிச்சயமானவை இல்லை. சில நேரம் உறுதிமொழி அளித்த நிறுவனம் பின்னால் வேறு காரணங்களைக் காட்டி உங்களை அம்போ என்று கைவிடலாம். இந்த உறுதிமொழிகள் உங்களுக்கு இன்ன வீதத்தில் கடன் தருவோம் என்ற உறுதி மொழி மட்டும் தான். சில நிறுவனங்கள் உங்கள் விண்ணப்பத்திரங்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, உறுதி வழங்கினாலும், பின்னர் முழுமையான விசாரணையின் போது உங்களுக்கு கடன் தர மறுக்கலாம். எனவே இதை முன்பே உறுதி செய்து கொள்வது பின்னால் தலையிடிகளைக் குறைக்கும். சில நிறுவனங்கள் முழுமையான விசாரணையின் பின்னர் தான் உறுதி மொழியை வழங்கும்.
மோட்கேஜ் ஆலோசகர் கள் நீங்கள் சொல்லும் விபரங்களைக் கேட்டு விட்டு, உங்களுக்குத் தகுதி இருப்பதாக சான்றிதழ் வழங்கினாலும், உங்களுக்குக் கடன் கொடுக்கும் நிறுவனம் உங்கள் வருமானம், வைப்புத் தொகை, வாங்கும் ஒப்பந்தம், வீட்டின் விபரங்கள், திருப்பிக் கடனைச் செலுத்தக் கூடிய தகைமை எல்லாவற்றையும் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுப் பார்த்த பின்னால் தான் உறுதி செய்யும்.
இருபது வீதம் வைப்புத் தொகை, நல்ல வேலை, ஆதாரம் காட்டக் கூடிய வருமானம், கறை படியாத கடன் செலுத்தும் திறன், குறைந்தளவு கடன் போன்றவை இருந்தால் கடன் வாங்குவது சுலபம். இவை இல்லாவிட்டால் எதற்கும் இவற்றையெல்லாம் பரிசீலனை செய்த பின்னால் கடன் தரும் நிறுவனத்தை நாடுவது நல்லது.
வீட்டின் பெறுமதி என்ன (Appraisals) என்பதை சரியானவர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். வீடு தேடத் தொடங்கும்போது, எந்த வீட்டை வாங்கப் போகிறோம் என்று தெரியாத நிலையில் வீட்டின் பெறுமதியை அறிய முடியாது. கடன் உறுதிமொழிக்கு வீட்டின் பெறுமதி முக்கியமானதில்லை. ஆனால் வீட்டுக் கடன் பெறும்போது வீட்டின் பெறுமதியை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் வீட்டை அதன் பெறுமதிக்கு அதிகமாக வாங்குகிறீர்கள், வீட்டில் பெரிய குறைபாடுகள் உள்ளன என்று தெரிந்தால், நீங்கள் பெற்றுக் கொண்ட கடன் உறுதிமொழியால் எந்தப் பயனும் இல்லை. நிதிநிறுவனங்கள் உங்களுக்குக் கடன் தரமாட்டா.
எனவே வீடு வாங்கும் ஒப்பந்தத்தில் கடன் பற்றிய விதிகளைச் (Financing Conditions) சேர்க்கலாம். அல்லது வீட்டை வாங்கச் சம்மதித்து ஒப்பந்தம் செய்ய முன்னால் வீட்டின் பெறுமதியை அறிந்து கொள்ளலாம். அதிலும் இருபது வீதத்திற்கும் குறைவான வைப்புத் தொகை செலுத்தினால், உங்கள் வீட்டுக்கடனுக்கு காப்புறுதி செய்ய வேண்டும். CMHC போன்ற காப்புறுதி நிறுவனங்கள் கடன் உறுதிமொழி பற்றிக் கணக்கெடுப்பதேயில்லை. அவை உங்கள் வீட்டுக் கடனைக் காப்புறுதி செய்ய மறுத்தால், கடன் கிடைக்காமல் வீட்டை வாங்க முடியாமல் போவதுடன், உங்கள் வைப்புத் தொகையையும் இழந்து, சில நேரம் வீட்டை விற்பவர் உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்க நேரிடலாம்.
ஆனாலும் வீட்டின் பெறுமதியை மதிப்பிடுபவர்கள் உங்கள் வீட்டின் சகல பிரச்சனைகளையும் அறிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். முக்கியமாக தொடர்மாடிக் குடியிருப்பு வீடுகளின் பெறுமதியை அறிந்து கொள்ள அவர்கள் அந்த குடியிருப்புத் தொகுதியின் இயக்குனர் சபைக் கூட்டக் குறிப்புகள், நிதிநிலைமைகள், கட்டட நிர்மாணப் பிரச்சனைகள் பற்றி எல்லாம் ஆராய்வதில்லை. சில நேரம் இந்தப் பிரச்சனைகள் தலைதூக்கினால், உங்களுக்கு கடன் கிடைக்காமல் போகலாம்.
கடன் உறுதிமொழி கிடைத்த பின்னால் வேறு கடன்கள் நேரத்திற்கு கட்டாமல் விடுதல், புதிய கடன்கள் பெறுதல், வேலை மாறுதல், வேறு யாருக்காவது கடன் பிணை நிற்றல் போன்ற விவகாரங்களால் உங்களுக்குக் கிடைத்த கடன் உறுதி மொழி ரத்தாகலாம்.
கடன் உறுதிமொழி தரும் நிதிநிறுவனங்கள் குறைந்தளவு வட்டி வீதம் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. வெளியில் அதை விட குறைந்த விகிதத்தில் வீட்டுக் கடன் பெறலாம். எனவே வீடு வாங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தாகுமுன்னர் ஒரு மாதத்திற்கு முன்னால் கடன் வீதத்தை கவனியுங்கள். உங்களுக்கு உறுதியளித்ததை விட, குறைவான வட்டியில் கடன் கிடைக்கும் என்றால், அந்த வட்டி வீதத்திற்கு குறைக்கும்படி நீங்கள் கேட்கலாம்.
ஆனால் வட்டி வீதம் என்பது வீடு வாங்கக் கடன் வாங்குவதில் ஒரு அம்சம் மட்டுமே. எனவே குறைந்த வட்டியைக் காட்டி உங்களை மாட்டி கொழுக்குப் பிடி போடக் கூடிய கடன் தருவோரிடம் சிக்குப்படாமல் கவனமாக இருங்கள்.
‘உங்க உதெல்லாம் தேவையில்லை. நீங்கள் வாங்கோ வெண்டு தாறம்’ என்று யாராவது சொன்னால், இது நேர்மையான முறையில் வீட்டுக் கடன் பெறுவோருக்கான அறிவுரை மட்டுமே.
You must be logged in to post a comment Login