பழையன கழிந்து புதியன புகுக
விண்டோஸ் XPக்கான மைக்ரோசொப்ட் ஆதரவு இந்த மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பில்லாத கணனிக்குள் காற்றுக் கறுப்பு அண்டாதபடிக்கு ஜன்னலை மூட சுவடி வாசகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம்.
எனவே பாவனையாளர்கள் என்ன செய்யலாம்?
அந்தக் காலத்தில் வாங்கி, தூசி படாமல் துணியால் மூடி வைத்து, இணையம் வந்த பின்னால் பயன்படுத்தத் தொடங்கிய பழைய கணனி மேல் கொண்ட காதலால், வாழ்நாள் வாழ்க்கைத் துணையாய் ஏற்றுக் கொண்டவர்கள், இணையத்தைப் பார்வையிடப் பயன்படுத்தும் இன்ரர்நெட் எக்புளோரர் பாவனையை நிறுத்தி, பதிலாக பைர்பொக்ஸ், கூகிள் குறோமைப் பயன்படுத்துங்கள். அவை விண்டோஸ் XP க்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கும்.
வைரஸ் உற்பத்தியாளர்கள் பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத உங்கள் கணனிக்கு ஊடாக புகுந்து மோசடி வேலைகள் செய்ய முயற்சிக்கலாம். நல்ல வைரஸ் பாதுகாப்புச் செயலி ஒன்றை வாங்குங்கள்.
இணையத்தில் 'இலவசமாய் தருகிறோம், தரவிறக்கம் செய்யுங்கள்' என்று ஆசை காட்டும் எதையும் தரவிறக்காதீர்கள். இவை இலவசமான வைரஸ் பாதுகாப்புச் செயலியாக இருந்தால் கூட! இவ்வாறான பெயர்களிலேயே மோசடிகாரர்கள் உள்ளே நுழையலாம்.
அல்லது பழைய கணனியிலேயே விண்டோஸ் 7 அல்லது 8 ஐ பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் உங்களுடைய புராதனக் கணனிக்கு இந்த புதிய மென்பொருட்களை ஆதரிக்கக் கூடிய அளவுக்கு வலு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு மைக்ரோசொப்ட் தளத்தில், அல்லது கூகிளில் Windows 7 Upgrade Advisor ஐத் தேடிப் பார்த்து, அதை தரவிறக்கம் செய்து, உங்கள் கணனியில் செயற்படுத்துங்கள். அந்தச் செயலி உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வலு உண்டா என்பதைச் சொல்லும்.
வலு இல்லாத, பழைய கணனியை 'ஆருக்கும் குடுக்கலாம்' என்று கராஜிற்குள் குப்பையாக்காதீர்கள். வீதியோரமாய் குப்பை வைக்கும் நாளில் உள்ளே தெரியக் கூடிய பிளாஸ்டிக் பைகளில் மூடி வெளியே வையுங்கள். நகரசபை அவற்றை மீள்பயன்படுத்தும். ஊருக்கு அனுப்பி நல்ல பெயர் வாங்க முயற்சித்து, அங்குள்ளவர்களின் கேலிக்கு ஆளாகாதீர்கள்.
பழையன கழிந்து புதியன புக, புதிய கணனியும் (புதிய வாழ்க்கைத் துணை!?) வாங்கலாம். புதிய கணனிகளில் விண்டோஸ் 7 அல்லது 8 ஏற்கனவே இருக்கும். நல்ல வலுவான, பாவித்த கணனிகள் இந்தச் செயலிகளுடன் மலிவு விலையில் விற்பனையாகின்றன.
வாங்குவது கை படாத ரோஜா போல் புதியதோ, பல கை பட்ட பழையதோ, துணியால் மூடி மறைக்காமல் நன்றாகவே பயன்படுத்துங்கள்!
You must be logged in to post a comment Login