பணத்தை எரிபொருள் ஆக்காதீர்கள்!
கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை உச்சத்திற்கே போகும். திட்டிக் கொண்டே எரிபொருள் நிரப்புவீர்கள்.
இருந்தாலும் உங்கள் வாகனத்தின் எரிபொருட் பாவனையைக் குறைக்க பல வழிகள் உண்டு.
1. வாகனத்தின் வேகத்தை மிக வேகமாக அதிகரிக்காதீர்கள். அதிலும் பலர் சிவப்பு விளக்கில் நின்று, பச்சை விளக்கில் அசையத் தொடங்கும்போது, மாமியார் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் ஏறி மிதிப்பார்கள். மெதுவாக வேகத்தை அதிகரிக்கும்போது, எரிபொருள் குறைவாகவே பயன்படுகிறது.
2. கார்கள் நிறைந்ததால், அடிக்கடி நின்று, பின் நகரும் பாதைகளைத் தவிர்த்து, சீரான வேகத்தில் நகரும் பாதைப் பகுதிகளில் காரைச் செலுத்துங்கள்.
3. குறைந்தளவு வாகன நெரிசல், சமிக்ஞை விளக்குகள் உள்ள பகுதிகளைப் பயன்படுத்துங்கள். நகரெங்கும் பல குறுக்குப் பாதைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து வைத்திருங்கள்.
4. நகரும்போது, தொலைவில் வாகனத்தை நிறுத்த வேண்டி வந்தால், எரிபொருள் மிதியிலிருந்து காலை எடுங்கள். கார் தானாகவே மெதுவாகப் போய் நிற்க வேண்டிய இடத்தில் நிற்கும். அல்லது மெதுவாக பிரேக்கை அழுத்துங்கள்.
5. சீரான வேகத்தில் செல்வதற்கான ஊசரளைந உடிவேசடிட வசதி உங்கள் வாகனத்தில் இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி வேகத்தை கூட்டிக் குறைப்பது எரிபொருளைச் செலவாக்கும்.
6. தேவையில்லாத பாரப் பொருட்களைக் காரில் வைத்திருக்க வேண்டாம். ஏற்றவும் வேண்டாம். (மாமியார் உட்பட!)
7. காரின் மேல் பொருட்கள், அல்லது பின்னால் சைக்கிள்களை வைக்காதீர்கள். காற்றின் இழுவை உங்கள் வேகத்தைக் குறைக்கும்.
8. பாதைகளில் குறிப்பிட்ட வேகத்தை மீறி வேகமாய் செல்லாதீர்கள். 90 கிமீ வேகத்தில் செல்வதை விட, 110 கிமீ வேகத்தில் செல்லும்போது, ஐந்தில் ஒரு பகுதி அதிகமாய் எரிபொருளை வீணாக்குகிறீர்கள்.
9. பயணத்தை நிதானமாய், அவசரமில்லாமல் ஆரம்பியுங்கள். கடைசிநேரம் வரை காத்திருந்து விட்டு, ஐயோ, நேரம் போய் விட்டதே என்று வேகமாய் செல்லப் போனால், எரிபொருளும் வீணாகும். வழியில் வேகமாய் போனதற்கு டிக்கட்டும் கிடைக்கலாம்.
10. காரின் டயர்களில் சரியான அளவு காற்றழுத்தத்தைக் கொண்டிருங்கள். குறைந்த காற்றழுத்தம் கூடிய எரிபொருளை வீணாக்கும்.
11. காற்று வடிப்பான்களை சரியான நேரத்தில் மாற்றுங்கள். அவற்றில் தூசி படித்தால், போதியளவு காற்று எரிபொருளுக்கு கிடைக்காமல், எரிபொருள் வீணாகும்.
12. உங்கள் சக்கரங்களை சரியான முறையில் வைத்திருங்கள். அவை திரும்பியிருந்தால், ஒரு பக்கம் இழுக்க, எரிபொருள் வீணாகும்.
13. உங்கள் வாகனத்தை ஒழுங்கான முறையில் எண்ணெய் மாற்றம் போன்றவற்றைச் செய்து, சரியான முறையில் பேணுங்கள்.
14. வாகனத்தைப் பயன்படுத்துவதை விட்டு, பஸ், நிலக்கீழ் ஊர்திப் பாவனையைக் கூட்டுங்கள். நடவுங்கள். உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
14. ஸ்காபரோவில் மலிவு விற்பனை என்பதற்காக பிராம்டனிலிருந்தோ, பிக்கரிங்கில் இருந்தோ அநியாயத்திற்கும் காரில் வந்:து 99 சதம் நெத்தலிக் கருவாடு வாங்காதீர்கள். பிராம்டனில் கடை வைத்திருக்கும் தமிழ்மகன்களுக்கும் வாழ்வளியுங்கள். அவர்களிடம் ஒரு டொலருக்கு நெத்தலிக்கருவாடு கிடைக்கலாம். (கிடைத்தால் சொல்லுங்கள், நாங்கள் பஸ்ஸில் வந்தே பிராம்டனில் வாங்குவோம்)
இப்படியான வழிகளைப் பயன்படுத்தி, எரிபொருள் செலவை மட்டுமன்றி, காப்புறுதி, கார்நிறுத்துமிடச் செலவு போன்றவற்றையும் குறைத்தால், உங்கள் பழைய காரை விற்கும்போது அதற்கு மதிப்பான விலையும் கிடைக்கும்.
You must be logged in to post a comment Login