Recent Comments

    தேளும் தேரையும்

    thayagam featured-Frogஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

     

    கல்லுக்குள் பதுங்கியிருந்த தேளுக்கு பயம் பீடித்துக் கொண்டது.

    பசி வரும் போதும், தினவு எடுக்கும் போதும், எரிச்சல் வரும்போதும், ஏன் சும்மா பொழுது போகாமல் போர் அடித்தாலும் தேள் கொட்டிக் கொண்டே இருக்கும். அகப்படும் எதையாவது கொட்ட வேண்டும் போலிருக்கும்.

    அதற்குத் தெரிந்தது இரண்டே உணர்வுகள் தான்.
    கோபம், மற்றது பயம். அதற்கப்பால் பகுத்தறிவு எதுவும் கிடையாது. தனது உயிருக்கு ஆபத்து என நினைத்தால், உண்மையானதோ அன்றி கற்பனையானதோ, கோபம் மிகுந்தெழுந்து தேள் கொட்டும்.

    உயிர் மீதான பயம், அதற்கு உயிர் வாழ்வன மீதான பயத்தையும், கோபத்தையுமே கொள்ள வைத்தது. யாரைப் பார்த்தாலுமே எதிரியாகத் தான் தோன்றியது. தனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்கள் போலவே எல்லோரும் தெரிந்தார்கள். தேள் யாரையுமே நம்ப மறுத்தது.

    உருவத்தில் சிறியதாய், இலகுவில் சந்துகளுக்குள் ஓடி மறையக் கூடியதாக இருந்ததால், மற்ற மிருகங்களாலும் தேளை வேட்டையாட முடியவில்லை.
    கரந்துறைந்த வாழ்வும், கரந்தடித் தாக்குதலும் என அதன் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

    இந்த ஜாலியான வாழ்க்கைக்கு வேட்டு வைக்க, காட்டுக்குள் ஒரு மனிதன் குடி புகுந்து விட்டான். நாட்டுக்குள் இருந்த மனிதர்களால் தேடப்பட்டு ஒளிக்க வந்தானா? இல்லை, காட்டை வெட்டி களனியாக்க வந்தானா? அல்லது காட்டு மிருகங்களை வேட்டையாடத் தான் வந்ததா? என்பதெல்லாம் தேளுக்குத் தெரியாது.

    அவன் வந்ததே தனக்கு ஒரு வழி பண்ணத் தான் என்று தேள் திடமாக நம்பியது.

    தனக்குக் குடில் அமைத்த மனிதன் பற்றைகளை வெட்டி, கற்களை அகற்றி, குப்பை கூளங்களுக்குத் தீ வைத்ததைப் பார்க்க தேளுக்கு உறைக்கத் தொடங்கியது.

    சேனைப் பயிர்ச்செய்கைக்காகவோ என்னவோ, ஒரு பெரும் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து, எந்த வித மிருகாபிமானமும் இல்லாமல், முழு வனவிலங்குகளையும் அவன் கொன்றொழித்த போது… தேளுக்கு எல்லாமே ஓடி வெளித்தது.

    விசயம் தெரியாமல் மனிதன் கண்ணில் அகப்பட்டால், நசிந்து உயிரை விடவும் வேண்டியிருக்கும். அல்லது அவன் வைக்கும் தீயின் பிளம்புகளுக்கு இரையாகவும் வேண்டியிருக்கும்.

    தனது நாட்கள் எண்ணப்படுபவதை தேள் உணரத் தொடங்கியது.

    மனிதன் தன்னைக் குறி வைத்துத் தான் இந்தக் காட்டை அழிப்பதாக தேள் நம்பியது.

    இங்கிருந்தால் ஆபத்து என தேள் தப்பியோடுவதற்கு முடிவு செய்தது. நாட்டுக்குள் தப்பிப் போகலாம் என்றால்… அங்கே… ஒன்றல்ல, ஆயிரம் மனிதர்கள்!

    தேளின் விசம் பற்றி முழுதாய் அறிந்தவர்கள்.

    மரணம் நிச்சயம்! மரண சாசனத்தையும் உயிலையும் எழுதி வைத்து விட்டு வேண்டுமானால் நாட்டுக்குள் காலை வைக்கலாம்!

    உயிர் வாழ ஒரே வழி?

    எப்படியாவது தப்ப வேண்டும்… அடுத்த காட்டுக்கு!

    ஆனால் இடையில் ஒரு ஆறு!

    தேளுக்கோ நீச்சல் சுட்டுப் போட்டாலும் வராது. மிதந்து செல்லும் தடிகளில் பயணிக்கலாம் என்றாலும் அவை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது தெரியாது. எங்காவது நீர்வீழ்ச்சிகளில் விழுந்து உடல் நொருங்க நேரிடலாம்.

    நீந்தத் தெரிந்த மிருகங்கள் எதனாவது முதுகில் சவாரி செய்தால் தான் உண்டு.

    வெற்றிகரமான பின்வாங்குதலுக்கு சில ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டே ஆக வேண்டும். எதிரிகளின் அல்லது எதிரிகளின் எதிரிகளின் காலில் விழ வேண்டியது தான். உயிரைக் காத்துக் கொள்வது தான் தற்போது முக்கியமானது.
    யாரைப் பிடிக்கலாம்? யாரின் காலில் விழலாம்?

    விசயம் தெரிந்த மிருகங்கள் தன்னுடன் சகவாசம் வைக்க மாட்டா என்பது தேளுக்கு நன்றாகவே தெரியும். தன் கடிக்கு ஆளானவைகளும் தன்னைப் பழி வாங்குவதற்காக எங்காவது மாட்டி விடக்கூடும் என்ற பயம் வேறு.

    யாராவது இளிச்சவாயன் அகப்பட்டால் தான் உண்டு.

    கண்ணில் பட்டது,
    கல்லுக்குள் தேரை!

    தன்னுடைய விசத்துக்கு அஞ்சி ஜீவராசிகள் தலைதெறிக்க ஓடுவது தேளுக்குத் தெரியாததல்ல. எனவே, ஒண்ணும் தெரியாத பாப்பா போல முகத்தை வைத்துக் கொண்டு தேரைக்குப் பல்லிளித்தது.

    ‘மெலிஞ்சிருக்கிறாப்ல?’ தேரையின் உடல்நிலையில் அக்கறை கொண்டது போல தேள் நடித்தது.

    தேரை ஒன்றும் ஊருலகம் புரியாததல்ல! தேளிடம் முன்பின் கடி வாங்கிய அனுபவம் இல்லா விட்டாலும், தேளின் கூத்துக்கள் பற்றி ஏற்கனவே பெரியவர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். பட்டறிவு இல்லாவிட்டாலும், படிப்பறிவு இருந்தது. பகுத்தறிவு இருக்குமோ யாருக்குத் தெரியும்?

    ‘அப்படியொண்ணும் இல்லியே?’ தேள் பிள்ளையார் சுழி போடுவது தேரைக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

    ‘இல்லையே, போனவாட்டி பாக்கிறப்போ, ஆரோக்கியமாகத் தானே இருந்தே!’ தேள் முகத்தைச் சீரியஸாக வைத்தபடியே…

    தேரைக்கோ தேளுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில் நாட்டமில்லை. துட்டனைக் கண்டால் தூர விலகு என்று ஏற்கனவே பெரியோர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

    ‘உனக்கு ஒரு இரகசியம் தெரியுமோ?’ தேள் சஸ்பென்ஸ் போட்டது.

    தேரை எட்ட நின்றபடியே… ‘என்னது?’ என்றது.
    தேரைக்கு மர்மத்தை அறியும் ஆவல்.

    ‘உனக்குத் தெரியுமா? இந்த மனிதன் இந்தக் காட்டை அழிக்கப் போகிறான்.’
    தேள் கதை விடத் தொடங்கியது.

    ‘அவன் மூட்டும் பெருநெருப்பில் நீ அழியப் போகிறாய்’

    ‘நான் அழிந்தால் நீயும் தானே அழியப் போகிறாய்’. தேரைக்கு உள்ளூரப் பயம் வந்தாலும், மனதைத் தேற்றிக் கொள்ள முயன்றது.

    ‘நான் அழிவது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. உன்னை நினைக்கத் தான் எனக்குக் கவலையாக இருக்கிறது’

    ‘அப்படி என்னில் என்ன அக்கறை?’

    ‘எனக்கென்னவோ மனிதன் உன்னை அழிப்பதற்காகத் தான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறான் போலிருக்கிறது’
    தேள் நன்றாகவே கதை விட்டது.

    ‘உன்னைக் கொன்று உன் இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறானாம்’

    சீனச் சட்டிகளுக்குள் தான் சூப் ஆவதைக் கற்பனை செய்ய தேரைக்குப் பயமாக இருந்தது.

    ‘மெய்யாத் தான் சொல்றியோ?’ பயம் பீடிக்க தேரை கேட்டது.

    ‘நான் என்ன பொய்யே சொல்றன்? உன்னைக் காப்பாற்ற என்னால் தான் முடியும்’

    ‘அதெப்படி? உன்னைக் கண்டாலே அவன் நசுக்கிடுவானே?’

    ‘கண்டால் தானே! நான் அவனைக் குத்தி விட்டு ஓடினாலும், அவன் என்னைக் கொல்ல முடியாது’

    தேரை முழி பிதுங்கியது. தேரையின் பயத்தைக் கண்ட தேள் அக்கறையுடன் சொன்னது.

    ‘என்ன மனிசாளுக்கு மனிசாள் உதவியாய் இருக்கிற மாதிரி நாங்கள் மிருகங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டாமா? அடுத்த கரையில் என் உறவினர்கள் நிறையப் பேர் வசதியாக இருக்கிறார்கள். அங்கே மனிதர்களும் கிடையாது. அளவுக்கு மிஞ்சிய உணவு. சும்மா உண்ட பின்னால் உறங்க வேண்டியது தான். அங்கே போனால் நீ நிம்மதியாக வாழலாம். அது பாலும் தேனும் ஓடும் சொர்க்க பூமி’

    ‘எனக்கு மனிதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. மனிதனுக்கும் என்னால் எந்தப் பிரச்சனையும் இல்லை. நீ விருப்பம் என்றால் போ. எனக்குத் தேவையில்லை’

    ‘நான் அவனைக் குத்தி விட்டு, பொந்துக்குள் பதுங்கி விடுவேன். அவன் கோபத்தில் உங்களைத் தான் கொல்வான். இவன் ஒரு மனிதன் தான் இப்போது காட்டுக்குள் காலை வைத்து விட்டான். இனி என்ன? ஒரு நகரமே இந்தக் காட்டுக்குள் உருவாக நாள் எடுக்காது’

    தேரையைப் பயம் முற்றாகவே பீடித்தது. மனிதர்கள் எல்லாம் தன்னை இரவிரவாய் வலை வீசிப் பிடிப்பதாகவும், சீனாவில் பாம்புகளுடனும் அட்டைகளுடனும் புழுக்களுடனும் சட்டிகளுக்குள் வேகுவதாகவும் பயங்கரக் கனவுகள் வருமே என்று நடுங்கத் தொடங்கியது.

    ‘எனக்கு அக்கரையில் யாரையும் தெரியாதே’

    தேரை வழிக்கு வந்ததை தேள் உணர்ந்தது.

    ‘அந்தக் கவலை உனக்கேன்? என்னுடைய உறவினர்களுடன் விருந்தாளியாகத் தங்கு. பின்னால் உனக்கு விருப்பமான இடத்திற்குப் போகலாம்’

    தேளின் பசப்பு வார்த்தையில் தேரை நன்றாகவே மயங்கி விட்டது. வேலை செய்யாமல் சும்மா குந்தியிருந்தே சாப்பிடலாம் என்ற ஆசை வேறு. தனக்கு இனிமேல் ராஜபோகம் தான் என்ற நினைப்பில்… வாழ்க்கைத் துணை வேறு கிடைக்குமா என்பதை அறிய, ‘அங்கே எனக்கு என் இனத்தவர்கள் யாருமே இல்லையே?’ என்று தூண்டில் போட்டது?

    ‘நீ இருந்து பார், அக்கரையில் இறங்கும்போது, 72 கன்னித் தேரைகள் உன்னுடன் போகம் செய்யக் காத்திருக்கும்’.

    இதற்கு மேல் தேரைக்கு சிந்திக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

    ‘நீ தான் என் குரு. உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன்’

    புல்லரித்த தேரை அவசரப்பட்டது.

    ‘சரி, வா புறப்படலாம்’

    தேரை ஆற்றில் துள்ளிக் குதித்தது. 72 கன்னித் தேரைகளின் நினைவு படுத்தும் பாடு! இன்றிரவுக்குள் போய் விட்டால், அதில் பாதிப் பேருக்காவது வழி பண்ணலாம்.

    தேளோ கரையில்!

    ‘குதித்து நீந்து, இருட்டுவதற்குள் போய் சேர்ந்து விடலாம்’ தேரை அழைத்தது.

    ‘உனக்கென்ன பைத்தியமா? எனக்கு நீந்தத் தெரியாது என்பது உனக்குத் தெரியாதா?’

    ‘அப்போ எதற்கு என்னைக் கூப்பிட்டாய்?’

    ‘நான் உன் முதுகில் தான் பயணம் செய்ய வேண்டும்’.

    ‘எனக்கென்ன பைத்தியமா உன்னை முதுகில் ஏற்றுவதற்கு?’
    தேரைக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்தது.

    ‘உன்னை ஏற்றினால் நடுவழியில் என் முதுகில் குத்துவாய்’

    தேளுக்குக் கோபம் வந்தது.

    ‘முதுகில் குத்துவது மனிதர்கள் செய்யும் வேலை. நான் கெட்டவன் தான், கேவலமானவன் இல்லை’.
    தேள் எம்.ஜி.ஆர் வசனம் பேசியது.

    ‘எனக்குத் தெரியாது. நட்டாற்றில் நீ என்னைக் குத்தினால், மயக்கத்தில் நான் நீரைக் குடித்து இறந்து போவேன்’.

    ‘உன்னைக் குத்த எனக்கென்ன பைத்தியமா? நீ நீரில் மூழ்கி இறந்தால் நானும் தான் இறக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியாதா? என் வார்த்தை தான் எனக்குச் சத்தியம்’
    தேள் தேரைக்கு நம்பிக்கையூட்ட முயன்றது.

    தேள் சொன்னது தேரைக்கு நியாயமாகத் தான் பட்டது. இருந்தாலும் நம்பத் தயாராக இல்லை.

    ‘அம்மாவாணை சத்தியம் செய்வியோ?’

    ‘நீ எந்த தெய்வம் மேல சத்தியம் செய்யச் சொன்னாலும் நான் சத்தியம் செய்து தருவேன்’

    தேரைக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. 72 கன்னித் தேரைகள் நினைவு வேறு படாத பாடு படுத்துகிறது. தேளின் சத்தியத்தை தேரை நம்ப விரும்பியது.

    ‘சரி, ஏறிக் கொள்’

    தேரை முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு மீண்டும் ஆற்றில் குதித்தது.

    முதுகில் சவாரி செய்த தேளுக்கு, ஏதோ குதிரைப் பந்தயம் செய்யும் குஷி.

    ‘ஏய், இந்தப் பக்கம் திரும்பு. ஏன் உன்னால் இன்னமும் வேகமாய் நீந்த முடியாதோ? இந்தா, இந்த நுரை என் கண்ணில் படுகிறது, மெதுவாய் போக முடியாதோ?’

    தேளுக்குத் தன் சௌகரியம் தவிர, வேறெதுவும் கண்ணில் படவில்லை. தேரை தனக்கு உதவி செய்கிறதே என்ற நன்றியுணர்வு கூட இல்லை.

    அவ்வப்போது தேரை நீரில் சுழியோட ஆரம்பிக்க…

    ‘ஏய்.. ஏய்… என்னை என்ன முக்குளிக்கச் செய்து கொல்ல நினைக்கிறாயோ?’

    தேரை மன்னிப்புக் கேட்டது.

    ‘பழக்க தோசம். இனிக் கவனமாக தண்ணீர் மட்டத்திலேயே நீந்துகிறேன்’.

    பயணம் நெடுந்தூரமானது.

    முதுகில் உட்கார்ந்து தேரையைத் தேராய் நினைத்து சவாரி செய்த தேளுக்கு… எந்தப் பக்கம் பார்த்தாலும் நீராகவே தெரிந்தது.

    சலிப்புத் தட்டத் தொடங்க…
    தேளுக்குத் தினவெடுத்தது.
    யாரையாவது கொட்ட வேண்டும் போலிருந்தது.

    வேறு யார் உண்டு?
    தேரை தானே வசதியாக முதுகில் உட்கார வைத்திருக்கிறது.

    ‘சுள்’
    தேரையைத் தேள் கொட்டி விட்டது.

    தேரைக்குப் புரிந்து விட்டது.
    தேள் வேலையைக் கொடுத்த விடயம்.

    ‘அட முட்டாளே, என்ன காரியம் பண்ணினாய்? இப்போ நான் இறக்கப் போகிறேனே? என்னோடு சேர்ந்து நீயும் இறக்கப் போகிறாயே?’

    விசம் ஏறி… தேரையின் நரம்பு மண்டலங்களைத் தாக்க..
    தேரை நினைவிழக்கத் தொடங்கியது.

    ‘உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டும் உன்னை ஏற்றிய என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும். பேசாமல் என்ரை பாட்டைப் பாத்துக் கொண்டு இருந்திருக்கலாம். அந்த மனிசன் எங்களை ஒண்டும் செய்திருக்க மாட்டான். உன்னை நம்பி வந்து இப்ப எனக்கும் அழிவு வந்திட்டுது’

    தேரை புலம்பத் தொடங்கியது.

    தேள் சாவதானமாகச் சொன்னது.
    ‘என்னைப் பற்றித் தெரிந்து கொண்டும் என்னை ஏற்றியது உன்ரை பிழை.’

    ‘நீயுமல்லோ என்னோட சேர்ந்து சாகப் போறாய்?’

    ‘குத்துறது என்ரை இயல்பு. சாகிறது, சாகாமல் இருக்கிறதைப் பற்றியெல்லாம் யோசிச்சால்… நான் ஒருத்தரையும் குத்தேலாது. விளைவைப் பற்றி யோசிக்கிறது எல்லாம் என்ரை வேலை இல்லை. எனக்கே மரணம் நிச்சயமான நிலையில, மற்றவையின்ரை உயிரைப் பற்றிக் கவலைப்பட எனக்கென்ன விசரே? நான் இல்லாத உலகத்தில மற்றவை இருந்தென்ன? வாழ்ந்தென்ன?’

    தன்னுடைய முட்டாள்தனம் தன் உயிருக்கே ஆபத்தானதை உணர முடியாத தேள், தன் முட்டாள்தனத்திற்கு வியாக்கியானம் செய்தபடியே தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியது.

    மற்றவர்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும், அவர்களுடைய உண்மையான இயல்புகளை அறியாமல் உதவி செய்ய முனைந்தால் உள்ளதையும் இழக்க வேண்டி வரலாம் என்பதையோ, தன்னுடைய பயமும் ஆசையும் தன் அழிவுக்கு காரணங்களாக அமைந்ததையோ உணர்ந்து கொள்ள முடியாதபடிக்கு… மயங்கியபடியே தேரை நீரில் அமிழத் தொடங்கியது.

    அந்த மரண வேளையிலும் 72 கன்னித் தேரைகள் காலம் பூராவும் கன்னிகளாய் வாழப் போவதை நினைத்து தேரை ரொம்பவும் கவலைப்பட்டது!

    (உங்களுக்கு எதுக்குங்க 72 கன்னிகளைப் பற்றிய கவலை? பேசாமல் கீழுள்ள பட்டன்களை அழுத்தி நண்பர்களுடன் இந்தக் ‘கடி’க் கதையை பகிர்ந்து விட்டு, மனதுக்கு இனியாரோடு சுகபோகம் கொள்ளுங்க.)

    Postad



    You must be logged in to post a comment Login