தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே!
நாள் முழுதாய் உழைத்துக் களைப்போருக்கு, களைப்புத் தீர்க்கவும், உடல் தன்னை வலிமைப்படுத்தி ஆரோக்கியப்படுத்தவும் போதுமான அளவு நித்திரை அத்தியாவசியமானது. ஆனால் சில நேரங்களில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. முன்னோர் சொல்லித் தந்தபடி மந்திரங்கள், ஜெபங்களைச் சொல்லிப் பார்ப்பீர்கள். அல்லது செம்மறிகளை எண்ணத் தொடங்குவீர்கள்.
ஹ்ம்... தூக்கம் கண்களைத் தழுவ மறுக்கும்!
வயதானவர்கள் குறைந்தது 7,8 மணி நேரம் தூங்க வேண்டும். போதியளவு நித்திரையின்மை மூளை ஒழுங்காக வேலை செய்வதைக் குறைக்கும். உங்கள் வேலைகளில் நீங்கள் கவனம் செலுத்த முடியாதபடிக்கு தூக்க மயக்கம் குழப்பும். குறைந்தளவு நேரம் நித்திரை கொள்பவர்கள் இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சில நேரங்களில் மனக்கவலைகளும் அழுத்தங்களும் இரவு முழுவதும் மனதை நிறைக்க, அதுவே தூக்கம் வராததற்கு காரணமாகலாம். பலர் இதனால் வைத்தியர்களிடம் தூக்க மருந்து பெற்றே தூங்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.
வேறு பலர் கடன், குடும்பச் சுமைகளால் பல வேலைகள் செய்து தூக்கம் கொள்ளவே நேரமில்லாமல் வாழ்கிறார்கள். இது நோய்களுக்கும், ஏன் மரணத்துக்குமே காரணமாகலாம்.படுக்கையில் விழுந்ததுமே தூக்கம் கண்களைத் தழுவ சில வழிகளைப் பயன்படுத்தலாம்.
1. எப்போதுமே ஒரு வழமையான நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்துங்கள்
தினசரி, வார நாட்கள் மட்டுமல்ல, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் ஒரே நேரத்திலே தூங்கி எழப் பழகுங்கள். தன்னையறியாமலேயே அந்த நேரத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றும். அதைப் போல, நேரங் கெட்ட நேரத்தில் குட்டித் தூக்கம் போட்டு, உடல் களைப்பாறி விட்டால் மீண்டும் வழமையான நேரத்தில் தூக்கம் வருவது கஷ்டமாயிருக்கும். எனவே, பகல் நேரக் கண்ணயர்வுகளைத் தவிருங்கள்.
2. படுக்கைக்குப் போயும் தூக்கம் வராமல் புரண்டு படுத்தால், தொடர்ந்தும் படுக்கையில் கிடந்து மனதை சஞ்சலப்படுத்தாதீர்கள். அதுவே நித்திரையை வர விடாமல் மனதை உளைக்கும். 'அட, காலையில் வேலைக்கு எழுந்தாக வேண்டுமே' என்ற எண்ணம் மனதை அழுத்தினால், நித்திரை வராது. எனவே, எழுந்து, உங்கள் மனதை மென்மையாய் தளர வைக்கும் எதையாவது செய்யுங்கள். அதிகமாய் சிந்திக்க வைக்கும் எதையும் செய்யாதீர்கள்.
3. உணவில் கவனமாய் இருங்கள். சரியான பசியோடு, அல்லது சாப்பிடாமல், அல்லது வயிறு முட்டச் சாப்பிட்ட உடன் நித்திரைக்குச் செல்லாதீர்கள். பசி வயிற்றைக் கிள்ளும். அல்லது பசி இடைநடுவில் தூக்கம் கலைத்து எழுப்பும். மூக்கு முட்டச் சாப்பிட்ட உடன் நித்திரைக்குச் செல்லாதீர்கள். உடல் பருமனாவதற்கு அதுவும் ஒரு காரணம்.
4.குடிப்பவற்றில் கவனமாயிருங்கள்.
சிகரெட்டின் நிக்கட்டின், கோப்பியின் கபெய்;ன் இரண்டுமே நரம்பை முறுக்கேற்றுவன. அவை செயலிழக்க நீண்ட நேரமாகும். நித்திரை வரத் தாமதமாகும். அதிகமான நீரும் இடை நேரத்தில் தூக்கம் கலைத்து சலகூடத்திற்கு துரத்தும். அல்ககோல் குடித்தால் முதலில் களைப்பாக இருந்து நித்திரை வந்தாலும், இரவின் பிற்பகுதியில் b;தால்லை தரும்.
5. படுக்கைக்குப் போக முன்னால் செய்யும் சில விடயங்களை வழமையாக்குங்கள்.
சூடான நீர்க் குளியல், புத்தகம் வாசித்தல், மெதுவான இசை கேட்டல் போன்றன மனதையும் உடலையும் சாந்தப்படுத்தும். ஆனால் டிவி, அல்லது படுக்கையில் வைத்து கம்பியூட்டரில் படம் பார்த்தல் போன்றவற்றைத் தவிருங்கள். அவை நித்திரையைத் தடுக்கும். பிரார்த்தனை, யோகாசனம், மூச்சுப் பயிற்சி இவைகள் எல்லாம் தூக்கத்திற்கு உதவும். முடிந்தால் காதல் துணையை மசாஜ் செய்ய வையுங்கள்.
6. படுக்கையறையை நித்திரைக்கான இடமாக்குங்கள்.
வெளிச்சத்தைக் குறைத்து, அல்லது ஜன்னல்களை மூடி தூக்கம் உங்கள் கண்களைத்
தழுவட்டுமே!இருட்டாக்குங்கள். ஆற்று நீரோட்டம், கடல் அலைகள் போன்ற இயற்கையான சத்தங்கள் பதிவான இசைத்தட்டுகளை ஒலிக்க விடுங்கள். அல்லது காதை அடைக்கும் பஞ்சைப் பயன்படுத்துங்கள்.
7. படுக்கையறையைச் சரியான வெப்பநிலைக்கு கொண்டு வாருங்கள்.
குளிராயின் சூடாகவும், புழுக்கமாயின் குளிராயும் தகுந்த வெப்பநிலை நித்திரைக்கு உதவும்.
8. மாலை நேரத்தில் களைப்பை ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள் செய்யுங்கள்.
9. மணிக்கூட்டை மறையுங்கள். காலையில் துயில் கலைவதற்காய் அலாரம் வைத்த பின்னால், மணிக்கூடு உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் கைக்கடிகாரம், நேரம் பார்க்கக் கூடிய செல்பேசி இவைகளும் தான்! நேரத்தைப் பார்த்துப் பார்த்து மனம் நோகாதபடி, இவற்றை மறையுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக படுக்கைக்கு பொருத்தமான, உடலுக்கு இதம் தரக் கூடிய மெத்தையும், தலையணையும் அவசியம்.
பத்தாயிரம் டொலருக்கு பெட்ரூம் செட் வாங்கி விட்டு, பணம் போதாமல் மிகவும் மலிவான தரம் குறைந்த மெத்தையையும் தலையணையையும் வாங்காமல், உடலுக்கு இதமான மெத்தை, தலையணையை வாங்குங்கள். வீட்டே வருவோர் பெட்ரூம் செட்டைப் பார்த்து பூரிக்கலாம். ஆனால் கட்டிலில் படுக்கப் போவது நீங்கள்!
நன்றாக கவலையில்லாமல், நிம்மதியாகத் தூங்கினால், சிலநேரம், உங்கள் காதல் நிலவுகள் உங்கள் கனவுகளிலும் வரக் கூடும்.
மனதுக்கு இனியோரோடு மஞ்சத்தில் உறங்கலல்லால் மற்றோரின்பம் வேறு ஏதுமுண்டோ?
(வயிற்றெரிச்சலைக் கிளப்புவதற்கு மன்னிக்கவும்!)
You must be logged in to post a comment Login