உங்கள் செல்பேசியில் தமிழில் செய்திகளும் மின்னோலைகளும் வரக் கண்டு மெய் சிலிர்த்து, எப்படி தமிழில் குறுஞ் செய்தியும் ஓலையும் அனுப்புவது என்று முடியைப் பிய்த்திருப்பீர்கள். தெரிந்தவர்களிடம் கேட்டிருந்தாலும், பெரும் பந்தா காட்டியிருப்பார்கள்.
நீங்கள் ‘காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாத’ ஐபோன் பிரியராயின் உங்கள் IOS 7 இல் தமிழில் நேரடியாகவே தட்டச்சும் வசதி உண்டு.
ஐபோனில் Settings என்பதில் கிளிக்கி, General என்பதைத் தெரிவு செய்யுங்கள். அதில் Keyboard என்பதைத் தெரிந்து Keyboard இல் Add New Keybaord என்பதைத் தெரிந்த பின்னால் அதில் பயன்படுத்தக் கூடிய மொழிகளின் பட்டியலே உண்டு. அதில் தமிழைத் தெரிவு செய்து Select பண்ணுங்கள்.
அங்கே Tamil 99 விசைப்பலகையும் ANjal விசைப்பலகையும் உண்டு. இதில் Tamil99 விசைப்பலகையில் தமிழில் தட்டச்சிட, உயிர்மெய் எழுத்துக்களை எழுத, முதலில் மெய்யெழுத்தையும் பின்னால் உயிர் எழுத்தையும் அழுத்துங்கள். கு எழுதுவதாயின் க், உ என்று அழுத்த கு வரும்.
Anjal முறையில் amma என்று அழுத்தினால் அம்மா வருவாள்.
ஐபோனில் உள்ள மற்ற app களில் தமிழில் பயன்படுத்த, விசைப்பலகைப் படத்தில் உலகப்படத்தை அழுத்தி தமிழை தெரிவு செய்யலாம்.
நம்மைப் போல ‘காசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்’ அன்ட்ரோய்ட் பாவனையாளர் எனின் Google Play Store App ஐ அழுத்தி அதில் Multiling Keyboard ஐத் தேடி தரவிறக்கம் (Install) செய்யுங்கள். பின்னர் அந்த app ஐ கிளிக்க, அதை செயற்படுத்தவும் (enable) செய்யவும், தமிழை தெரிவு செய்யவும் தெரிவுகள் உள்ளன. தமிழ் மட்டுமன்றி, பல்வேறு மொழிகளில் நீங்கள் வல்லுனர்களாயின் (மன்னிக்கவும், கெட்ட வார்த்தை ஒரு மொழியல்ல!) அவற்றையெல்லாம் பயன்படுத்தலாம். பின்னர் விசைப்பலகை வரும் இடங்களில் space தட்டும் இடத்தில் ஆங்கிலம் என்று இருப்பதில் அழுத்தி தமிழை தெரிவு செய்து தட்டச்சலாம். கு,கொ போன்ற உயிர் மெய்யெழுத்துளைத் தட்ட, முதலில் மெய்யெழுத்தைத் தட்டி, பின்னர் உயிர் எழுத்தைத் தட்டுங்கள்.
எப்படி தமிழை செல்பேசியில் install செய்வது என்பது இன்னமும் புரியாவிட்டால், வீட்டில் உள்ள பால் குடி மறந்த பிள்ளைகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் ஒரிரு நிமிடங்களில் செய்து தருவார்கள்.
தமிழில் குறுஞ் செய்தி அனுப்பக் கற்றுக் கொள்வது சரி. அனுப்பிய பணம் கிடைத்ததா என்று அம்மாவுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை மனைவிக்கு அனுப்பி ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
You must be logged in to post a comment Login