ஜன்னலை மூடுங்கள், காற்று, கறுப்பு அண்டாதிருக்க!
இப்போதும் உங்கள் கம்பியூட்டர் விண்டோஸ் XP இல் ஒடிக் கொண்டிருக்கிறதா? உங்களைப் போல, உலகில் இணையத்தில் தொடர்பு கொள்ளும் கம்பியூட்டர்களில் 30 வீதமானவை இன்னமும் விண்டோஸ் XP இல் தான் செயற்படுகின்றன. விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் 47 வீதம். இருந்தாலும் மைக்ரோசொப்ட் விண்டோஸ் XP பாவனையாளர்களை தனது புதிய செயலியான விண்டோஸ் 8 க்கு மாற்ற முயற்சிக்கிறது. இதற்காக இனிமேல் விண்டோஸ் XP க்கான உதவிகளை ஏப்ரல் 8ம் திகதியுடன் நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.
விண்டோஸ் XP வெளியாகி 13 வருடங்கள் ஆகிறது. அதன் பின்னால் விஸ்ரா, 7, 8 என்றெல்லாம் அடுத்த தலைமுறைகள் வந்து விட்டன. இருந்தாலும், XP நம்பத் தகுந்ததாய், தலையிடி தராமல் இருந்ததால், பலரும் தொடர்ந்தும் அதையே பாவித்து வருகின்றனர்.
ஆனால், ஏப்ரல் 8ம் திகதியுடன் உங்கள் கம்பியூட்டர் செயலிழந்து போகும் என்பதில்லை. தொடர்ந்தும் செயற்படும். அதிலும் இணையத்தில் தொடர்பு ஏற்படுத்தாமல் இருந்தால், பயப்படவே தேவையில்லை. ஆனால், இணையத் தொடர்புகளுக்கு உங்கள் கம்பியூட்டரைப் பாவிப்பீர்களாயின், இணையம் மூலமாக உங்கள் கம்பியூட்டரைத் தொற்றும் வைரஸ்கள் போன்றவற்றின் ஆபத்துக்களுக்கு ஆளாகக் கூடும். இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 8 உடன் மைக்ரோசொப்ட் நிறுத்துகிறது.
எனவே விண்டோஸ் 7, 8க்குத் தாவி ஜன்னலை மூடுக, காற்றுக் கறுப்பு அண்டாதிருக்க!
You must be logged in to post a comment Login