செய்தி வலயங்கள் உண்மைக்குள்ளும் பொய்க்குள்ளும் வாழும் கலையை அறிந்தவை . சில வருடங்கள் ஓர் பத்திரிகை அனுபவத்தை தொழில் மூலமாக அனுபவித்தபின்பும் , செய்தி வாசிப்புகளின் வெறியனாக இருந்த பின்பும், செய்திகள் உண்மைகளைத் தருகின்றனவா எனும் கேள்விகள் நிறையத் தடவைகள் எனக்குள் எழுந்ததுண்டு.
மிகவும் பெரிய செய்தி நிறுவனங்கள் பொய்களைப் பேசுவதையே கொள்கைகளாகக் கொண்டுள்ளன. குறிப்பாக முதலாளித்துவ நாடுகளின் பத்திகைகளைப் படித்தால் தெரியும். இன்று பிரான்சின் மிகப்பெரிய டெலிபோன் முதலாளி Martin Bouygues, காலமானார் என்று காலையில் Le Monde” பத்திரிகை செய்தி தந்தது. பின்னேரம் அது தனது செய்தியைப் பிழை எனச் சொன்னது. ஆம் உண்மைகள் செய்தி நிறுவனங்களுக்குள் சிக்கல்தான். உண்மையத் தேடினால் பத்திரிகைகள் ஓடாதிருக்கும் எனவும் கருதலாம்.
செய்தித்துவம் எமது வாழ்வின் இயல்பாக வந்துள்ளது. இந்த இயல்பு பொய் க்குள்ளும் மெய்க்குள்ளும் வாழும் கொடுமையை எமக்குத் திணித்துள்ளது.
காலையில் வேலைக்குப் போகுமுன் காப்பி குடிக்கச் செல்வேன். அந்தக் கடையில், மிகவும் காலையிலும் அந்த தினத்தின் பத்திரிகைகளில் ஒன்று இருக்கும். “இந்த செய்தியில் உண்மை இல்லை!” என ஒரு காப்பி குடிப்பவர் சொல்லுவார். மற்றவர் சொல்ல்லுவார் “இந்தச் செய்தி உண்மைதான்! என்று. நிறைய வாசகர்கள் தாங்கள் பொய்கள் படிக்கின்றோம் என்று தெரிந்தும் படிப்பதை வியாதியாகக் கொண்டுள்ளார்கள். பொய்த்துவம் இல்லாமல் நிறையப் பத்திரிகைகளும் இல்லை நிறைய டிவி களும் இல்லை, இன்டர்நெட்டும் இருக்கமுடியாது.
«Pluie matinale n'est pas journal » “காலை மழை, ஒரு பத்திரிகை அல்ல!” என்று பிரான்ஸ் பழமொழி ஒன்று சொல்லுகின்றது. காலை மழை ஒரு தினத்திலும் நீடித்திருக்காது என்பது இதனது அர்த்தம். காலை மழை காலை மழையே அது பின்னேர மழையாக இருக்கமுடியாது.
செய்திகள் காலத்துக்குக் காலம் மாறும், கட்சிக்குக் கட்சி மாறும், பத்திரிகைகளுக்குப் பத்திரிகைகள் மாறும். இலக்கியத்துக்கு இலக்கியம் மாறும். நான் ஓர் கட்சியில் இருந்தால் அந்தக் கட்சியின் செய்திகளை உண்மையெனக் கருதும் வியாதிக்குள் விழுவேன், மற்றக் கட்சிகளின் “உண்மைச்” செய்திகளையும் போலி என்றே சொல்வேன்.
குடும்பத்துள்ளும் செய்திக் கொள்கைகள் உள்ளன. நான் சொல்லும் செய்திகளை எனது மனைவி பிழை என்பது, மனைவி சொல்லும் செய்திகளை நான் அன்பில் சிலபோது பிழை என்று சொல்லாதது. எமது இருவர் செய்திக் குறிப்புகளிலும் பிள்ளைகளுக்கு உடன்பாடு இருப்பதும் சாத்தியம்.
உண்மை நிச்சயமாக உள்ளது. இதனை செய்தி உலகில் தேடுவது சிக்கலான விஷயம். ஆம்! தேடலாம், கண்டுபிடிக்கலாம், வாசிக்கலாம். ஆனால் “No news is good news” என்று சொல்லுகின்றது ஜெர்மனியப் பழமொழி.
You must be logged in to post a comment Login