சுமை
துறவி ஒருவரும் சீடன் ஒருவனும் நெடுந்தூரம் பயணம் போய்க் கொண்டிருந்தார்கள்.
சீடன்... துறவியின் ஞானத்தை தன்னுள் வாங்கிக் கொள்ள ஆச்சிரமம் வந்தவன். துறவிக்குப் பணிவிடை செய்து பயின்று வந்தான்.
வழியில் ஒரு ஆறு. கடப்பதற்கு கலங்களோ, பாலங்களோ இல்லை. ஆளே மூழ்கும் ஆழம்! அடித்துச் செல்லும் வேகமான நீரோட்டம்!
நடந்தே கடக்க வேண்டும்.
ஆற்றோரமாய் ஒரு அழகிய இளம் பெண்! அவளும் ஆற்றைக் கடக்க வேண்டும். ஆனால், நீரோட்டம் அள்ளிச் சென்று விடுமோ என்ற பயத்தில், கடக்காமல் நதியோரமாய் உட்கார்ந்து, யாராவது வர மாட்டார்களா? என்று எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
துறவியையும் சீடனையும் கண்டதும், ஓடி வந்து, 'ஐயா, நான் இருட்டுவதற்கு முன்னால் ஆற்றைக் கடக்க வேண்டும், அக்கரையில் என் வீடு இருக்கிறது, எனக்கு உதவுங்கள்' என்று கேட்டாள்.
பெண்ணோ அழகி. சீடனோ இளையவன். இருந்தாலும், துறவு பூணும் ஆசையில் குருவின் பின்னால் வந்தவன். அவளைச் சுமந்து செல்ல அவனுக்கும் ஆசை தான்.
ஆனால்...
அந்தத் துறவி தானே அவனுக்கு பெண்ணாசையைப் பற்றி போதித்தவர். அவர் என்ன நினைப்பாரோ? என்ற எண்ணம் அவனுக்குள்.
தன்னையும் பெண்ணாசை பீடித்து விடுமோ என்ற பயம் மறுபுறம்.
இவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருப்பதற்குள், துறவி சாதாரணமாகச் சொன்னார் பெண்ணிடம்!
'என் தோளில் ஏறிக் கொள்!'
சீடனுக்கோ அதிர்ச்சி. தனக்குப் பெண்ணாசை பற்றிப் போதித்த குரு, பெண்ணின் அழகில் மயங்கி விட்டாரே என்று.
பெண்ணைத் தோளில் ஏற்றிய குரு, ஆற்றுக்குள் வேகமாக நடந்தார். கழுத்தளவு தண்ணீரில்!
பெண் ஆடைகள் நனைந்து... கவர்ச்சிகள் தெரிய, துறவியை இறுக அணைத்துக் கொண்டிருந்தாள்.
சீடனுக்கோ கோபம். பெண்ணாசை எப்படி மனிதனை மாற்றுகிறது என்று. மறுபுறத்தில் பொறாமை. தான் தோளில் ஏற்றுவதற்கு முன்னால், தன்னைக் கேட்காமல், குரு பாய்ந்து கொண்டு உதவி செய்ய முன்வந்தாரே என்று.
சீடனின் மனப் போராட்டத்திற்குள் மறுகரை வந்து விட்டது. பெண்ணை இறக்கி விட்டு வேகமாய் தன் வழி நடந்தார் குரு. பெண் நன்றி சொன்னபடியே வீடு சேர்ந்தாள்.
பயணம் தொடர்ந்தது.
சீடனுக்கு மனக்குமுறல்...
தாளமுடியாமல் கேட்டான்,
'குருவே, பெண்ணாசை பற்றிச் சொல்லி விட்டு எப்படி அந்தப் பெண்ணை நீங்கள் ஏற்றிக் கொண்டீர்கள்?'
குரு நிதானமாகச் சொன்னார்...
'அவளை கரையில் விட்டிருந்தால், மிருகங்களிடம்... காட்டு மிருகங்கள், மனித மிருகங்களிடம் அவள் அகப்படக் கூடும். அதனால் தான் ஏற்றிக் கொண்டேன்.'
பயணம் தொடர்ந்தது.
சீடனின் மனம் உளைந்தது.
'குருவே, நீரில் நனைந்த அவளது உடைகள் அவளது கவர்ச்சிகளைக் காட்டி நின்றனவே, அவளது மென்மையான ஸ்பரிசம் உங்களுக்கு மனச் சஞ்சலத்தை ஏற்படவில்லையா?'
'அவள் என் தலைக்கு மேல் இருந்தாள். அதையெல்லாம் நான் கவனிக்கவேயில்லை. என் கவனமெல்லாம் என்னை நம்பி வந்த பெண்ணைப் பத்திரமாய் கரை சேர்ப்பதிலேயே இருந்தது.'
குரு வேகமாக நடந்து கொண்டேயிருந்தார்.
சீடன் மெளனமாக பின்தொடர்ந்து கொண்டேயிருந்தான். இருந்தாலும் அவன் மனம் அமைதியடையவில்லை.
'குருவே, நீங்கள் வயதானவர். நான் இளையவன். நான் அவளை என் தோளில் ஏற்றியிருந்தால், அதை உங்களால் ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா?'
துறவி சலனமில்லாமல் சொன்னார்...
'சீடனே, அவளை நான் எப்போதோ இறக்கி விட்டேன். நீதான் இப்போதும் அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்!'
You must be logged in to post a comment Login