குறி கண்டு குணம் நாடுவோம்
ஆரோக்கிய வாழ்வு என்பது மனித வாழ்வில் அடிப்படையானது. எவ்வளவு தான் செல்வங்களைக் குவித்தாலும், அதை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் இல்லாது போனால், அதனால் பயன் ஏது?
மனித உடல் விசித்திரமானது. எங்களுக்குத் தெரியாமலேயே எங்களை நோய் தொற்றியும் பற்றியும் கொள்ளும்போது, அது குணம், குறிகளைக் காட்டி எங்களுக்குத் தெரியப்படுத்தும். உடல் வேதனை தரும் வரைக்கும் எம்மில் பலர் வைத்தியர் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.
பின்வரும் குணம் குறிகளைக் கண்டால் உடனடியாகவே உங்கள் குடும்ப வைத்தியரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
1. காரணம் இல்லாத உடல் மெலிவு.
ஆறு மாதத்திற்குள் பத்து வீதம் நிறை குறைந்தால், அட, முயற்சி செய்யாமலே உடல் மெலிகிறதே என்று மகிழ்ச்சியில் திளைக்காமல், வைத்தியருக்குத் தெரியப்படுத்துங்கள். உடல் மெலிவுக்கு நீரிழிவு, மன அழுத்தம், ஈரல் நோய், புற்றுநோய், தைரோயிட் சுரப்பியின் அதீத செயற்பாடு, உடல் சத்துக்களை உறுஞ்சுவதில் உடலுக்கு ஏற்பட்ட மாற்றம் என்பன காரணமாக இருக்கலாம்.
2. தொடர்ச்சியான காய்ச்சல்
வழமையில் காய்ச்சல் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. பெரும்பாலும் உடலில் தொற்று ஏற்படும்போது அதை எதிர்த்து உடல் போராடும்போது தான் காய்ச்சல் வருகிறது. ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக, அதிவெப்பநிலையுடன் காய்ச்சல் இருந்தால், சிறுநீர்ப் பாதையில் தொற்று, காச நோய் போன்றன காரணமாய் இருக்கலாம்.
3. வேகமாக மூச்சு எடுத்தல்
தீவிர விளையாட்டுகளில் ஈடுபடுவோர் போல மூச்சு எடுத்தால் அது நோயின் அறிகுறியே. மூச்சு எடுக்க சிரமப்படுதல், தொய்வு நோய்க்காரர் போன்ற இழுப்புகள் எதுவாக இருந்தாலும், உடனடியாக வைத்திய உதவி பெறுங்கள். தொய்வு, நிமோனியா, சுவாசப்பையில் இரத்தக் கட்டி, நெஞ்சுச் சளி என சுவாசப்பை, இதய நோய்களின் அறிகுறியாக இது இருக்கலாம்.
4. வழமைக்கு மாறான உடற்கழிவு
சிவப்பு, கறுப்பு நிறமாய் மலம்; கழிதல், தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல், அடிக்கடி காரணமில்லாமல் மலங் கழிதல் என்பன வைரஸ், பக்ரீறியா தொற்றாகவோ, குடல் புற்றுநோயாகவோ இருக்கலாம். அதிலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடல் புற்றுநோய்;க்கான வாய்ப்புகள் அதிகம்.
5. மனக்குழப்பம் ஏற்படுதல்
திடீரென்று மனம் குழம்புதல், நேரம் மற்றும் இடம் தெரியாமல் தலையைச் சுற்றிக் குழப்பமடைதல், மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் ஞாபகம் வைத்திருக்க முடியாமை, அதிகம் கோபம் அடைதல் போன்ற மனப்போக்கு மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளில் மாற்றம் போன்றனவும் வேறு நோய்களின் அறிகுறியே. தொற்று, இரத்தத்தில் சீனிக்குறைவு, உடலில் நீர் போதாமை, மன நோய்களின் அறிகுறிகளாகவும் இவை இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் வேறு நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இருக்கலாம்.
6. கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிறைந்த உணர்வு
இந்த உணர்வுடன் தலைச்சுற்று, வாந்தி, காய்ச்சல், உடல் நிறைக்குறைவு, உடல் நிறை அதிகரிப்பு என்பனவும் காணப்படலாம். வயிற்றுக்குள் உள்ள நோய்களில், முக்கியமாக கணையப் புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இது இருக்கக் கூடும்.
7. திடீரென்று வெளிச்சம் தோன்றுதல்
சில நேரங்களில் ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் கண் விழித்திரையில் மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கலாம். இதைக் கவனிக்காமல் விட்டால், சில நேரங்களில் கண் பார்வையை இழக்க நேரிடும்.
நோய்களை நாங்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக இயற்கை இந்த அறிகுறிகளைத் தந்து வகை செய்திருக்கிறது. பகுத்தறிவு உள்ள நாங்கள் அவற்றைக் கண்டுணர்ந்து, உரிய சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.
You must be logged in to post a comment Login