Recent Comments

    கற்பனா: கற்பனையில் முன்னணியில் நிற்கும் இணைய இதழ்

    தாமரையின் தர்ணா வாபஸ்!

    புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்கள் புதிய போராட்டத்திற்குத் தயார்!

    தமிழை நேசித்து நடுத் தெருவுக்கு வந்த கவிஞர் தாமரை, நடுத்தெருவில் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல தமிழுணர்வாளர்களும், சர்வதேசப் புரட்சியாளர்களும் பெரிதும் குழப்பமுற்றிருப்பதாக, இணையத் தள ஆய்வாளர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

    ஏற்கனவே இவரது உண்மையான கணவன் தமிழா? தியாகுவா? என்பது முதல், இவரது பிரச்சனை ஐ.நா வரை செல்லுமா? என்ற கேள்வி வரை, இணையப் புத்திஜீவிகள் பலர் பெரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டிருந்தனர். இவரது போராட்டம் மூலம் சர்வதேச அளவில் பெண் விடுதலையை எட்டலாம் என்ற எண்ணத்துடன் இருந்த புரட்சியாளர்கள் பலர் மனமுடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தியாகு பதில் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இவர்கள், இவ்வளவு வேகமாக தியாகு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

    மறுபுறத்தில், இவரது பிரச்சனை ஐ.நா வரை சென்றால், விஜய் டிவியின் சதி குறித்த தங்கள் ஐ.நா விசாரணைக் கோரிக்கை கிடப்பில் போடப்படலாம் என்று பல புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்கள் விசனம் கொண்டிருந்தது தெரிந்ததே. ‘உங்களுடைய இந்த முயற்சியால் இனஅழிப்பு விசாரணையில் தாமதம் ஏற்படாதா? என்று கேட்ட கேள்விக்கு, ‘மாகாணசபை இன அழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியதால், இனிமேல் ஐ.நா சபை அதைச் சொல்லத் தேவையில்லை, இப்ப எங்கட உடனடிப் பிரச்சனை விஜய் டிவி தான், தாமரை வாபஸ் பெற்ற படியால், ஐநா செயலாளர் மூங்கி பான் உடனடியாக இதை விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என தமிழுணர்வாளர் குழு ஒன்றின் முக்கியஸ்தர் வைத்தியசாலைப் படுக்கையில் வைத்து நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். உட்கட்சி மோதல் காரணமாக இவர் காயமடைந்திருந்தாலும், சிங்கள அரசின் சதி வலைப்பின்னலில் இது ஒரு சிக்கல் என்று உணர்வாளர் இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

    ‘நாங்களும் தலைவரை நேசிச்சு நடுத்தெருவுக்கு வந்தனாங்கள் தான், நடுத்தெருவுக்கு வந்திட்டம் எண்டு றோட்டோரத்தில துணியை விரிச்சுப் போட்டு, குறி சொல்ற குறத்தி மாதிரி நாங்கள் இருக்கேலை. நடுறோட்டில நிண்டு காருகளை மறிச்சனாங்கள்’ என்று தமிழ் வியாபார நிலையம் ஒன்றில் உடன் மீன் வாங்க காத்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் ஆவேசம் பொங்க குறிப்பிட்டார்.

    வெற்றி அல்லது வீரமரணம் என்ற தமிழ்ப் பண்பாட்டைக் கடந்து, தாமரை வெற்றிகரமான பின்வாங்கல் செய்தது குறித்து சில அதிதீவிரவாதத் தமிழுணர்வாளர்கள் குழப்பமுற்றுள்ளனர். தற்கொடைப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திப் பழகிய இவர்கள் இன்னொரு தற்கொடையாளி கிடைக்காதது குறித்து மனம் உடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ‘நாங்களும் தலைவரை நேசிச்சு நடுத்தெருவுக்கு வந்தனாங்கள் தான், நடுத்தெருவுக்கு வந்திட்டம் எண்டு றோட்டோரத்தில துணியை விரிச்சுப் போட்டு, குறி சொல்ற குறத்தி மாதிரி நாங்கள் இருக்கேலை. நடுறோட்டில நிண்டு காருகளை மறிச்சனாங்கள்’ என்று தமிழ் வியாபார நிலையம் ஒன்றில் உடன் மீன் வாங்க காத்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் ஆவேசம் பொங்க குறிப்பிட்டார். அவரின் கணவரிடம் எமது செய்தியாளர் கருத்துக் கேட்ட போது ‘அவ சொன்னால் சரியாத் தானே இருக்கும்’ என்று ஆமோதித்தார். தியாகுவும் இவ்வாறான மனநிலையில் இருந்திருந்தால், தாமரை தெருவுக்கு வந்திருக்கத் தேவையில்லை என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.

    தியாகு ‘மனம் திறக்கிறார்’ பாணியில் அஞ்ஞாதவாசம் கலைத்து, முகப்புத்தகத்தில் தன்னிலை விளக்கம் அளித்ததுடன், தாமரையை நேரடியாகச் சந்தித்து மன்னிப்பு அறிக்கை வாசித்ததாகவும், அதன் பின்னரே தாமரை தனது போராட்டத்தை வாபஸ் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

    வழமையான சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுடன் பழரசம் வழங்கி முடித்து வைக்கப்படுவது போல, தியாகுவும் உடல்நலம் கருதி வீடு செல்லுமாறு வேண்டியதுடன் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

    உலகிலேயே முதல் தடவையாக குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்ட குடும்பம் என்ற உலக சாதனையை இந்தக் குடும்பம் நிகழ்த்தியுள்ளது. ஐ.நா விசாரணை கிடைக்காவிட்டாலும், கமிஷன் விசாரணை தனக்குக் கிடைத்த வெற்றி என்றும், கிடைக்கும் சகல தளங்களிலும் தியாகுவின் முகமூடியைக் கிழிப்பேன் என தாமரை நெருங்கியவர்களிடம் தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐ.நா சபை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழுணர்வாளர்கள் இடையில் உள்ள நகரம் ஒன்றில் சாலை மறிப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் போட்டி முடிவு ஒரு இனஅழிப்பு என மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றும்வரை தங்கள் போராட்டத்தை நீடிக்க உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    தங்கம் வென்ற தாரகைக்கு தமிழுணர்வாளர்கள் வீரவரவேற்பு

    விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் போட்டியில் தங்கம் வென்ற தாரகைக்கு வரவேற்பு அளிப்பதற்காக, தமிழுணர்வாளர்கள் ரொறன்ரோ விமான நிலையம் நோக்கிப் படையெடுத்துள்ளார்கள்.

    தங்களுடைய வாக்குகளை நிராகரித்து முதலாவது பரிசைக் கொடுக்காததால் ஆத்திரம் கொண்ட தமிழுணர்வாளர்கள் தங்கள் விஜய் தொலைக்காட்சிச் சேவையை ரத்துச் செய்ததால், விஜய் டி.வி வருமானத்தை இழந்து வங்குரோத்து ஆகும் நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில், விஜய் டிவி நிறுவனத்தின் தாய் நிறுவனமான நியூஸ் கோர்ப் உரிமையாளர் ரூபேட் மேர்டோக் கனடாத் தமிழ் உணர்வாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதே விமானத்திலேயே வருகை தருகிறார்.

    உணர்ச்சி வசப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில், ரொறன்ரோ விமான நிலையத்திற்கு அருகில் முப்படைகளும் குவிக்கப்பட்டு உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பயம் காரணமாக, அவர் அடுத்த சுப்பர் சிங்கர் முதல் பரிசு கனடியப் பாடகருக்குக் கிடைக்கும் என உறுதி அளிக்கப் போவதாகவும், தமிழுணர்வாளர்கள் அவருக்கு ‘யதார்த்தவாதி’ பட்டம் அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கனடா திரும்பும் தாரகைக்கு வரவேற்பளிக்க, தமிழ் அரசியல்வாதிகள் மலர்க்கொத்துகளுடனும் ஆஜராகியுள்ளனர். தாரகையுடன் படம் எடுத்து அடுத்த தேர்தலின் போது பயன்படுத்தலாம் என்ற நினைப்பில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளால் மூன்றாம் முனையத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே தாங்கள் பதவியிலிருப்பதாகக் கூறி முன்னே செல்ல முயன்ற அரசியல்வாதிகளை, ‘நாங்கள் கட்டுக்காசை இழந்தாலும், நாங்களும் அரசியலில தானே நிக்கிறம்’ என்று தோல்வியடைந்தவர்கள் தள்ளியதால் முறுகல் நிலை ஏற்பட்டது.

    விஜய் டிவி நிறுவனத்தின் தாய் நிறுவனமான நியூஸ் கோர்ப் உரிமையாளர் ரூபேட் மேர்டோக் கனடாத் தமிழ் உணர்வாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதே விமானத்திலேயே வருகை தருகிறார்.

    உணர்ச்சி வசப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில், ரொறன்ரோ விமான நிலையத்திற்கு அருகில் முப்படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

    இதற்குள் அவருக்கு விமானநிலையத்தில் வைத்தே விருது கொடுக்க, விருது கொடுப்போர் சங்கத்தினர் வந்திறங்கியதில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல்வாதிகளை விட அவர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டதால், தங்கள் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி விருது கொடுப்போர் முன்னேற முயன்ற போது, அரசியல்வாதிகள் மலர்க்கணைகளால் தாக்குதல் மேற்கொண்டனர். ஆனால், மறுதரப்பினர் விருதுகளால் பதில் தாக்குதல் நடத்தியதில், சில அரசியல்வாதிகள் காயமடைந்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வந்த அம்புலன்ஸ்களில் ஏற அவர்கள் மறுத்து விட்டனர்.’போட்டோ எடுக்காமல் இந்த விடத்தை விட்டு நகர மாட்டோம்’ என அவர்கள் உடனடித் தர்ணாவில் ஈடுபட்டார்கள்.

    இதற்குள் ஊடகவியலாளர்கள் என்று கூறிக் கொண்டு வந்த இன்னொரு கும்பல் கமெராக்களுடன் முன்னேறியதும் தங்களது மோதல் இணையத்தில் நாறக் கூடும் என்ற அச்சத்தில் நிலைமை சமரசத்திற்கு வந்தது. இவர்கள் இருவரையும் விட பெருமளவு எண்ணிக்கையில் ஊடகவியலாளர்கள் இருந்ததால் ‘உவங்களைப் பகைச்சால் பிழைப்புக்கு நட்டம் என்ற உணர்வில் அரசியல்வாதிகளும், விருது வழங்குவோர்களும் ஜகா வாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    ரொறன்ரோத் தமிழ் உறவுகள் பெருமளவில் விமானநிலையத்தில் நுழைந்ததை அடுத்து விமானசேவைகள் ஸதம்பிதம் அடைந்துள்ளன. ‘றோட்டிலை நிண்டு காரை மறிச்சம், இப்ப றண்வேயில நிக்கிற பிளேனை மறிச்சிட்டம்’ என தமிழுணர்வாளர் ஒருவர் கனடிய ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

    பாதுகாப்புக் காரணங்களை ஒட்டி தாரகையும் ரூபேட் மேர்டோக்கும் விசேட விருந்தினர் பகுதிக்குள்ளால் வெளியேறுமாறு கோரப்படலாம் என கனடிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

    உண்மைச் செய்திகளை விட இணையத்தில் வரும் கற்பனைச் செய்திகள் சுவாரஷ்யமாக இருப்பதால், ஏதோ நம்மாலானது. இந்தக் கற்பனைச் செய்திகள் வேறு இணையத் தளங்களில் உண்மைச் செய்திகளாக வெளிவந்தால் நாங்கள் அதற்குப் பொறுப்பில்லை என்பதை அறியத் தருகிறோம்.

    Postad



    You must be logged in to post a comment Login