Recent Comments

    கணனியைப் பிரதி (BackUp) செய்யுங்கள்!

    அந்தக் காலத்தில் பாரத் ஸ்டூடியோவில் கோட், ரை போட்டு, (அல்லது சேலை கட்டி) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு எடுத்த அடையாள அட்டைப் படம் முதல் (திருமணப் பேச்சுக்காய் கொடுத்தனுப்ப ஸ்கான் பண்ணியது!) இந்தக் காலத்தில் உங்கள் பிள்ளைகளின் சாமத்தியச் சடங்குப் படங்கள் வரைக்கும் முகப்புத்தகத்தில் சுற்றம் சூழோருக்கு சீன் காட்டுவற்காக கணனிக்குள் சேமித்து வைத்திருப்பீர்கள். உங்கள் கணனியின் வன்தட்டு ஒரு நாளைக்கு திருத்த முடியாதபடி செயலிழந்து இறக்கலாம். வைரஸ் தொற்றி எல்லாவற்றையும் அழித்து விடலாம். அல்லது நீங்களே விசயம் தெரியாமல் எதையாவது அழுத்தப் போய் முழு வன்தட்டையுமே முழுமையாய் அழித்து மீள எழுதி விடக்கூடும். உங்கள் வாழ்நாள் நினைவுகள்  ஒரு கணப்பொழுதில் மீளப் பெறமுடியாதபடி அழிந்து விடும். எனவே, நீங்கள் அவ்வப்போது உங்கள் கணனியில் பதிவு செய்தவற்றை இன்னொரு வன்தட்டு, பிளாஷ் ட்ரைவ், குறுந்தட்டு எதிலாவது பிரதி செய்து வைக்க வேண்டும். வன்தட்டு பழுதடைந்தால் அதில் உள்ள விண்டோஸ், மற்றும் செயலிகளை வேறெங்காவது பெற முடியும். எனவே உங்கள் ஆவணங்கள், படங்கள் போன்று இழந்தால் மீண்டும் பெற முடியாதவற்றை வேறு இடங்களிலும் பிரதி செய்வது போதுமானது. விண்டோஸ் 8 வைத்திருப்போர், அதில் உள்ள Filehistory  என்ற செயலியைப் பயன்படுத்தி பிரதி செய்யலாம்.  வெளி வன்தட்டு ஒன்றை இணைத்து, Start பட்டனை Right Click செய்வதன் மூலம் Control Panel  ஐ திறவுங்கள். அதன் வலப்புற மேற்பக்கத்தில் உள்ள drop down Menu ஐ அழுத்தி View by: Large icons ஐ தெரிந்து,  File History ஐ கிளிக் பண்ணுங்கள். மறுபக்கத்தில் Turn on  என்ற குறியிட்ட பட்டனை அழுத்துங்கள். என்னென்ன ஆவணங்கள், கோப்புகளை பதிவு செய்வது, எந்த வன்தட்டில் பிரதி செய்வது போன்றவற்றை இடது பக்கம் உள்ள தெரிவுகளில் தெரிவு செய்யுங்கள். Advanced settings என்பதைக் கிளிக்கி, எவ்வளவு நேரத்திற்கு ஒரு தடவை பிரதி செய்வது என்பதைத் தெரிவு செய்யுங்கள். விண்டோஸ் தானாகவே அவ்வப்போது உங்கள் ஆவணங்களைப் பிரதி எடுக்கும். விண்டோஸ் XP, 7, Vista பயன்படுத்துவோர் SyncBack Free  என்ற இலவச செயலியை www.2brightsparks.com/freeware/freeware-hub.html இல் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.  புதிய Backup ஐ உருவாக்கி, அதற்கு பெயரிட்டு, எந்த வகையான Backup, எங்கிருந்து எங்கு பிரதி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவு செய்து, எவ்வளவு நேரத்திற்கு ஒரு தடவை என்பதையும் குறிப்பிட்டால் அது தானாகவே பதிவு செய்து கொள்ளும். எனவே இனிமையான நினைவுகளை கணப்பொழுதில் இழந்து போகாமல் மறக்காமல் Backup செய்யுங்கள். (இருந்தாலும், அழகான படத்தைக் காட்டி வாழ்க்கைத் துணையை இப்படி ஏமாற்றியிருக்கக் கூடாது!)

    Postad



    You must be logged in to post a comment Login