கடுங்குளிரில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
கனடாவின் கிழக்குப் பகுதியில் கடும் குளிர் அலை நாளாந்த வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்றுக் காரணமாக வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் நாற்பது சதம பாகை வரை செல்லலாம்.
கடுமையான குளிர் உடலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதால், வெளியே செல்பவர்கள் மட்டுமன்றி, வீட்டிற்கு உள்ளே உள்ளவர்களும் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஆபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
வெப்பநிலை அளவுக்கு அதிகமாகக் குறையும் போது, உடல் வெப்பநிலை குறைந்து உடல் பாகங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படலாம். இது Hypothermia எனப்படுகிறது. அத்துடன் உடற் பாகங்களான விரல்கள், மூக்கு, கண்ணிமைகள் போன்றன குளிரில் உறைந்து செயற்பாடற்றுப் போகலாம்.
வீட்டிற்குள்ளே வெப்பநிலை குறையும் போது, வீட்டிற்கு நீர் வழங்கும் குழாய்களில் உள்ள நீர் உறைவதால், குழாய்கள் வெடிக்க நேரிடலாம். எனவே, உங்கள் சமையலறை, அல்லது குளியலறையில் உள்ள நீர்க் குழாய்களை மெதுவாக சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறும் வண்ணம் திறந்து விடுவதன் மூலம் நீர் உறைவதைத் தடுக்க முடியும்.
வெளியே செல்பவர்கள் இறுக்கமில்லாமல் தளர்ந்த உடைகளை பல அடுக்குகளாக அணிய வேண்டும்.
கண்ணைப் பாதுகாக்க கண்ணாடிகளை அணியலாம். அல்லது நேரடியாகக் குளிர் கண்ணில் படாத விதத்தில் தலைப் போர்வையால் மூடலாம்.
காதிலும் மூக்கிலும் உள்ள நகைகளை கடும் குளிரில் அகற்ற வேண்டும். தோலின் வெப்பநிலையை விட இவற்றின் வெப்பநிலை வேகமாகக் குறையும் என்பதால், இந்த நகைகள் தோலில் முட்டும் இடங்கள் உறையும் அபாயம் உண்டு.
கோப்பி, அல்ககோல் என்பன உங்கள் உடல் வெப்பநிலையை இழப்பதை துரிதப்படுத்துவதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வாகனங்களின் பெற்றோல் பூச்சியத்திற்கு கீழ் அறுபது பாகையில் உறையும். ஆனால் டீசல் பத்துப் பாகை கீழ் உள்ள போது தடங்கலை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உங்கள் டயர்கள் உறையக் கூடும். ஆனால் அது டயர்களைப் பழுதாக்காது. பிரேக் பிடிப்பதற்கான திரவத்தில் நீர் இருந்தால் அது உறைந்து பிரேக் சில நேரங்களில் செயற்படாமல் விடலாம். இதில் அவதானமாக இருங்கள். போதியளவு சூடாகிய பின்பே வாகனங்களை செலுத்த ஆரம்பியுங்கள்.
You must be logged in to post a comment Login