கடல் உப்பு உடலுக்கு நல்லதா?
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததால், நாம் உப்பில்லாமல் உண்பதேயில்லை. சரி… சரி… பொங்கல் அதற்கு விதிவிலக்கு!
உப்பில் உள்ள சோடியம் உடலுக்கு அவசியமானது. உடலில் உள்ள நீரின் அளவைக் கட்டு;படுத்தல், இரத்தத்தின் அமிலத் தன்மையைப் பேணுதல், தசைகள் இறுகுதல், நரம்புகளின் ஊடாக செய்திகளைக் கடத்துதல் எல்லாவற்றுக்கும் சோடியம் அவசியமானது.
தற்போது விற்பனையாகும் பல உணவுப்பொருட்கள், தகரத்தில் அடைத்த உணவுகள், மரக்கறிகள், சோயா திரவம், அஜினொமோட்டோ, உணவுக்கடைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தானியங்களால் செய்யப்பட்ட காலை உணவுகள் என்பன அதிக உப்புச் சேர்க்கப்பட்டே விற்பனையாகின்றன. இவற்றை தவிர்க்க வேண்டும். தகரத்தில் அடைத்த உணவுகளை நன்கு கழுவிய பின்பே பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை உணவுகளால் தினசரி ஒருவர் பாவிக்கக் கூடிய உப்பின் அளவை விடக் கூடவாகவே எல்லோரும் உப்பை பயன்படுத்துகின்றனர். உப்பு அதிகமானால் சிறுநீரகத்தால் அதைச் சமாளிக்க முடியாது. சராசரி ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு தேநீர்க்கரண்டி உப்பையே பயன்படுத்த வேண்டும்.
இருதய நோய், இரத்த அழுத்தம் உடையவர்கள் உப்பின் அளவைக் கட்டாயமாகக் குறைக்க வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமானவர்களுக்கு (Hypertension) இதயத் தசை பெரிதாவதால், இரத்த ஓட்டம் குறைந்த இதயத்திற்கு ஒட்சிசன் கிடைப்பது குறைந்து இருதயம் செயலிழக்கலாம்.
கடல் உப்பு இயற்கையானது, அதைப் பயன்படுத்தினால் நோய் வராது என்ற தவறான கருத்து பலரிடம் உண்டு. சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் உப்பு முன்பு ஒரு காலத்தில் உப்பு நீர்த் தேக்கங்கள் நிலத்தின் கீழ் வரண்டு போனதால் ஏற்பட்ட சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படுவது. பல நாடுகளில் அயடின் குறைபாடு காரணமாக தைரோயிட் நோய் ஏற்படுவதால் உப்பில் அயடின் சேர்த்தே விற்பனை செய்யப்படுகிறது. ஆனையிறவு உப்புப் போன்று கடல் நீர் ஆவியாவதால் தேங்கி வரும் உப்பில் வழமையின் அயடின் சேர்க்கப்படுவதில்லை. இந்த இரண்டு உப்புகளுக்கும் இடையில் இரசாயன ரீதியில் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் சோடியம் குளோரைட்டே.
கடல் உப்போ, சுரங்க உப்போ குறைத்துக் கொள்ளுங்கள். உப்பில்லாப் பண்டம் வயிற்றுக்குள்ளே! நோய் பிணியின்றி ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
You must be logged in to post a comment Login