வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
முகப்புத்தக நண்பர் ஒருவருக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது. உடனே ரூம் போட்டு யோசிக்கிறார்.
வடைக்கு ஏன் ஓட்டை வந்தது?
ஏன் வந்தது என்பது தெரியாது.
ஆனால் எப்படி வந்தது என்பது பற்றி, என் மலையாளச் சகோதரன் சொன்ன ஒற்றைக் கைச் சமையல்காரன் ஜோக் சொல்லலாம்.
ஓ, நோ! அதெல்லாம் பகிரங்கமாகச் சொல்லக் கூடிய கதை இல்லை. நாலு பியர் அடித்து, மச்சான் என்று சமரசம் உலாவும் போது சொல்கின்ற ஜோக்குகள் அவை.
அப்புறமாய், பெண்கள் ஏன் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்று வெறுங் கையோடு திரும்பி வருகிறார்கள் என்று யோசிக்கிறார்.
மன்னனுக்குக் கூந்தல் மணம் பற்றிய சந்தேகம் வரப் போய், நக்கீரன் சாம்பலான கதை போல, நண்பரின் பிரியதர்மிணியின் காதுக்குக் கதை போனால்...
ரூம் போட்டு யோசிக்க வேண்டி வரும்...
'நம்ம வாழ்க்கை ஏன் இப்படி?' என்று.
வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, தலையில் கை வைத்தபடி!
ரூம் போடுவது என்பது, கொஞ்சம் பலான வார்த்தைப் பிரயோகம் என்பது தான் கியூறியஸின் சிற்றறிவுக்கு எட்டிய விளக்கம்.
யாரையாவது தள்ளியிட்டுப் போய் ரூம் போடுதல்!
பாக்கியராஜ் ரூம் போட்டு, காமன் கணையில் வீழ்ந்து விடாதிருக்க, கந்தசஷ்டி கவசம் வாசித்த காட்சி நம்மைப் போன்ற முதியோர் மனதில் இன்றும் இளமையாக இருக்கக் கூடும்.
மற்றும்படி அகதிகளாய் அலைந்த தமிழர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே உலகெங்கும் உள்ள லொட்ஜ்களில் ரூம் போட்டு, எதிர்காலம் பற்றி தலையில் கை வைக்காத குறையாக யோசித்தவர்கள் தான்! ஏஜன்சிக்காரனுக்கு கொடுத்த பணத்தில் பின்னே என்ன, ஐந்து நட்சத்திர ஹோட்டலிலா ரூம் போட முடியும்?
இப்போது புதிதாய், ரூம் போட்டு யோசிப்பது பற்றி, வடிவேலுவின் படத்துடன் முகப்புத்தகப் பின்னூட்டங்களைக் கண்டதுண்டு. அதன் தமிழ்த் திரையுலக நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கியூறியஸ்க்குத் தெரியாது.
எண்பதுகளில் தினமணிக் கதிரின் சினிமா எக்ஸ்பிரஸில் தமிழ்ச் சினிமா உலகின் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி குறும்பாக எழுதியிருந்தார்கள்.
அதில் ஒரு வார்த்தை...
என்ன, உட்காருவமா?
எழுதும் போது எழுத்தாளர்கள் தனியே ஒரு ரூமில் உட்கார்ந்திருந்து, மற்றவர்களின் அனாவசிய தொந்தரவுகள் இல்லாமல், கணனியிலோ, காகிதத்திலோ எழுதக் கூடும். சிலநேரம் புத்திஜீவிகள் தாடியைச் சொறிந்து, முகட்டுவளையை அண்ணாந்து பார்த்து எழுதக் கூடும். கவிஞர்கள், புத்திஜீவிகள் அப்படி போஸ் கொடுத்து எழுதிக் கொண்டிருக்கும் போது நேரில் காணும் பாக்கியம் கிடைக்கா விட்டாலும், அவர்களின் ஆக்கங்களுடன் வந்த போட்டோக்களில் கண்டதுண்டு. சிலநேரம் இலக்கியச் சந்திப்புகளிலும் சீரியஸான முகத்துடன் இவ்வாறான போஸ்களுடன் சிலரைக் கண்டதுண்டு.
இதுபற்றிக் கியூறியஸ் ரூம் போடாமல் யோசித்ததில் கண்டறிந்த உண்மை ஒன்றுண்டு.
நிகழ்வின் உத்தியோகபூர்வ பதிவாகவும், போன்கள், ஏன் கட்டடப் பாதுகாப்புகளிலும் கமெராக்கள் நிறைந்த தற்போதைய சூழ்நிலையில், யூடியூப்புக்கும் முகப்புத்தகத்துக்கும் போட, தங்களை அறியாமல் யாராவது எங்கிருந்தாவது படம் எடுக்கக் கூடும் என்ற முன்ஜாக்கிரதையுடன் இவர்கள் போஸ் கொடுப்பதாகவே கியூறியஸ்க்குப் படுகிறது. புத்திஜீவிக் கவிஞர் டீயோடு கடித்த சமோசாவில் கிடந்த ஆட்டிறைச்சியை எடுக்க பல் குத்தும் படத்தையோ, நிகழ்வின் சுவாரஷ்யத்தில் குறட்டை விட்டுத் தூங்கி கொட்டாவி விடும் படத்தையோ அவரது கருத்துப் பகிர்வைப் பிரசுரிக்கும் போது பகிர்ந்து கொள்ள முடியுமா? இதனால் நாடியில் கை வைத்து முகத்தை உம் என்று வைத்தபடி... சதா சிந்தனாவாதிப் போஸ்!
அதெல்லாம் இருக்கட்டும். சப்ஜக்ட்டுக்கு வருவோம்!
தமிழ் சினிமாவில் கதை, வசனகர்த்தா என்று ஒருவர் முன்பு இருந்தார். இயக்குனர் வேறு யாரோவாக இருப்பார். இந்தக் கதை, வசன கர்த்தாக்களும் ஏதோ ஒரு ரூம் போட்டு எழுதி முடிப்பதில்லை. நாடகக் காரர்கள் போல, பிரதியை முழுமையாக்கிய பின்னால் பயிற்சி? அதெல்லாம் கிடையாது. இதைவிட, காமெடி ட்ராக் என்று விதூஷகர்களின் காட்சிகள் வேறு புறமாய் இன்னொரு குழுவினரால் எழுதப்படும்.
கதையை எல்லாம் சொல்லி, படம் தயாரிக்கத் தொடங்கினாலும், சில நேரங்களில் ஸ்டூடியோக்களில் காலையில் படப்பிடிப்புத் தொடங்கு முன்னால் தான் அன்றைய வசனங்களை எழுதிக் கொடுத்தவர்களும் உண்டு.
தனிமனிதர்கள் எழுதாமல் ஒரு கும்பலே கதை எழுதிய விவகாரத்தை எம்.ஜி.ஆர் பிக்ஷர்ஸ், தேவர் பிலிம்ஸ் கதை இலாக்கா என்று டைட்டில்களில் பார்த்திருப்பீர்கள். இவர்கள் எல்லாம் தயாரிப்பாளர் ஆபீசில் உட்கார்ந்து, கதைக்கான கிரடிட் கிடைக்காமல் தினச் சம்பளத்திற்குக் கதை எழுதிய கூலித் தொழிலாளிகள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி இருக்கும் வரைக்கும், கதாநாயகர்களுக்காக கதை எழுத வேண்டிய சூழலில் இதெல்லாம் பிரச்சனை இல்லை. அதிலும் ஏற்கனவே வந்த இந்தி சினிமா ஒன்றை சுட வேண்டிய நிலை வந்தால், எல்லாமே இலகுவாயும் இருக்கும். ஏழை அம்மா, துரத்திக் காதல் பண்ணும் பணக்காரக் காதலி, மகா கொடூர வில்லனோடு, புனிதப் போராளியான கதாநாயகன்.
அல்லது சிறுவயதிலே பிரிந்து போய் திருடனாயும், பொலிசாயும் வரும் சகோதரர்கள். இந்தக் கதையை பதினோரு தடவை அவ்வப்போதைய பெரிய நாயகர்களை வைத்துச் சுட்ட இந்தி இயக்குனர் உண்டு. இதைக் கியூறியஸ் வாசித்தது எண்பதுகளில். அதன் பின்னால் அவரால் எத்தனை சுடப்பட்டனவோ?
அல்லது கண்ணதாசன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, சௌந்தரராஜன் பாடல்களைச் சுற்றிய சிவாஜி படங்கள்.
கதை விடுவது ரொம்பச் சுலபம்.
பின்னால் பாலச்சந்தர், பாரதிராஜா என்று இளம் தலைமுறை இயக்குனர்கள் வந்து, கதை, வசனத்தையும் அவர்களே பொறுப்பாக எடுத்துக் கொண்ட பின்னால், கதை வேறு! பாலச்சந்தர் அனந்துவின் துணையுடன் ஆங்கிலப்படங்களைச் சுட, எம்.ஜி.ஆர் காட்டிய கறுப்பு வெள்ளைக் கிராமத்தை ஈஸ்ட்மன் கலரில் பாரதிராஜா கொண்டு வர,
கதை வசனம் இயக்குனர்கள் கைவசம் போனது.
இயக்குனர்கள் தான் திரைக்கதை, வசனம் என்றவுடன் அவர்களும் தனியே ரூமில் உட்கார்ந்து எழுதிக் கொண்டு வந்து படம் தயாரிப்பதல்ல.
இளைய தலைமுறை சினிமாவுக்குள் வந்ததும்... இடதுசாரிகளுக்குரிய 'சென்ட்ரல் கொமிட்டி' வியாதி இவர்களுக்கும் தொத்தியிருக்கக் கூடும். தனியே ஒருவனுக்கு முடிவுகள் எடுக்கும் திறமை இல்லை என்று கூட்டுக் குழு அமைத்து, கூடி விவாதித்து, (சுய)விமர்சனம் செய்து தான் கதை வசனம் எழுத வேண்டும் என்ற நிலை வர... கதை டிஸ்கஷன் செய்து, எல்லாரும் அங்கீகரித்த பின்னால் தான் கதை வசனம் முடிவாகும்.
இத்தனை புத்திசாலிகள் ஓரிடத்தில் அமர்ந்து முடிவு எடுத்தால் முடிவுக்கு வர எவ்வளவு நேரம் எடுத்திருக்கும், முடிவின் லட்சணம் எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
கியூறியஸின் அப்பா சொல்வார்... கன எலி கூடினால் மண் எடாது!
சில நேரங்களில் சுஜாதா மாதிரி எழுதப்பட்ட நாவல்களையும் வேறு திரைக்கதை ஆக்க வேண்டிய நிலை வரலாம்.
ஒரு மனிதன் எழுதிய கதையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, சினிமாவுக்கு அதை மொழிபெயர்க்கிறோம் பேர்வழிகள் என்று கதாசிரிய டைரக்டர், உதவி டைரக்டர்கள், ஒளிப்பதிவாளர்களுடன் டிஸ்கஸ் பண்ணுவார்கள். அதிலும் இப்போது பல மொழி வெளிநாட்டுப் படங்கள் டிவிடிக்களிலும், யூடியூப்பிலும் குவிந்து கிடக்க, அதில் எதையாவது 'தமிழ் மயப்படுத்துகிறோம்' என்று சுடுவதாயின், ஒரிஜினலின் முழுமையான அடையாளத்தை எவ்வளவு சிதைக்க வேண்டுமோ, 'டேர்ட்டி டசினை' வாத்யார் அரை டசினாக்கிப் 'பல்லாண்டு வாழ' வைத்தது போல, அவ்வளவிற்கு ஒரு பெரிய கூட்டம் தேவை.
காரணம், ஒரிஜினல் ஹொலிவூட் கதைக்காரன் கேஸ் போட்டால் கோடிக் கணக்கில் அழ வேண்டியிருக்குமே!
அவன் தற்செயலாக இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால், அதன் ரிஷி மூலம் தன்னுடையது தான் என்று அறியாமல், அட, எதற்கு பன்னிரண்டு பிரபலங்களுக்குப் பணத்தைக் கொட்டுவானேன் என்று, ஆறு பேரோடு படம் எடுக்க, இதற்கான கொப்பிரைட்டிற்காக சட்டத்தரணி பட்டாளத்துடன் வந்திறங்குவான். பிறகென்ன? அவனும் ஒரு பட்டாளத்திற்கு ரூம் போட்டு எழுதிய திரைக்கதையுடன், செக்ஸி சிக்ஸில் லீ மார்வின் எங்காவது சீனியர்ஸ் ஹோமிலுள்ள தாயை, ஹொலிவூட்டின் கார் சேஸ்கள் நடக்கும் சான் பிரான்சிஸ்கோவின் அலையலையாய் மேடு பள்ளமாயிருக்கும் வீதியில் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே ஒரு பாட்டுப் பாடியிருப்பான்.
அதெல்லாம் கிடக்கட்டும்.
நீங்கள் படமெடுத்தால் யாருடையவாவது நிலக்கீழ் அறையில் ஒரு கேஸ் பியருடனும் கோழிக்காலுடனும் டிஸ்கஸ் பண்ணக் கூடும். இதற்குக் கூட வழியில்லாமல், நம்ம நாடக டிஸ்கஷன் றோஸ்ட் பாணும் சம்பலும் வீட்டுக்காரரின் உபயத்துத் தேநீருடனும் முடிந்தது பெரிய கதை.
கோடிக்கணக்காய் புரளும் சினிமா... நட்சத்திர இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள்... வெறும் புரடக்ஷன் ஆபீசில் டிஸ்கஷன் நடக்க முடியாது. அதெல்லாம் தினக்கூலி கதை இலாக்காவுக்குத் தான். நம்ம அகதி அந்தஸ்து லொட்ஜில் கூட இருக்காது.
தயாரிப்பாளர் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்க வேண்டும். காலையில் ஆளுக்காள் நினைத்த நேரத்திற்கு வருவார்கள். வருபவர்களுக்கு கோப்பி (உங்க காபிங்க!), கொறிக்க கோழி வறுவல்... இப்படியே போய் எல்லாரும் வந்து சேர்ந்ததும், அன்றைய அரசியல், சினிமா கிசுகிசுக்கள், தங்களுக்கு வேண்டத்தகாதவர்களின் தோல்விகள் பற்றி கேலிகள் என்றெல்லாம் பேசி முடிக்க மதியமாகும். பிறகென்ன, சிக்கின் பிரியாணி அது இதென்று தயாரிப்பாளர் செலவில் சாப்பிட்டு ஏப்பம் விட்டு, தூக்கம் கண்ணை மயக்க, ஒரு இரண்டு மணி போலக், கேட்பார்களாம்...
என்ன, உட்காருவமா!
இதுதான் ரூம் போட்டு சிந்திப்பதன் லட்சணம். இந்த லட்சணத்தில் எடுத்த சினிமாக்களின் லட்சணம்... கேட்கத் தேவையில்லை.
புலன் பெயர்ந்த ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்கிறார்கள். பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
அறிஞர்கள் ஓரிடத்தில் கூடியிருந்து, தங்கள் சிந்தனைகளை ஒன்று திரட்டி, அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடித்து, சிந்தனை எழுச்சியை உண்டு பண்ணி, சமுக முன்னேற்றத்திற்கு வழி பண்ணியது காலாகாலம் நடந்தது தான். இந்தச் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் நம்மைப் போல, நாளாந்த வாழ்வுக்கு அல்லல்படாமல், ரூம் போட்டுச் சிந்தித்து, நாட்டு நன்மைக்காகச் செயற்படட்டும் என்று இவர்களுக்கெல்லாம் மன்னர்களும் பொற்காசுகள் வழங்கி இந்த சிந்தனை மேம்பாட்டுக்கு வழி வகுத்தார்கள்.
கிரேக்க நாட்டின் தத்துவவியலாளர்களும் சரி, இங்கிலாந்தின் விஞ்ஞானிகளுக்கான றோயல் சொசைட்டிகளாயினும் சரி, திம்புக்குத்துவின் முதல் பல்கலைக்கழகமாயினும் சரி, ரூம் போட்டு யோசிக்க வழி வைத்தவை தான்.
இதனால் அறிவியல் வளர்ந்தது, சிந்தனை செழித்தது. மனித குலம் மேம்பட்டது.
தமிழன் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தான்.
தொடங்கியது தொல்லை.
சங்கத்தில் ரூம் போட்டு சிந்தித்த தமிழன் மொழியைப் பற்றித் தான் சிந்தித்தான். தமிழை வளர்க்க வேண்டும் என்ற தமிழன் அறிவை வளர்க்கவோ, அதை ஆவணப்படுத்தவோ முயன்றதாகத் தெரியவில்லை. அன்று முதல் இன்று வரை மொழியை வளர்க்க உயிரைக் கொடுத்த தமிழனின் அறுவடை என்ன என்பதை தமிழ்நாட்டு டிவி அறிவிப்பாளினிகள் முதல் புலன் பெயர்ந்த பிள்ளைகள் வரை பேசும் ஆங்கிலக் கலப்பு மழலை மொழியில் அறிந்து கொள்ளலாம்.
எத்தனை நாளைக்குத் தான் தமிழை வளர்க்க முடியும்? பொற்காசு கொடுத்த மன்னனுக்கு, வாங்கிய பிச்சைக்குப் பாட்டு எழுத வேண்டிய சூழல் வந்தது. அவனைப் புகழ்வதும், அவனுக்கு தினவெடுத்த போது போர் புரிய ஆட் சேர்க்க போர்ப்பரணி பாடவும் என இந்த ரூம் போட்டு சிந்தித்த புலவர்கள் வழி செய்தார்கள்.
ஆக மொத்தத்தில் தமிழன் ரூம் போட்டுச் செய்த வேலை, தலைவனைக் குஷிப்படுத்துவது தான்.
இப்படியாக ரூம் போட்டு சிந்தித்துக் கடைசியில், பாதாள பைரவிகளின் நிலக்கீழ் மாளிகை ரூம்களில் யோசிக்கப் புறப்பட்டு நடந்த கதையை இப்போது சொல்லி அழுது என்ன பயன்?
ரூம் போட்டு யோசிப்பது என்பது ஒரு கேலிக்குரிய பொருளாக இருந்தாலும், ஒரு அறையில் தனியே இருக்கப் பலராலும் முடிவதில்லை. கியூறியஸ் முன்பு தொழில் புரிந்த இடத்தில், பிலிம் சுருள் ஓடும் இருட்டறைகளுக்குள் தான் வேலை. இதெல்லாம் பெரிய ஹொலிவூட் சினிமாப்படங்கள். அவற்றின் கதை டிஷ்கஸன் பெரிய கதை. கதாசிரியர் பெயரில் தன் பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று வழக்குத் தொடர்ந்தது முதல் ம(று)றக்கப்பட்ட கதாசிரியர்களுக்கு பின்னால் நடந்த விசாரணையின் பின் நீண்ட நாட்களின் பின் ஓஸ்கார் விருது வழங்கிய கதை வரை உண்டு.
இந்த இருட்டறைகளில் வேலை செய்யும் பலரால் உள்ளே தனியே இருக்க முடிவதில்லை. ஒன்றில் அதி உயர்ந்த சத்தத்தில் பாட்டுப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லது அடிக்கடி வெளியே போய் நின்று தேவைப்படும் நேரங்களுக்கு உள்ளே வருவார்கள். சில நேரங்களில் நேரம் தவறினால் படும் அல்லல்கள் பெரிய கதை. நேரம் தவறியதும் இயந்திரம் நின்று விட, இரசாயனங்களுக்குள் ஓடிக் கொண்டிருந்த பிலிம் சுருள் அவ்வளவும் பாழ்.
கேட்டால், இருளில் இருந்தால் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது என்பார்கள்.
அட, மனிதன் சிந்திக்கும் பிராணி. ஆனால் இவர்களுக்குச் சிந்திக்கப் பயம். அனாவசியமாகச் சிந்தித்து எதற்கு மூளையை வேஸ்ட் பண்ணுவான் என்ற ஜாக்கிரதை உணர்வாக இருக்கக் கூடும். மனிதன் சிந்திக்கப் பயப்படும்போது, அவனுக்கு ஏற்கனவே மற்றவர்கள் சிந்தித்து (அல்லது திரித்து) சொல்லும் உண்மைகளை நம்புவது இலகுவாக இருக்கிறது.
ஆனால் கியூறியஸ்க்கு இந்த தனிமை மிகவும் பிடித்ததாய் இருக்கும். வேலையிடத்தில் கியூறியஸிடம் பேனா இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தேடி வருவார்கள். காரணம், இருளில் இருக்கும்போது சிந்தனை கொடி கட்டிப் பறக்கும். கருத்துக்கள் பிறக்கும். உடனே வெளியே வந்து மடித்து வைத்த பேப்பர்களில் குறிப்பாகும். இப்போதைய செல்பேசிகள் இருந்திருந்தால் இருட்டிலேயே தட்டச்சித் தள்ளியிருக்கலாம்.
கியூறியஸ் எழுதிய எவ்வளவோ இவ்வாறான தனிமையில் பிறந்தவை தான். இருட்டில் ரூம் போட்டு யோசித்ததில் பிறந்தவை.
தனிமை பலருக்குப் பிடிப்பதில்லை. தனிமை என்னும்போது, மற்றவர்களால் கவனிக்கப்படவில்லையே என்ற உணர்வு தரும் loneliness அல்ல. எங்கள் சிந்தனைகள் மட்டுமே எங்களோடு உறவாடும் தனிமை. ஆங்கிலத்தில் Solitude.
ஒரு தடவை நன்கு படித்தவர் போலக் காணப்பட்ட ஒரு வெள்ளையர், வந்தேறுகுடிகள் பெரும்பான்மையான அந்தத் தொழிலிடத்தில் புதிதாய் வந்து சேர்ந்தார். அவருக்குப் பயிற்சி கொடுக்குமாறு அழைத்து கியூறியஸிடம் கொண்டு வந்த போது, இருளில் பார்த்து விட்டுச் சொன்னார், Solitary Confinement போல இருக்கிறது என்று.
சிறைச்சாலைகளில் கொடுங் கைதிகளையும், மனநோய் மருத்துவநிலையங்களில் கடும் பாதிப்புக்குள்ளானவர்களையும் தனி அறையில் அடைப்பதைக் குறிப்பிடும் வார்த்தை இது.
பின்னால் அறிந்தால், ஏதோ நல்ல வேலையில் இருந்து, மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகி நம்மைப் போல வக்கற்றவர்களோடு வந்து வேலை செய்தவர் அவர். தனிமையாய் இருளில் அடைக்கப்பட்ட அனுபவம் அவருக்கு இருந்திருக்கிறது.
தொழில் புரியும் இடத்தில் நண்பர்களுக்குக் கியூறியஸ் அடிக்கடி சொன்னது... என்னுடைய உடல் தான் இங்கே இருக்கிறது. என்னுடைய மனம் வேறு எங்கோ!
காரணம், அவ்வாறான வேலை இடத்திற்குள் மட்டும் எங்கள் சிந்தனையையும் இலட்சியங்களையும் குறுக்கிக் கொண்டால், எங்கள் உலகம் அந்த இருட்டறையைப்போல குறுகி விடும்.
ஆள் நடமாட்டம் நிறைந்து, இரைச்சலும் சந்தடியும் நிறைந்த இடத்திலும், சிந்தனைகள் மட்டும் உறவாடும் தனிமைக்குள் உலவ கியூறியஸால் முடியும்.
இந்தத் தனிமைகளுக்கு எல்லாம் தனி ரூம் உண்மையில் தேவையில்லை. கண்களை மூட வேண்டிய அவசியமும் இல்லை. சிந்தனைக்குப் பயன் தராத சுற்றாடல் பற்றி அனாவசியமாய் மூளையை வேஸ்ட் பண்ணுவானேன் என்று சிந்தனை எங்கோ கொடி கட்டிப் பறக்கும்.
சிந்தனை இறந்து போன இடத்தில், நாங்களும் சேர்ந்து கொண்டால், எங்கள் சிந்தனையும் மழுங்கி விடுகிறது. அதை உயிர்த் துடிப்போடு வைத்திருக்க வேண்டுமாயின், அந்தச் சிந்தனைப் புதைகுழிகளுக்கும் அப்பால் சிந்திக்க வேண்டும்.
சிந்திக்க முடியாதவன் வெறும் நடமாடும் பூதஉடல் மட்டுமே.
சுயமாகவே சிந்திக்கப் பயந்து, வேறு யாரோ சொல்லிக் கொடுத்தவைகளை விழுங்கிக் கொண்ட சமூகத்தில், ஏற்படக் கூடிய அழிவுகள் பற்றி ஈழத்தமிழர்களுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே அனுபவப்பட்டிருப்பார்கள்.
பிரெஞ்சு கணித நிபுணர் பாஸ்கால் சொன்ன வார்த்தை கியூறியஸ்க்கு மிகவும் பிடித்தது. இவர் பெயரிலிருந்த கணனி மொழியை முன்பு யாழ்ப்பாணத்தில் படித்ததுண்டு.
All men's miseries derive from not being able to sit in a quiet room alone.
மனிதத்தின் பிரச்சனைகள் எல்லாமே மனிதர்களால் ஒரு அமைதியான அறையில் தனிமையாய் இருக்க முடியாமல் போனதால் விளைந்தவையே.
எனவே வாருங்கள், ரூம் போட்டு சிந்திப்போம்.
சிந்தனை மிகுந்து, நமது இனம் செழிப்புற்று, வளரட்டும்.
அப்போ,
என்ன, உட்காருவமா?
You must be logged in to post a comment Login