முன்னெச்சரிக்கையோடு தலை காப்பீர்
உங்களின் காரில் ஏறிப் பயணத்தை ஆரம்பிக்கும்போது, முதலில் சீட் பெல்ட்டை இழுத்துப் பூட்டுகிறீர்கள். விபத்து நேர்ந்தால், காரில் இருந்து தூக்கி வீசப்படாமல் இருப்பதற்கு, சீட் பெல்ட் அணிவது அவசியம். ஆனால், சீட்டின் மேல் புறமாக, தலையைச் சாய்ப்பதற்கு வசதியாக இருக்கும் ஹெட்றெஸ்ட்டை சரியான முறையில் சரி செய்வதற்கு பலரும் மறந்து விடுகிறார்கள். விபத்து ஏற்படும் போது கழுத்து, மூளை, முள்ளந்தண்டு தொடர்பான காயங்கள், நோவுகள் ஏற்படாமல் தடுக்க இந்த ஹெட்ரெஸ்ட்டுகள் உதவுகின்றன.
வேகமாகச் செல்லும் வாகனம் மோதும் போது, உங்கள் உடல் முன்னே தள்ள, தொங்கிக் கொண்டிருக்கும் உங்கள் தலை திடீரென்று தலை பின்னால் தள்ளப்படுகிறது. அப்போது சரியான இடத்தில் ஹெட்ரெஸ்ட் இல்லாவிட்டால், உங்கள் பின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது, விபத்து நடந்தாலே இந்தக் காயம் ஏற்படும் என்றால், பெருந்தெருவில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் போகும் போது என்ன நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Whiplash injury எனப்படும் கழுத்து நோ விபத்துகளில் அதிகமாக ஏற்படும் காயமாகும்.
எனவே காரில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் உயரத்திற்கு தகுந்தது போல, இந்த ஹெட்ரெஸ்டை சரி செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு முதலில் உங்கள் தலையின் மேற்பகுதியும் ஹெட்ரெஸ்டின் மேற்பகுதியும் ஒரே அளவில் இருக்கக் கூடியதாக ஹெட்ரெஸ்டை உயர்த்துங்கள். ஹெட்ரெஸ்டின் நடுப்பகுதி உங்கள் காதிற்கு சற்று மேலாக இருக்க வேண்டும்.
தலைக்கும் ஹெட் ரெஸ்டுக்குமான இடைவெளி 2 முதல் 4 அங்குலமாக இருக்க வேண்டும். தலை ஹெட்ரெஸ்டில் முட்டிக் கொண்டு இருக்கக் கூடாது.
விபத்து ஏற்பட்டால் உங்கள் தலை தான் ஹெட்ரெஸ்டில் முதலாவதாக முட்ட வேண்டும், கழுத்து அல்ல.
இந்த ஹெட்ரெஸ்ட் வாகனச் சாரதிக்கு மட்டுமல்ல, பயணிகளுக்கும் சேர்த்துத் தான். எல்லோருமே தங்கள் 'தலையைப் பாவித்து' ஹெட்ரெஸ்டை அட்ஜஸ்ட் செய்தால், முன்னெச்சரிக்கை தலை காக்கும்.
You must be logged in to post a comment Login