ஊருக்குப் பணம் அனுப்பி செஞ்சோற்றுக் கடன் தீருங்கள்
நேரங் காலம் தெரியாமல் தூக்கம் கலைக்கும் தாயகத்து உறவுகளின் தொல்லையைக் குறைக்க தாயகம் இணையத் தளத்தில் சர்வதேச நேரங்களைப் பார்க்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றித் தெரிவிந்திருந்தோம். அதனால் பலரும் பயனடைந்து, நிம்மதியாக உறங்குவதாகத் தெரிகிறது.
உறங்கினாலும் தூக்கத்தைக் கெடுக்கும் நினைவுகள் வராமலா இருக்கும்? உறவுகள் உங்கள் மீது அன்பு மிகுந்தா உங்களை நேரங் காலம் தெரியாமல் அழைக்கிறார்கள்? அவர்கள் அழைப்பதெல்லாம் பணம் கேட்டுத் தானே! பணம் வாங்கும் வரைக்கும் துரத்திப் பிடித்து, பணம் அனுப்பிய பின்னால் பணம் கிடைத்ததா என்பதைச் சொல்லக் கூட நேரமில்லாமல் அவர்கள் பிஸியாய் போய் விடுவார்கள். அடுத்த தடவை பணம் தேவைப்படும் வரைக்கும் அவர்களுக்கு உங்களைத் தேவைப்படாது. நிம்மதியாகத் தூங்கலாம்.
என்ன செய்வது, வந்து பிறந்து விட்டோம், பிறவிக் கடனைத் தீர்ப்போம் என்று பணம் அனுப்பப் போனால், டொலரும் யூரோவும் எவ்வளவு போகிறது என்று தெரியாமல் தலையைச் சொறிவீர்கள். அதிலும் அவர்கள் அனுப்பும்படி கேட்ட லட்சக் கணக்கான ரூபாய்களும் டொலரிலும் யூரோவிலும் எத்தனை என்பதைக் கணக்குப் பார்க்கப் போக, பள்ளி நாட்களில் கணக்கு வாத்தியாரிடம் வாங்கிய பிரம்படி ஞாபகம் வரும்.
இந்தச் சிரமம் எல்லாம் இல்லாமல், தமிழர்கள் சொறிந்து வாழும் நாடுகளில் உள்ள நாணயங்களின் பெறுமதி என்ன, நீங்கள் ரூபாய்களில் அனுப்ப வேண்டிய தொகையின் உங்கள் நாட்டு நாணயத் தொகை என்ன என்பதைச் சுலபமாகக் கணக்கிட... Thayagam.com இணையத் தளத்திற்குச் செல்லுங்கள். முதற் பக்கத்திலேயே கீழே செல்ல, பணமாற்று விகிதப் பட்டியல் உண்டு. முதல் வரியில் இலங்கை ரூபாப் பெட்டிக்குள் உங்களைத் தூக்கம் கலைத்த பணத் தொகையை பதிவு செய்யுங்கள். கீழே அதற்குச் சமனான உங்கள் நாட்டுப் பணத்தின் தொகை தெரியும்.
பிறகென்ன... எங்காவது அறா வட்டிக்கு கடன் வாங்கி, பெற்ற கடன், வளர்த்த கடன், வெளிநாடு அனுப்பிய கடன், செஞ்சோற்றுக் கடன் எல்லாம் தீருங்கள்.
சுவடி மாசி 2015
You must be logged in to post a comment Login