இலவச வருமான வரிச் சேவை!
அட, நீங்க ஒண்ணு, இதொன்றும் வியாபாரப் போட்டி விளம்பரமில்லை. வெறும் அட்வைஸ் மட்டும் தான்!
வரி கட்டும் காலக்கெடு நெருங்கி விட்டது. உங்கள் வேலையிடத்தில் கடந்த வருட வருமானத்திற்கான சீட்டுத் தந்திருப்பார்கள். கவனிப்பீர்களாயின், உங்களுடைய மொத்த வருமானமானது, மணி நேரச் சம்பளக் கூட்டுத் தொகையை விட அதிகமாயிருக்கும். காரணம், சம்பளத்தை விட மேலதிக சலுகைகள் கிடைத்திருக்கும். அவற்றை உங்கள் நிறுவன உரிமையாளர் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், எல்லாவற்றுக்கும் நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
உங்கள் நிறுவனம் சகல தொழிலாளர்களுக்கும் ஆயுள், கடும் நோய், விபத்து என்பவற்றுக்கான காப்புறுதிக்கு பணம் செலுத்தியிருந்தால், அந்தப் பணத்திற்கு நீங்கள் வரி கட்ட வேண்டும். ஆனால், பல் சிகிச்சை, உடல் நலம், நீண்ட கால சுகவீனம், மருந்துகள் போன்ற காப்புறுதிக்கு செலுத்தியிருந்தால், அந்தப் பணத்திற்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. சுகவீனமுற்று, குறுகிய கால, நீண்ட கால சுகயீனக் காப்புறுதி மூலம் நீங்கள் பணம் பெற்றிருந்தால், அதற்கான பணத்தை உங்கள் நிறுவனம் செலுத்தியிருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
வருட இறுதியில் உங்கள் சேவையைக் கௌரவித்து, விருதுகளுடன் பணம் மற்றும் போனஸ் தந்தால், அவையும் உங்கள் வருமானமாகவே கருதப்படும்.
ஆயினும், திருமணம், அல்லது சிறந்த தொழிலாளர் விருது ஆகியவற்றிற்காக தரும் பணத்தில் வருடாந்தம் ஐநூறு டொலர் வரைக்கும் வரி இல்லை. (பணம் கிடைக்கும் என்பதற்காக வருடாந்தம் திருமணம் செய்யத் தேவையில்லை!)
உங்களின் மேற்படிப்புக்காக சில நேரம் உங்கள் தொழிலிடத்தில் பணம் தரக் கூடும். ஆனால் அந்த மேற்படிப்பு உங்கள் தொழிலுடன் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே அதற்கு வரி விலக்கு உண்டு. இல்லாவிடில், அது வருமானமாகவே கருதப்படும். உங்கள் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசிலை உங்கள் தொழில் இடம் வழங்கினால், அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
You must be logged in to post a comment Login